"இரண்டாம் பொறி"

"இரண்டாம் பொறி"

(சமூக குறுந்தொடர் )

ரா.பிரபு

"சிறுவாணி குப்பம்"அநேகமாக வரைப்படங்களில் அவ்வளவாக காண கிடைக்காத சிறு கிராமம்.
அந்த கிராமத்தின் பள்ளி மைதானம் இன்று ஞாயிறு என்பதால் பாலைவன பார்வையில் இருப்பது தான் வழக்கம்.
(பள்ளி நாளில் கூட பெரிய மாணவர்கள் கூட்டம் ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம் )
இன்று திடீர் என்று பதின்ம பெண் போல ஆச்சர்ய அலங்காரமாய் பலரை திரும்பி பார்க்க வைத்து கொண்டிருந்தது.
குட்டி திருவிழாவை போல ஊர் மக்கள் உற்சாகமாக கூடி இருந்தார்கள்.
அதோ கூட்டத்தில் ஓரமாய் கண்ணில் ஆனந்த கண்ணீர் உடன் நிற்கும் அந்த விவசாய குடும்பம் ... அது தான் தமிழரசனின் குடும்பம்.

தமிழரசன் .....?????

இதோ கொஞ்ச நேரத்தில் மேடை ஏறி பேச போகும் ஊரின் சமீப கால கதாநாயகன்.
விஞ்ஞானத்தில் அதீத ஆர்வம் கொண்ட மாணவன்..  அவன் கதாநாயகனான காரணம் அவனது சமீபத்திய கண்டுபிடிப்பும் அது திடீரென தமிழ்நாடு பூரா புகழ் அடைந்ததும். அந்த கண்டு பிடிப்பு பற்றி....இதோ  ஒரு நிமிடத்தில்  அவனே சொல்வான்.

நண்பர்கள் சூழ பைக்கில் வந்து இறங்கிய தமிழரசன் கூட்டத்தை பார்த்தான். பக்கத்தில் திரும்பி அவனுடன் நிற்கும் ஒருவனிடம் ஏதோ சொன்னான்.
முகத்தில் மகிழ்ச்சி தூரத்தில் இருந்தே காண முடிந்தது.
அந்த பக்கத்தில் நிற்கும் நண்பன் நிச்சயம் ராகவனாக மட்டுமே இருக்க முடியும். தமிழரசனின் பால்ய கால உயிர் நண்பன்... தோஸ்த்... கூட்டாளி.. பங்காளி... எல்லாமே ராகவன் தான்.
இந்த கிராம மக்கள் கூட்டம் கூட அவன் ஏற்பாடுதான்.
இன்று தமிழரசன் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தமிழகம் முழுதும் அறிந்த ஒருவனாக மாறி இருப்பதில் ராகவனுக்கு முக்கிய பங்கு உள்ளது .

"டேய் மச்சான் அள்ளுதுடா... செம செம
அங்க பார்ரா அங்க பார்ரா... சிறுவாணி குப்பம் பொண்ணுங்க லுக் பூரா உன் மேல தான்... இன்னிக்கு fb ஸ்டேட்டஸ் லைக் பிச்சிக்க  போகுது..... நான் எப்பவும் சிங்கிள் தான் போல.... ஹ்ம்ம் "

ராகவன் கிண்டலை கவனிகாதவன் போல தமிழரசன் நிமிர்ந்து கூட்டத்தை பார்த்தவன்.. ராகவன் சொன்னதில் பொய் ஏதும் இல்லை என்பதை உணர்ந்தான்.
ஆனால் தமிழரசனை பொதுவாக பெண்களின் பார்வையை விட விஞ்ஞானம் அதிகம் கவர்ந்தது.
ஒரே விதி விலக்கு 'வெண்ணிலா '.

பெண்களை அதிகம் நிமிர்ந்து பார்க்காத.... புத்தக புழுவான.. காலேஜில் பசங்கள் மத்தியில் "ரோபோ"
என பெயர் எடுத்த தமிழரசனை காதலிக்கும் அபூர்வ பெண் 'வெண்ணிலா ' காலேஜில் உடன் படிப்பவள்.

மேடையில் ஏறி மைக்கை பிடித்த போது கூட்ட சலசலப்பு அடங்க கொஞ்சம் நேரம் பிடித்தது..
"தங்கராசு உன் பய்யன் கலகரான் யா "
என்று யாரோ அவன் அப்பாவிடம் சொல்லி கொண்டிருந்தார்கள்.

கொஞ்சம் தள்ளி சிகப்பு முண்டாசு அணிந்த வாயில் வெற்றிலை பாக்கு அடங்கிய, கரை வேட்டி கட்டிய , தங்கராசு மேல் வெறுப்பு கொண்ட ஒரு பெரியவர் " இன்னாவாம் இன்னா அப்படி பெரிய வேலை பண்ணிபுட்டானாம் தங்கராசு மகன் " என்றார் வெறுப்புடன் வெற்றிலை சேர்த்து துப்பினார்.

மேடையில் ,
"எனது உயிர் போன்ற ஊர் மக்களுக்கு வணக்கம் " என தொடங்கி ஆரம்ப நேர சம்பிரதாய பேச்சுக்கு பின்...
நண்பன் ராகவன் மைக்கில்
"மதிப்பிற்குரிய நண்பர் தமிழ் உங்க கண்டுபிடிப்பை பற்றி எங்களை மாதிரி பாமரன் களுக்கு புரியும் படி சொல்லுங்களேன் என்றான் "
பிறகு
மைக் சுவிட்ச் ஐ அணைத்து விட்டு
"கலக்கு மச்சான் பயபடாம பேசு " என்றான் அவனுக்கு மட்டும் கேட்கும் படி .

தமிழரசன் மைக்கை பிடித்தான் . ஒரு முறை மைதான வாசலை பார்த்து கொண்டான்.
அதற்க்கு காரணம் இருந்தது . 'அரசு அலுவலர்கள் இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் எப்போ வேணா வருவார்கள் '

தமிழரசன் எனும் பொறியியல் மாணவன் 8 மாதத்துக்கு முன் வெளியே தெரியாத ஒரு சாதாரண மாணவன் தான்.
கல்லூரியின் பொறியியல் பிராஜக்டில் அதிக ஆர்வம் இல்லை அவனுக்கு. காரணம் அவன் சிந்தனை எல்லாம் வேற அளவில் இருந்தது. உலகிற்க்கே பயன்படும் எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசை கொண்டான்.
புதிய எனர்ஜி சோர்ஸ் அவன் நோக்கமாக இருந்தது. கொஞ்ச நாள் கிராபைன் ஐ பிரிக்க முயன்று பார்த்தான். தனி லேயராக அதை பிரிக்க முடிந்தால் பல மேஜிக் பண்ணலாம் என்பதை அவன் அறிவான் உதாரணமாக ஒரு பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டால் பல வருடங்களுக்கு பயன்படுத்தலாம்.
அந்த முயற்சியில் பல விஞ்ஞானிகளை சந்தித்து சில புதிய தனிமத்தை ஆராய்ந்தான் அந்த முயற்சியில் தற்செயலாக ஒன்றை கண்டு பிடித்தான்.

அது ஒரு கிரிஸ்டல்.

அந்த க்ரிஸ்டலை உண்டாக்கிய போது முதலில் அவனாலேயே அவனை நம்ப முடியவில்லை.
24 மணிநேரம் தனித்து ஆற்றலை வெளியிடும் ஒரு கிரிஸ்டல் . 'நாமா இதை கண்டு பிடித்தோம் அடடே இது வேற லெவல் கண்டு பிடிப்பு ஆச்சே.'

ஆரம்பத்தில் அவன் கண்டுபிடிப்பை பற்றி அறியாமல் அலட்சியம் செய்த பலர் அதை பற்றி அறிந்த போது வாயை பிளந்தார்கள்.
எப்போதும் சோசியல் மீடியாவில் கதியாக கிடக்கும் நண்பன் ராகவன் உதவியுடன் அவன் ஓட வைத்து காட்டிய free energy இன்ஜின் ஒரே வாரத்தில் அவனை தமிழ்நாட்டில் பிரபலம் ஆக்கியது.

ஆரம்பத்தில் சில சின்ன சானல்கள் "விலேஜ் விஞ்ஞாணி " மாதிரி புரோக்ராமில் பேட்டி எடுத்து அவனை மேலும் பிரபல படுத்தியது... இது மட்டும் சந்தைக்கு வந்தால் இனி டீசல் பெட்ரோல் வாங்க தேவை இருக்காது என்று புகழ்ந்து தள்ளியது.
இடையில் சில ஸ்பான்சர்கள்...சில பெரிய நிறுவனங்கள் தொடர்பு கொள்ள ஒரு நாள் அரசாங்கத்தில் இருந்து போன் வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அவனுக்கு வழங்க போகும் வாய்ப்பை பற்றி அங்கீகாரத்தை பற்றி சொன்னது.
கடைசியாக அவன் செய்ய வேண்டியது ஒன்று தான். பல இண்டெர்நேஷ்னல் சேனல்கள் இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் ஊருக்கு வர போகிறது. கூடவே சில அரசு அதிகாரிகள் அவர்கள் முன்னால் தனது கருவியை விளக்க செயல்முறை காட்ட வேண்டும். அவ்ளோதான் அதன் பிறகு தமிழரசன் ஒரு அங்கீகரிக்க பட்ட விஞ்ஞானி.

இதோ அவன் பேசுவதை கொஞ்சம் கேட்கலாம்...

" மிக பெரிய மகிழ்ச்சியான தருணம் இன்று . காரணம் அங்கீகாரம் என்பது அனைவருக்கும் கிடைப்பது அல்ல.
நமது நாட்டில் விஞ்ஞானிகளுக்கு பஞ்சம் இல்லை என்பதை அறிவீர்களா? ஆனால் நல்ல கண்டு பிடிப்புகள் ஏதும் வெளியே வருவது இல்லை.
குறிப்பாக பணக்கார முதலாளிகளுக்கு நஷ்டம் உண்டாக்கும் எந்த கண்டுபிடிப்பும் வெளியே வருவதே இல்லை.
ஒரு எளிய உதாரணம் சொல்கிறேன் நீரில் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இருக்கிறது என்பது நமக்கு தெரியும். நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரிக்க முடியும் என்றும் தெரியும் ...ஹைட்ரஜன் ஒரு எரிபொருள் என்றும் தெரியும் பிறகு ஏன் நீரில் ஓடும் வாகனம் இன்னும் கண்டு பிடிக்க பட வில்லை ??
நமது நாட்டில் ஆங்காங்கே சாதாரணமாக மாணவர்களே இதை கண்டுபிடித்து கொண்டுதான் இருக்கிறார்கள் எதுவும் வெளியே வருவது இல்லை.
ஆனால் எனது இந்த கிரிஸ்டல் ... இந்த விதியை மாற்றும். இது வேறு விதமான யாரும் கண்டுபிடிகாத புத்தம் புதிய தொழில்நுட்பம் "

மூச்சு விடாமல் பேசி நிறுத்தி கூட்டத்தை பார்த்தான். கூட்டம் கவனம் முழுக்க தன் மேல் இருப்பதை கவனித்தான்.
பக்கத்தில் ராகவன் எழுந்து

" அதென்ன கிரிஸ்டல் அதை பற்றி சுருக்கமா சொல்ல முடியுமா "

தமிழரசன் மீண்டும் மைக்கை எடுத்தான்.

" இதன் பார்முலா இப்போது சொல்ல முடியாது என்றாலும் இது செயல்படும் விதத்தைப் பற்றி எளிமையாக சொல்கிறேன் இது மிகவும் எளிமை.
இதற்கென்று தயாரிக்கப்பட்ட பிரத்தியேக இன்ஜினில் இந்தக் க்ரிஸ்டலை பொறுத்த வேண்டும் அவ்வளவுதான். இன்ஜினை தொடர்ந்து இயக்கும் ஆற்றலை இந்த கிரிஸ்டல் கொடுக்கும். கதிரியக்கத் தன்மை வாய்ந்த அதேசமயம் ஆபத்தற்ற இந்த கிரிஷ்டலுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்றாலும் இப்போதைக்கு இதை எனர்ஜி கிரிஸ்டல் என்று அழைக்கலாம்"

இதை சொல்லி முடித்தபோது வாசலில் ஒரு திடீர் பரபரப்பு.
அரசு வாகனங்கள் தொலைக்காட்சி வாகனங்கள் உள்ளே நுழைவதை பார்க்க முடிந்தது.
தமிழரசன் வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கத் தொடங்கியது.
ஊர் மக்களுக்கிடையில் சந்தோஷமான ஒரு மெல்லிய ஆர்ப்பரிப்பு ஆரம்பித்திருந்தது.
'இதோ இன்னும் சில நிமிடங்களில் நமது ஊரை சேர்ந்த ஒருவன் உலகம் முழுக்க புகழ் அடையப் போகிறான். '

சரியாக அப்போதுதான் திடீரென்று கொஞ்சம் காட்சி மாறியது

அந்த வாகனங்களுக்கு பின்னால் காவல்துறை வாகனம் உள்ளே நுழைந்த போது தமிழரசன் முகத்தில் குழப்பம் சூழ்ந்தது.

"போலீஸ் எதுக்கு ....."

அவன் யோசனையில் ஆழ்ந்திருந்த போது சுற்றி சேனல் காரர்களின் கேமராக்கள் தங்கள் கண்களை திறந்து விட்டு இருந்தது.

விரைவில் மேடை ஏரிய போலீஸ்
அணைத்து டிவி சேனல் முன்னிலையிலும் ...
அணைத்து ஊர் மக்கள் முன்னநிலையிலும் ...
அவன் நண்பன் முன்னிலையிலும்...
அவன் பெற்றோர் முன்னிலையிலும்...

"உங்களை கைது பன்றோம் மிஸ்டர் தமிழரசன்... உங்கள் மேல் மோசடி புகார் வந்துள்ளது. மேலும் நாட்டுக்கு அச்சுறுத்தும் கண்டு பிடிப்பை நீங்கள் வைத்து இருப்பதாகவும் புகார் வந்துள்ளது. தீவிர வாதிகளுடன் உங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம் "
என்றார்கள்.

தமிழரசன் இதயம் ஒரு வினாடி துடிக்க மறந்தது.


தொடர்ச்சி அடுத்த பாகத்தில்.........

☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

#இரண்டாம்_பொறி

(பாகம் 2 )

நடப்பதை உள்வாங்கிக்கொள்ள தமிழரசனுக்கு சில வினாடிகள் பிடித்தது.
கொஞ்சம் நேரம் கழித்து சுதாரித்து..

" இன்ஸ்பெக்டர் என்ன சொல்றீங்க இது ஒரு அற்புத கண்டுபிடிப்பு உலகிற்குப் பயன்பட போகும் கண்டுபிடிப்பு . இதில் என்ன மோசடி இருக்க முடியும் தீவிரவாதிகளுடன் தொடர்பா.. என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலை" என்றான்.

அதற்கு அந்த காக்கி சுருக்கமாக
" தம்பி எதுவா இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து பேசிக்க" என்றார்.
ஏதோ செலுத்தப்பட்ட வரை போல கடமையே கண்ணாக இருந்தார்.
கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டு "என்னவாம் " என்று புரியாமல் தங்களுக்குள் பேசி கொண்டனர்.

சற்று நேரத்தில் போலீஸ் வாகனத்தில் தமிழரசன் ஏற்ற பட்டான்.
தூரத்தில் ராகவன் யாருக்கோ பதட்டமாக போன் செய்வது தெரிந்தது.

அந்த சிகப்பு முண்டாசு கட்டிய வாயில் வெற்றிலை பாக்கு போட்ட கரை வேட்டி கட்டிய அவர் நமட்டு சிரிப்புடன்
" யோவ் தங்கராசு மகன் ஏதோ தீவிரவாதியாம் பா " என்று சொல்லி நகர்ந்தார்.

தமிழரசன் போலீஸ் வாகனத்தில் ஏறுவதற்கு முன்
" ஓடியாங்க யாராவது தண்ணி கொண்டு வாங்க தங்கராசு மயக்கம் போட்டு விழுந்துட்டாரு "
என்று ஒரு குரல்  கூட்டத்தின் மத்தியில் இருந்து வந்ததை கேட்டான்.

    ✴                ✴               ✴               ✴

தனக்கு இதுவரை பழக்கமில்லாத ,தான் நேரில் கண்டிராத போலீஸ் ஸ்டேஷன் தமிழரசனுக்கு ஒரு வகை ஒவ்வாமையை ஏற்படுத்தி இருந்தது.
அப்பாவும் ராகவனும் இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது.

"என் பையன் என்னங்க தப்பு பண்ணான் நேத்து கூட கவுர்மெண்ட் ஆபிசர் யாரோ பேசினாங்க அய்யா அவனுக்கு பெரிய வாய்ப்பு தர போறதா சொன்னாங்க " என்று தங்கராசு அப்பாவியாய் விளக்கி கொண்டு இருந்தார்.

அந்த போலீஸ் ஒரு நக்கல் சிரிப்புடன்

"யாரு... இவரை கவுர்மெண்ட் ஆபீசர் கூப்பிட்டு பேசராங்களா  .. யாரவது மாவோஸிட் அழைத்து பேசி இருப்பான்
...யோவ் உன் பய்யன் என்ன கண்டுபிடித்திருக்கிறான் தெரியுமா அது ஒரு பயங்கர ஆயுதம் அதை வைத்து ஊரையே அழிக்கலாம் அதை மாவோயிஸ்டுக்கு விக்க இருந்தான் உன் பையன் "

" என்னையா சொல்றீங்க இப்படி எல்லாம் யார் சொன்னது" என்று தங்கராசு பதற...

" யோவ் சும்மா கத்தாதையா  எல்லா மீடியாவும் தான் சொல்லுது.... "
என்று சொல்லிவிட்டு தனது கையிலிருந்த செல்போனை ஆன் செய்து அதில் செய்தியை வைத்து கட்டினார் முதலில் ஒரு செய்தியில் சென்னையிலிருந்து மதுரைக்கு போடப்பட போகும் ரயில் மேம்பாலம் பற்றிய செய்தி சொல்லி கொண்டு இருந்தார்கள்.
அதாவது இப்பொழுது இருக்கும் ரயில் பாதைக்கு மேலேயே ஒரு மேம்பால ரயில் பாதையும் அதில் அதி வேக ரயிலை விடும் திட்டம் ஒன்றும் விரைவில் தொடங்கப்பட இருந்தது.
இன்ஸ்பெக்டர் அந்த செய்தியை மாற்றிவிட்டு வேறு சேனல் வைத்தார் அதில்,

" பயங்கர ஆற்றலை வெளிப்படுத்தி வெடிக்கக் கூடிய புதியவகை ஆயுதத்தை கண்டு பிடித்த சிறுவாணி குப்பதை சார்ந்த மாணவன் பிடிபட்டான். அவனுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடந்து கொண்டுள்ளது" என்ற செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்கள்

" சீக்கிரம் கேசை முடிச்சிட்டு உன் பையனுக்கு கிட்டதட்ட ஒரு பத்தாண்டுகள் வரை சிறை கொடுத்துடு வாங்க கவலப்படாத "

என்று  இன்ஸ்பெக்டர் சொல்வதைக் கேட்டு தமிழரசன் அதிர்ந்தான்.
தன்னைப் பற்றி மட்டும் இல்லாமல் தன்னுடைய கண்டுபிடிப்பையும் தவறாக சித்தரித்து பேசியது அவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

" ஏன் இப்படி எல்லாம் செய்கிறார்கள் நான் என்ன தவறு செய்தேன் இப்படி தப்பு தப்பாக என் மேல் புகார் கொடுத்தவர்கள் யார் "

தமிழரசனுக்கு வெண்ணிலா நினைவுக்கு வந்தாள். இன்நேரம் செய்தியை பார்த்து இருப்பாள் இல்ல ..
தன்னை பற்றி என்ன நினைப்பாள்..?

   ✴                ✴               ✴               ✴

அதன் பிறகு வந்த சில நாட்கள் தேவை அற்ற விசாரணைகள் ..கேள்விகள்.. அலைச்சல்கள் என்று நகர்ந்தன.
ராகவன் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் meme போட்டு விழிப்பை ஏற்படுத்தினான்.
பலர் ஆதரவாக ஷேர் செய்ய..
 பலர்....

" தீவிர வாதிக்கு உதவி  பண்ற சமூக விரோதிய கைது பண்ணதான் செய்வாங்க இதில் என்ன தப்பு  அவனை எல்லாம் கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும் " என்று கருத்துகளை பகிர்ந்து இருந்தார்கள்.

ராகவன் தனக்குத் தெரிந்த சட்ட நுணுக்கங்கள் அறிந்த நண்பர்களின் உதவியை நாடியிருந்தான்.
விரைவில் அவனை வெளியே எடுத்து விடுவதாக தமிழரசனுக்கு தைரியமூட்டினான்.

தீடீரென ஒரு நாள் ....
இன்ஸ்பெக்டர் ..

"தம்பி நீ போகலாம் உன்ன விட சொல்லிடாங்க  "என்றார்.

    ✴             ✴               ✴               ✴

அந்த போலிஸ் ஜீப் சீரான வேகத்தில் போய் கொண்டிருந்தது..
தமிழரசன் குழப்பத்தை குடித்தவனாய் இருந்தான்.
'என்ன நடந்தது... என்ன நடக்கிறது '
'தீடீரென என்னை பிடிக்கிறார்கள் திடீரென விடுகிறார்கள் அதுவும் போலீஸ் ஜீப்பில் டிராப் செய்கிறார்கள் .'

எங்கோ ஒரு ஒதுக்குப்புறமான கரடுமுரடான சாலையில் ஓரமாக ஜீப் நின்றது.

"தம்பி இறங்குங்க இங்க இருந்து இறங்கி வீட்டுக்கு போங்க... "

தமிழரசன்  மேலும் குழம்பினான்...
"இது என்ன இடம் இதற்க்கு நீங்க ஸ்டேஷன் ல யே விட்டு இருக்கலாமே"

ஜீப்பில் இருந்த ஒரு வயதான பொலிஸ் கான்ஸ்டபிள்,
" தம்பி உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது... ஒண்ணு சொல்லட்டா நாங்களாக எதையும் செய்வதில்லை மேலே இருந்து வரும் உத்தரவை பின்பற்றுகிறோம் அவ்வளவுதான்..
சில நேரம் சில பேரை பிடிக்க சொல்வார்கள் சில நேரம் சில பேரை விட சொல்வார்கள்.
நாங்கள் என்ன ஏது என்று ஒரு அளவுக்கு மேல் கேட்க முடியாது மீறி கேட்டால் வேலையில் இருக்க முடியாது.
உடம்ப பாத்துக்கோபா "

என்று கனிவான குரலுடன் சொல்லிவிட்டு நடந்தார். ஜீப் கண்ணை விட்டு மறைந்த பின் தான் அதை கவனித்தான் ..
ஆளரவமற்ற சாலையில் அலாவுதீன் பூதம் போல அந்தக் கார் எங்கிருந்து முளைத்தது.
கொஞ்சம் பெரிய சைஸ் வெளிநாட்டுக்கார் .
அதன் கருப்பு நிற கண்ணாடிகள் அனைத்தும் ஏற்றப்பட்டிருந்தன.
கார் சப்தமில்லாமல் நழுவி அவன் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய இருவர் WWE ஐ விட்டு நேரே இங்கே வந்தவர்கள் போலிருந்தார்கள்.
அதில் ஒருவன்
"கார்ல ஏறு " என்றான் சுருக்கமாக .
கோட்டில் கையை விட்டு 'அதை ' எடுத்தான்.

அவர்களிடம் 'யார் நீங்க எல்லாம் 'என்று கேட்டு கூச்சல் போடும் மனநிலையில் இருந்த தமிழரசன் அவன் கோட்டிலிருந்து வெளியே எடுத்த அந்த
Glock .45  ரக கைத்துப்பாகியை பார்த்து வாயடைத்து போனான்.

துப்பாக்கி அவன் வாழ்நாளில் நேரில் பார்ப்பது இதுதான் முதல்முறை.
மறுவிநாடி மந்திரித்த ஆடு போல அமைதியாக அந்த காரில் ஏறினான்.
அவன் கண்கள் கட்டபடும் என்று அவன் உள்மனம் சொல்லியது . அவர்கள் அவனுக்கு கண்ணில் ஒரு கூலிங் க்ளாஸ்  டைப் கண்ணாடியை அணிவித்தார்கள்.
'எனது கண்களை கட்ட போவது இல்லையா ' என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே அந்த கூலிங் கிளாசை அணிந்த போது தான் அது புரிந்தது.
அது அடுத்த பக்கத்தில் இருப்பதை பார்க்க முடியாத விசேஷ கண்ணாடி.
சொல்லப்போனால் அது கண்ணாடியே அல்ல கண்ணை மறைக்கும் கண்ணாடி மாதிரியான வெறும்  பிளாஸ்டிக்.

கார் இப்படியே எவ்வளவு நேரம் பயணம் செய்தது எங்கே பயணம் செய்தது என்று தெரியாது.
 திடீரென்று ஏதோ ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு அவர்கள் இறங்கினார்கள். அவனை அழைத்துக் கொண்டு எங்கோ சென்றார்கள். தன்னை சிறிது தூரம் படிக்கட்டில் அழைத்து சென்று பிறகு லிப்ட் இல் எங்கோ அழைத்துச் செல்வது புரிந்தது.

கண்கள் திறக்க பட்ட போது ஒரு பெரிய ஹாலில் தான் இருப்பது தெரிந்தது. அறை ஒரே அரைகுறை இருட்டாக சத்யஜித்ரே வின் பிரேம் போல இருந்தது.  தனக்கு முன்னால் நிழல் உருவமாக ஒரு கோட் போட்ட ஆசாமி இருந்தான். சம்பந்தம் இல்லாமல் இருட்டில் கருப்பு கண்ணாடி அணிந்து இருந்தான். வாய் அலட்சியமாக ஏதோ சூயிங்கம் ஐ மென்று கொண்டு இருந்தது.
 அவனை வாழ்நாளில் தமிழரசன் எங்காவது பார்த்து இருக்கிறானா என்று நினைவு அடுக்கில் அலசி பார்த்தான் "இல்லை " என்றது மூளை.

தமிழரசன் ஒரு இருக்கையில் அமர வைக்க பட்டான்.

இவனை உற்று பார்த்து"இவன் தானா அவன் " என்று கேட்டு உறுதி படுத்தி கொண்டான் கோட் ஆசாமி . பிறகு பின்னால் இருட்டில் பார்த்து "ம் " என்று சைகை செய்தான்.
தீடீரென மீண்டும் இரண்டு முரட்டு ஆசாமிகள் இருட்டில் இருந்து
வெளிப்பட்டார்கள்  இவனை  இருக்கையில் அழுத்தி இரண்டு கைகளையும் இறுக்கிப் பிடித்துக் கொள்ள...
மூன்றாவதாய் துப்பாக்கியுடன் வந்த ஒருவன் ....
தமிழரசன் என்ன ஏது என்று யோசித்து முடிப்பதற்குள் சரியாக... மிகச்சரியாக அவனது நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து..........

தமிழரசன் யோசித்து முடிப்பதற்குள் டப்பென்று துப்பாக்கி விசையை இழுத்தான்.

தொடர்ச்சி அடுத்த பாகத்தில்..........

☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

#இரண்டாம்_பொறி

(பாகம் 3 )

ராகவன் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருந்தான்.
சமீப காலமாக" முதல் பொறி "என்ற ஓரு FB பேஜ் ஐ உண்டாக்கி அதில் தனது நண்பன் தமிழரசனுக்கு நடக்கும் அநீதி பற்றி தொடர்ந்து பதிவுகள் போட்டு இருந்தான். ஒத்த கருத்து உடைய புரட்சி சிந்தனை கொண்ட பலரை "முதல் பொறி "மூலம் இணைத்து கொண்டு இருந்தான்.

FB யில் அதிகமாக , விரைவில் திறக்க பட போகும் சென்னை டு மதுரை மேம்பாலம் பற்றிய செய்திகள் இடம் பெற்று இருந்தன.
'முதல் பொறி'யும் மேலும் பல பேஜ் களும் அந்த திட்டத்தை கடுமையாக சாடி இருந்தார்கள்.
இருக்கிற ரயில்களை பாதைகளை ஒழுங்கு பண்ணாவே போதுமே .. இதென்ன முட்டாள் தனமான திட்டம் சென்னையில் இருந்து மதுரைக்கு ஏற்கனவே இருக்கும் பாதையில் மேலே மேம்பால பாதை அதில் அதிவேக ரயில் இப்ப தேவையா ?சுத்த பைத்திய கார தனமான திட்டம் இது என்று தமிழகம் முழுக்க எதிர்ப்பு குரல் வலுத்து கொண்டிருந்தது.

இன்னும் சில மாதங்களில் பிரதமர் நேரடியாக வந்து பாலத்தை திறந்து வைக்க முதல் ரயில் வெள்ளோட்டம் நடக்க இருக்கும் தேதி நவம்பர் 19 என்று இப்போதே அரசு வெளியிட்டு இருந்தது.

"கான்ட்ரெக்ட்டர் தொடங்கி.. மந்திரி வரை கமிஷன் வந்தா போதும் எந்த திட்டத்தையும் தமிழ் நாட்ல கொண்டு வருவீங்க " என்று கடுமையாக சாடி 'முதல் பொறி' பேஜ் இல் கட்டுரை ஒன்றை ராகவன் எழுத தொடங்கிய போது தான் போன் ஒலித்தது.

"ஹலோ ..
ஆமாம்... ராகவன் தான் பேசறேன்...
ஆமாம்... சொல்லுங்க சார் என்ன விஷயம்..
என்னது வெளிய விட்டாச்சா .. எப்போ சார் ?? இன்னும் தமிழ் வீட்டுக்கு வந்து சேரலையே "
என்றான் கொஞ்சம் பதட்டத்துடன்.

     ✴             ✴               ✴               ✴

எங்கே என்று தெரியாத அந்த மர்ம இடத்தில்....

தமிழரசன் என்ன ஏது என்று யோசித்து முடிப்பதற்குள் சரியாக... மிகச்சரியாக அவனது நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து..........

தமிழரசன் யோசித்து முடிப்பதற்குள் டப்பென்று துப்பாக்கி விசையை இழுத்தான் அவன்.

தமிழரசன் அதிக பட்ச டெசிபலில் அலறினான்.
தோட்டா இல்லாத துப்பாக்கி " கிளிக் " என்றது.
அவர்கள் வரலாற்றின் மிக சிறந்த ஜோக்கை கேட்டதை போல சிரித்தார்கள்.

"என்ன தம்பி பயந்துடியா " என்றான் கோட் ஆசாமி.

"யா...யார் நீங்க எல்லாம் " என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டான் தமிழரசன்.

" என்னை எப்படி என்று அறிமுகப்படுத்துவது... ஒரு காஸ்டலி காண்ட்ரேக்டர் னு வச்சிக்கலாமா ..ம்ம்ம்  சொன்னால் உனக்கு புரியாது வேணும்னா பெரும் முதலாளிகளின் கைக்கூலி னு வச்சிக்கோ "

"உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும் "

"நீ உன் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு இதையெல்லாம் மூட்டை கட்டி வைக்க வேண்டும் " என்றான் அவன் சத்தமாக அழுத்தமாக

"நான் என்ன தவறு செய்தேன் நாட்டுக்கு நல்ல.............."

அவன் பேச்சை பாதியில் வழிமறித்த கோட் ஆசாமி..

"உன் கிட்ட அதிகம் பேச விருப்பம் இல்லை இங்க பாரு... கண்டு பிடிப்பு என்ற பெயரில் எங்கள் பெரும் முதலாளிகளுக்கு ஆப்பு வைக்க பார்ப்பவன்... சுய சார்பு கொள்கை பேசி எங்கள் வெளிநாட்டு முதலாளிகளுக்கு தொல்லை கொடுப்பவன் ..இயற்கை வழி மருத்துவம் இயற்கை வாழ்வியல் னு கிளம்பி வந்து பெரும் வனிகத்துக்கும் மருத்துவ வணிகதிர்க்கும் அச்சுறுத்தலாய் இருப்பவன் இவர்களை எல்லாம் தேடி பிடித்து....  அவர்களை அடக்குவது அடங்க மறுத்தால் அவர்களுக்கு ஏமாற்றுக்காரன் , தீவிரவாதி ..சமூக விரோதி என பட்டம் கட்டுவது .. அவ்வளவு ஏன் தேவை பட்டால் அவர்களை கொலை செய்வது இதான் எனக்கு தர பட்ட வேலை புரிதா இப்ப நான் யார் னு .
உங்க அரசாங்கத்துல இருக்குற பெரிய பெரிய மந்திரிகள் எல்லாம் எங்க கட்டுப்பாட்டில்தான் இருக்காங்க தெரியுமா " என்றான்.

பிறகு அவனை நெருங்கி வந்து அவன் முகத்துக்கு அருகில் குனிந்து
"நீ இப்ப சொல்ல வேண்டியது ஆம் இல்லை இவற்றில் ஏதாவது ஒன்றை தான். இதைத் தவிர எதுவும் உன் வாயிலிருந்து வரக்கூடாது "என்றான்

"சொல் இதை நிறுத்துகிறாயா இல்லையா " என்றான்...
" இம்முறை உன்னை குறி பார்க்கும் துப்பாக்கியில் தோட்டா உள்ளது " என்றான்.

மிக கடினமான 4 நொடிக்கு பின்
"ஆம் நிறுத்தி கொள்கிறேன் " என்றான் தமிழரசன் அடிபட்ட குரலில்.

"அவ்ளோ தான் .... குழந்தையை கொண்டு போய் விட்டுட்டு வாங்கடா "  என்றான் கட்டளையாக கோட் ஆசாமி.
தோளில் நட்பாக தட்டிக் கொடுத்தான்.

    ✴             ✴               ✴               ✴

அதற்க்கு பிறகு வந்த நாட்கள் மிக கடுமையான நாட்கள்.
தமிழரசன் தனது ஆய்வறிக்கைகளை லாக்கரில் வைத்து பூட்டிய நாட்கள்.
கல்லூரியில் அவ்வப்போது பல பேரால் தீவிரவாதி என அவமானப்படுத்தப்பட்ட நாட்கள்.
வெண்ணிலா தன்னிடம் மற்றவர்கள் பார்க்கும் போது பேசத் தயங்கிய நாட்கள்.
ஊரில் சிலர் அப்பாவிடம் "உன் பையனுக்கு தீவிர வாதிங்க கூட தொடர்பு இருக்காமே "என்று கேட்டு கலாய்த்த நாட்கள்.
தனது கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு நிற்க நேர்ந்த நாட்கள்.
விரக்தி அதிகமாகி ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்று ராகவனால் காப்பாற்ற பட்ட நாட்கள்.

     ✴             ✴               ✴               ✴

கடினமான பல மாதங்களுக்கு பின் ஒரு நாள் மாலை .....
வாட்ஸ் அப் இல் செய்திகளை பார்த்து கொண்டிருந்தான் தமிழரசன்.
இரண்டு செய்திகள் வந்து இருந்தன ஒன்று ராகவனிடம் இருந்து...
"மச்சான் ஒரு சின்ன உதவி ..." என தொடங்கி இருந்தது ..
இன்னொன்னு வெண்ணிலாவிடம் இருந்து வந்தது... " மன்னிக்கவும் ...." என்று தொடங்கி இருந்தது...
முதலில் வெண்ணிலாவை படிதான் தமிழரசன் ..

" மன்னிக்கவும் நான் எப்பொழுதும் உங்களை முன்பு போல விரும்பி கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் என்னைப் பற்றி நான் முன்பே உங்களிடம் கூறியிருக்கிறேன் நான் எனது பெற்றோரின் சம்மதம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டேன். அவர்கள் உங்களிடம் நான் பழகுவதை விரும்பவில்லை.
இப்போது எனது பெற்றோர்கள் தனக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார்கள் நவம்பர் 28 திருமணம்..என்னால் அதை மீற முடியாது மன்னிக்கவும்."

தமிழ் அரசனைக் அந்த வாட்ஸ் அப் செய்தி பெரிதாக பாதித்ததாகத் தெரியவில்லை. அவனுக்கு இப்போதெல்லாம் எல்லாமே மறத்து போன நிலையில் இருந்தான்.
ஒரு நடை பிணம் போல.

தமிழரசன் தேதியை பார்த்தான் நவம்பர் 18 .
நாளைக்கு நவம்பர் 19 .. அட பிரதமர் புது மேம்பால திட்டத்தை நாளை மாலை 5 மணிக்கு தொடங்க போகும் நாள்.

      ✴             ✴               ✴               ✴

அடுத்த நாள் அதிகாலை .....
இன்று மாலை ரயில் விட பட போகும் அந்த மேம்பால பாதையில் ஆள்அரவமற்ற ஒரு இடத்தில்  அந்த பாலத்தின் முக்கிய பகுதி ஒன்று பெரும் வெடி மருந்து சக்தியுடன் வெடித்து சிதறியது.


தொடர்ச்சி அடுத்த பாகத்தில் .........


☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸

#இரண்டாம்_பொறி

(பாகம் 4 )

அந்த ஆள் அரவமற்ற இடம் இதுவரை இவ்வளவு கூட்டத்தை ஒன்றாக சேர்ந்து பார்த்ததில்லை என்பதால் அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று ஆச்சரியமாக கூட்டத்தை நோக்கி தலையை நீட்டி பார்த்துக் கொண்டிருந்தது.
வெடிகுண்டு வெடித்த இடத்தில் ஈக்களைப் போல போலீஸ் மொய்த்து கொண்டிருப்பது தெரிந்தது.

" மேலிடத்துல போட்டு தாக்குகிறார்கள் கண்டுபிடி கண்டுபிடி என்றால் என்னத்த கண்டுபிடிப்பது...  மொத்த பாலத்திற்குமா போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியும்.."

என்று ஒரு போலீஸ் புலம்பிக் கொண்டிருந்தார்.
அந்த பாலத்தின் பக்கத்தில் தடயத்தை தேடி தேடி களைத்துப் போனார்கள்
ஆனால் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் தமிழ்நாடு போலீஸ் தனித் திறமை மிக்கவர்கள் என்பது மறுக்க முடியாது.
கூடிய சீக்கிரத்திலேயே அந்த அசத்தலான க்ளூ வை கண்டுபிடித்தார்கள்.

பாலத்திற்கு இருபக்கமும் முதலில் இருந்த டோல்கேட்டில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தார்கள்.
அதிகாலை நேரம் கடந்து சென்ற வாகனங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு தான் என்பதால் அந்த
தலையில் ஹெல்மட் அணிந்த ... அதிகாலை அங்கே கடந்து சென்ற அந்த பைக்கை படம் பிடித்து எடுத்தார்கள் . அதன் நம்பர் பிளேட்டை ஆராய்ந்தார்கள். அதன் முதலாளி யார் என்று கண்டுபிடித்தார்கள் அணைத்து ஸ்டேஷனுக்கும் அந்த புகை படத்தை அனுபினார்கள். அந்த முகவரிக்கு கைது செய்து வர ஆட்களை அனுப்பினார்கள்

" அட இவனா ....நம்ம பழைய விருந்தாளி " என்றார் அந்த இன்ஸ்பெக்டர் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து கொண்டு.
அந்த புகைப்படத்தில் இருந்தது 'தமிழரசன் .'

      ✴             ✴              ✴              ✴

தனது வீட்டில் தமிழரசன் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட போது அந்த சிகப்பு முண்டாசு அணிந்த வெற்றிலை போட்ட ..கறைவேட்டி காரர்
" நான் அப்பவே சொல்லல இவன் தீவிரவாதி னு... இதோ பார் இன்னைக்கு ஆதாரத்தோடு பிடிச்சிட்டாங்க " என்று யாரிடமோ சொல்லிக்கொண்டு இருந்தார்.

காவல் நிலையத்தில்
"என்ன ஆதாரத்துல என்ன கைது பண்ணிங்க அந்த வெடிகுண்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் " என்று கேட்ட தமிழரசனுக்கு அந்த cc டிவி காட்சி காட்ட பட்டதும் வாய் மூடி அமைதியானான்.

குற்றவாளிகளை உடனே கைது செய்து விட்டதை நினைத்து காவல்துறை மகிழுந்து கொண்டிருந்த போது
அன்றைக்கு மதியும் யாரும் எதிர்பாராத அந்த நிகழ்வு நடந்தது.

அந்தப் பாலம் வேறொரு இடத்தில் வெடித்து சிதறியது.
அதைத் தொடர்ந்து ஒரு குறுஞ்செய்தி இன்ஸ்பெக்டரின் போன் இல்  வந்தது

" என்ன இன்ஸ்பெக்டர் அந்தப்பக்கம் பைக் எடுத்துட்டு போன அப்பாவியை  எல்லாம் பிடிச்சு வச்சு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க போல முடிஞ்சா வந்து என்ன பிடிங்க "

இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியுடன் யோவ் இவனை அனுப்பி விடுய்யா திரும்பி கூப்பிடும் போது வரணும். என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
தனக்கு செய்தி அனுப்பிய நம்பரை ட்ரேஸ் பண்ண விரைந்தார்.

     ✴             ✴               ✴               ✴

அந்த அதிகம் நடமாட்டமில்லாத ரெஸ்டாரென்டில் ஒரு மூலையில் அமர்ந்து இருந்தார்கள் தமிழரசனும் ராகவனும்.

தமிழரசன் வருத்தமும் கோபமும் கலந்த குரலில் சொன்னான்

" நேற்று மாலை நீ .. 'மச்சான் எனக்கு ஒரு சின்ன உதவி ...உன் பைக் வேணும் பக்கத்து ஊர் போயிட்டு வரேன் ' னு மெசேஜ் பண்ணி இருக்கும் போது நீ இப்படி ஒரு மகா பாதகத்தை செய்ய போறேன்னு தெரியாது "
என்றான். .
பக்கத்தில் வைக்க பட்ட டீ தொட படாமல் ஆறி கொண்டிருந்தது ...

ராகவன் சாவகாசமாக டீயை உறிஞ்சி கொண்டு சொன்னான்
" இப்ப என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன் பாலத்துக்கு பாம் வச்சேன் அவ்வளவுதானே " என்றான்.

" என்னடா இப்படி சாதாரணமா சொல்ற அரசாங்கத்தில் மேல் கோபம் இருப்பவனெல்லாம் தீவிரவாத செயலில் ஈடுபட வேண்டும் என்றால் நாடே தீவிரவாதியாக  தான் இருக்க வேண்டும் ... ஏனென்றால் நாட்டில் 90 சதம் பேர் அரசாங்கத்தின் மேல் கோபம் கொண்டவர்கள் ...அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான் .
ஒன்னு புரிஞ்சிக்க சில கேவலமான அரசியல் வாதிங்க பண்ற செயலால் மொத்த அரசின் மேல் கோபம் கொள்வதை விட முட்டாள் தனமான செயல் வேறு ஏதும் இல்லை. அவ்வளவு ஏன் பலவகையில் மறைமுகமாக அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட நானே அமைதியாக தானே இருக்கிறேன்."
என்றான்.

ராகவன் கிளாஸை கீழே வைத்து விட்டு
" மச்சான் தனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மட்டுமே போராடுகிறவன் சுயநலவாதி , ஊருக்காக போராடுகிறவன் போராளி ... நான் போராளி " என்றான்.

"இல்லை நீ தீவிர வாதி "

"ஹா ஹா அது இந்த உலகம் உனக்கு கொடுத்த பட்டம் மிஸ்டர் தமிழ் "

"தீவிர வாதம் ஒரு போதும் வழி ஆகாது... உன்னை நண்பன் னு சொல்லிக்க வெக்கமா இருக்கு "

"இங்க பாரு தமிழ்... நீ நண்பன் னு சொல்லு இல்ல என்னை எதிரியா கூட நினைச்சிக்கோ ஆனா இதான் என் பாதை நான் முடிவு பண்ணிட்டேன்.
உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன் ..
நான் ஆரம்பித்த "முதல் பொறி" குழு இப்ப ஒரு ரகசிய குழுவாக உறுஎடுத்து உள்ளது . எங்கள் இயக்கம் விரைவில் பல வேலைகள் செய்ய இருக்கிறது இனி என்னுடன் நட்பை குறைத்து கொள்வதே உனக்கு நல்லது "

அவனை தீர்க்கமாக நிமிர்ந்து பார்த்தான் தமிழ் பிறகு உறுதியான குரலில் சொன்னான்

"அப்படினா நான் சொல்றதை கேட்டுக்கோ.. நீ தீவிர வாத பாதையை தேர்ந்தெடுத்து இருப்பாயேயானால் .. நான் அறவழி போராட்டத்தை முன்னெடுக்க போகிறேன். உன்னுடைய முதல் எதிரி நானாக தான் இருப்பேன். நாட்டை வெறுப்பவன் எனக்கு நண்பனாக இருக்க முடியாது.
உன் பாதை தவறு என்பதை நான் நிரூபித்து காட்டவேன்.
என்னுடன் இணையும் நண்பர்களை வைத்து அறவழியில் சாதித்து காட்டுவேன். இதே ஊருக்கு முன்னால் எனது கண்டுபிடிப்பை நிரூபிப்பேன். எனது கண்டுபிடிப்பு மக்களுக்கானது என்பதை ஊருக்கே காட்டுவேன். அவர்களை கொண்டாட வைப்பேன். ஒரு நாள் உன் பாதை தவறு என்பதை நிரூபிப்பேன் "
என்றான்.

"அப்படி என்றால் இன்றிலிருந்து நமது பாதைகள் வேறு ...
சில ஆண்டுகள் கழித்து சந்திப்போம் யார் பாதை சரி என்பதை காலம் நமக்கு காட்டும் அந்த விடைக்கு காத்திருப்போம் "
என்றான்.

"இதான் நம்ம கடைசி மீட்டிங்... டீ க்கு காசு கொடுத்துட்டு போ என்கிட்ட காசு இல்ல "
என்று சொல்லி விட்டு முடிவில்லா இலக்கு நோக்கி நடக்க தொடங்கினான்.
ராகவன்.

கொஞ்ச நேரம் பாரமான மனதுடன் அமர்ந்திருந்து பின் உறுதியான முடிவோடு எழுந்தான் தமிழரசன் .
தனது அறவழி இயக்கத்திற்கு மனதில் பெயரை சூட்டினான்.

" இரண்டாம் பொறி "


முற்றும்.


பின் குறிப்பு :

பல ஆண்டுகள் கழித்து அவர்கள் சந்தித்த போது யார் பாதை சரியாக இருந்தது என்பதை அவர்களுக்கு காலமும்.. உங்களுக்கு உங்கள் கற்பனையும் பதில் சொல்லட்டும் என்று விட்டு வைக்கிறேன்.
























Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"