"Perpetual machine ஏன் சாத்தியம் இல்லை"

"Perpetual mechine
ஏன் சாத்தியம் இல்லை"

ரா.பிரபு

"Perpetual மெஷின் " என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரியாதவர்களுக்கு எளிமையாக ஒன்றை சொல்கிறேன். உங்களிடம் ஒரு பைக் உள்ளது .அதற்கு பெட்ரோல் போடாமல நீங்கள் அந்த பைக்கை தொடர்ச்சியாகக் ஓட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்று சொன்னால் அது முடியுமா ?
" அதெப்படி சாத்தியம் பைக் இயங்குவதற்கு அதற்கு ஆற்றலைக் கொடுக்க வேண்டும் அல்லவா அதற்கு பெட்ரோல் போட்டாக வேண்டுமே " என்று நீங்கள் கேட்பீர்கள்.

சரி இப்பொழுது இதை கவனியுங்கள் உங்கள் பைக்கில் லைட்டை எரிய வைக்க பேட்டரி உள்ளது என்றும் அந்த பாட்டரி நீங்கள் பைக்கை ஓட்டும்போது சார்ஜ் ஆகிறது என்றும் நீங்கள் அறிவீர்கள் . (நீண்ட  நாள் ஒட்டாமல் வைத்தால் பேட்டரி இறங்கி போவதை பார்த்து இருக்கலாம். )

உங்களிடம் நான் இப்போது இப்படி சொல்கிறேன் .. பெட்ரோலில் ஓடும் பைகிற்கு பதிலாக ஒரு பேட்டரி ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ளுங்கள் அந்த ஸ்கூட்டருக்கு ஆரம்பத்தில் மட்டும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து கொடுத்து விடுகிறேன். அதன்பின் அதை ஓட்டி ஓட்டி சார்ஜ் செய்து அந்த சார்ஜ் லேயே ஓட்டி கொள்ளுங்கள்.. சார்ஜ் இறங்கினால் மீண்டும் ஓட்டி சார்ஜ் ஏற்றி கொள்ளுங்கள்..
என்று சொன்னால் அந்த பேட்டரியை மீண்டும் சார்ஜ் செய்யாமல் உங்களால் தொடர்ச்சியாக பைக்கை ஓட்ட முடியுமா?  அதாவது அந்த ஸ்கூட்டர் இயங்குவதற்கான பேட்டரி ஆற்றலை தானே உண்டாக்கி கொள்ள வேண்டும்..

இப்படி ஏதாவது ஒரு இயந்திரம் தனக்குள் உண்டாகும் ஆற்றலை வைத்து தானே இயங்கி கொள்ள முடியும் என்றால்... அதன் பெயர் தான்
"Perpetual  machine "

அப்படி தன்னைத் தானே இயக்கி கொண்டது போக ஒரே ஒரு மில்லி வோல்ட் அளவு ஆற்றலை வெளியே கொடுக்க முடியும் என்றாலும் அந்த கருவியைக் கொண்டு உலகத்தையே மாற்ற முடியும்.

சரி ஏன் இப்படி ஒரு கருவி சாத்தியமில்லையா? இதை யாரும் பரிசோதித்துப் பார்த்தது இல்லையா?

கிபி 1159 இல் பாஸ்காரா என்று ஒரு கணித மேதை ஒரு ஓவியத்தை வரைந்து காட்டினார்.. அது ஒரு சக்கர அமைப்பு.
பார்க்க சாதாரண சைக்கிள் சக்கரம் போல தான் ஆனால் நேரான கம்பிகளுக்கு பதிலாக வளைந்த பட்டைகள் .. பிறகு அதில் வெளியே வராமல் இருக்கும் படி ஊற்ற பட்ட பாதரசம். இந்த அமைப்பை வரைந்து காட்டிவிட்டு,

 "இதில் ஒரு பக்கத்தில் இருந்து பாதரசம் எடை அதிகமாகி சக்கரம் சுற்றும் பிறகு அடுத்த பட்டையில் உள்ள பாதரசம் இறங்கும்
இப்படி ஒவொரு சுழற்சிக்கும் எப்பவுமே இது ஒரு பக்கம் எடை கூட்டி கொண்டே  இருக்கும் என்பதால் இந்த சக்கரம் தொடர்ந்து சுற்றும் "என்றார் .

டிசைனை பார்த்த போது சுற்றும் போல தான் இருந்தது ஆனால் அதை செய்து பார்த்தபோது ஒருபக்கம் மட்டும் எடை அதிகரிப்பதால் அந்த கருவியின் ஈர்ப்பு மைய்ய புள்ளி சற்று விலகி சக்கரம் சுற்றுவது நின்றுவிட்டது.

அவரைத் தொடர்ந்து அந்த டிசைனில் கொஞ்சம் மாற்றம் செய்தால் இது நிச்சயம் வேலை செய்யும் என்று நம்பிய சிலர் அதில் பாதரசத்திற்கு பதிலாக இரும்பு குண்டை சேர்த்து பார்த்தார்கள் அப்போதும் அது வேளை செய்யவில்லை. பிறகு சின்ன பெண்டுலம் மாதிரி ஒரு கம்பியில் முனையில் இரும்பு பந்து ஒட்ட வைத்து பார்த்தார்கள் அப்போதும் அது வேலை செய்ய வில்லை. அதன் பின் அவர்கள் சக்கரத்தை பிரித்து தங்கள் குழந்தைக்கு விளையாட கொடுத்துவிட்டு வேறு வேலை பார்க்க போய் விட்டார்கள்.

பிறகு 17 ஆம் நூற்றாண்டில் ராபர்ட் பாயல் என்பவர் ஆஹா அப்படி ஒரு கருவியை கண்டு பிடித்து விட்டேன் என்றார்.
அவர் இந்த சக்கரத்தை எல்லாம் பயன்படுத்தவில்லை மாறாக எளிமையாக ஒரு கிண்ணத்தில் நீரை ஊற்றினார். அதன் அடிப்பகுதியில் ஒரு குழாய் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழாய் நீண்ட வால் போல வளைந்து மீண்டும் அந்தக் கிண்ணத்தில் வந்து ஊற்றுவது போல அமைத்திருந்தார்.
அந்த குழாய் கேபிளரி ஆக்ஸன் மூலம் அதாவது மரங்கள் நீரை சவூடு கடத்தல் செய்து மேல் ஏற்றுவது போல ஏற்றும் ஒரு விசேஷ பொருளால் செய்ய பட்ட குழாய்.. எனவே அந்த கிண்ணத்தில் நீரை ஊற்றி வைத்துவிட்டால் அந்தக் கிண்ணம் தொடர்ச்சியாக தனக்குத்தானே நீரை ஊற்றி கொண்டே இருக்கும்.
நடைமுறையில் இதை செய்து பார்த்தபோது புவி ஈர்ப்பை மீறி குழாயில் நீரை ஏற்றும் அதே கேபிளரி ஆக்ஷன் குழாயின் நீரை கிண்ணம் வரை கொண்டு போய் ஊற்றாமல் இழுத்து பிடித்து கொள்கிறது என்பதை கண்டார்கள்.
எனவே robert boyel களைப்படைந்து  தொண்டை வற்றி போய் அந்த கிண்ணத்தின் நீரை எடுத்து குடித்து விட்டு மூடி வைத்து விட்டார்.

அதன்பின் வேறு ஒருவர் வேறு ஒரு டிசைன்.....

இம்முறை குழந்தைகள் பார்க்கில் சறுக்கி விளையாடும் சரிவு அமைப்பு மாதிரியான ஒரு குட்டி அமைப்பு அதன் மேல் பகுதியில் ஒரு சக்திவாய்ந்த காந்தம் வைக்கப்பட்டிருக்கும். இப்போது சரிவின் கீழ்ப்பகுதியில் ஒரு இரும்புக் குண்டை வைத்தால் அது காந்தத்தால் கவரப்படுவது சரிவில் மேல் நோக்கி ஏறும் ஆனால் அது மேலே போய் சேரும் இடத்தில் ஒரு ஓட்டை வைத்திருப்பார்கள். அந்த ஓட்டையின் வழியாக கீழே செல்லும் அந்த குண்டு மீண்டும் தான் இருந்த பழைய இடத்திற்கு வந்து நிற்கும். இப்போது மீண்டும் மேல் நோக்கி இழுக்கப்படும்..
இப்படி இது தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும்.

யோசனை நன்றாகத்தான் இருந்தது ஆனால் நடைமுறையில் செய்து பார்த்தபோது அந்த மேலே இருக்கும் சக்தி வாய்ந்த காந்தம் அந்த இரும்பு குண்டை ஓட்டையில் விழ விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு விளையாட்டு காட்டியது.

அதன்பிறகு எண்ணற்ற ஆய்வாளர்கள் எண்ணற்ற டிசைன் எண்ணற்ற சோதனைகள்.... எல்லாக் கருவிகளும் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் இயங்கி விட்டு பிறகு தேமே என்று நின்று கொண்டது.

பார்க்க மிக எளிமையாக இருக்கும் இந்த கருவிகளை ஏன் இயக்க முடியவில்லை ??
அதற்க்கு காரணம் அதை இயக்க நாம் இயற்கையின் இரண்டு வெப்ப இயக்க வியல் விதிகளை (Thermodinamics law ) மீற வேண்டும்.
(தெர்மோடைனமிக்ஸ் இல் 0,1,2,3, என்று நான்கு விதிகள் உள்ளன வேறு சந்தர்ப்பத்தில் விரிவாக தெர்மோடைனமிக்ஸ் பற்றி எழுதுகிறேன் )

அதில் முதல் விதி சொல்வது என்ன வென்றால் " ஒரு துளி அளவு ஆற்றலை கூட ... ஒரே ஒரு தூசை தூக்கும் அளவு ஆற்றலை கூட நம்மால் இந்த பிரபஞ்சத்தில் புதிதாக உண்டாக்க முடியாது.. நாம் ஒருவகை ஆற்றலை மற்றொருவகை ஆற்றலாக மாற்றலாம்.. இங்க இருந்து எடுத்து அங்கே கொடுக்கலாம் அவ்வளவுதான்.
அதனால்தான் நாம் முன்பு பார்த்த அந்த மெஷின்கள் புதிதாக ஆற்றல் எதையும் உற்பத்தி செய்ய முடிவது இல்லை.

ஒருவேளை விஞ்ஞானிகள் அப்படியே ஒரு ஆற்றலை உற்பத்தி செய்யும் கருவியை உண்டு பண்ணி விட்டாலும் கூட... அது வேலை செய்யாது.
அதை வேலை செய்யவிடாமல் தடுக்க இரண்டாம் விதி முட்டுக்கட்டை போட்டு நிற்கும்.
இரண்டாம் விதிப்படி ஒரு கருவியால் வேலை செய்யப்பட்டால் அதாவது அந்த கருவியில் இயங்கும் பகுதிகள் நகரும் பகுதிகள் அல்லது உரசும் பகுதிகள் ஏதேனும் இருந்தால்.... அது ஆற்றலை சிதற்வடைய  செய்து ஆற்றல் இழப்பை ஏற்படுத்துகிறது.

எனவே ஒரு Perpetual மெஷின் ஒரு போதும் வேலை செய்ய போவது இல்ல.
இன்றைக்கு you tube இல் இந்த மெஷினை கண்டுபிடித்து ஓட்டி காட்டும் வீடியோ பலதை நீங்கள் பார்க்க முடியும் ஆனால் அதில் எதுவுமே உண்மையான perpetual machine அல்ல.

சிலருக்கு ஒரு கேள்வி எழலாம் ஒரு அணு என்பது எப்போதும் இயக்கத்தில் தானே இருக்கிறது அப்போ அதை Perpetual மெஷின் என்று சொல்லலாமா ??
இல்லை Perpetual  motion என்பது வேறு Perpetual மெஷின் என்பது வேறு.
சிலருக்கு இந்த கேள்வி வரலாம்.
"பூமி எப்பவும் சுத்திட்டே இருக்கே அதை perpetual மெஷின் னு சொல்லலாமா??"
இல்லை சொல்ல முடியாது காரணம் பூமி தனக்குள் உண்டான் விசையை வைத்து சுற்ற வில்லை. நாம் கையால் கோலி குண்டை உருட்டி விட்டால் சுற்றுவது போல தான் அது சுற்றுகிறது என்ன ஒன்னு இங்கே உருட்டி விட்டது சூரியனின் கைகள்.

சரி எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் ஒரு கருவி எங்கேயும் இல்லையா ?
நீங்கள் " drinking bird " எனும் விளையாட்டு க(கு)ருவியை பார்த்திருக்கலாம். அந்த குருவி தொடர்ந்து குனிந்து நிமிர்ந்து குனித்து நிமிர்ந்து தனக்கு முன்னால் வைக்கப்பட்ட தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருக்கும்.

அது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால்...
அதற்குள் "methaline cloride " அடைக்க பட்டு இருக்கும் அந்த திரவத்தின் கொதி நிலை 39.6 டிகிரி செல்சியஸ்.. அதாவது நீங்கள் உங்கள் கையால் தொட்டாலே அது ஆவியாக ஆகும். எனவே அறை வெப்ப நிலையால் சூடாகி அது வைக்கப்பட்டிருக்கும் குழாய்க்குள் அழுத்த மாறுபாட்டை ஏற்படுத்தி அந்த திரவத்தை மேல் நோக்கி செலுத்துகிறது.
இதனால் எடை அதிகமாகி பறவையின் தலை முன்னோக்கி சாய்கிறது. இப்பொழுது அதன் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் நீரில்  தலை நனைவதால் மீண்டும் குளிர்விக்க பட்டு கீழே இறங்குகிறது...
இப்படி முடிவில்லாமல் அந்த பறவை ஆடி கொண்டே இருக்கிறது.

இந்த பறவை பார்க்க தெர்மோடைனமிக்ஸ் விதிகளை மீறுவதை போல தெரியலாம்..ஒரு Perpetual  மெஷின் போல தெரியலாம் ஆனால் உண்மையில் இது ஒரு "heat Machine" அதாவது ஒரு இடத்தில் இருந்து வெப்பத்தை எடுத்துக்கொண்டு அதன் ஆற்றலை பயன்படுத்தி வேலை செய்யும் ஒரு கருவி. அறை வெப்பநிலையில் நாம் கொடுக்கும் வெப்பம் தான் இதன் மேல் செயல் படும் வெளி ஆற்றல்.

ஒரு நிஜமான  Perpetual  machine என்பது.. வெளியில் இருந்து வெப்பம்,காற்று, சாதா காந்த விசை,மின்காந்த விசை என்று எதனாலும் பாதிக்க படாத இடத்தில் வைக்க பட வேண்டும் அதை யாரும் தொடவோ ஆட்டிவிடவோ கூடாது அப்படி வைத்தாலும் அது இயங்க வேண்டும்.

ஒரு பேச்சுக்கு அப்படி ஒரு கருவியை நீங்கள் கண்டுபிடிக்க முடிந்தால் அது கொஞ்சமே கொஞ்சம் ஒரே ஒரு துளி அளவு ஆற்றலைக் கொடுக்க முடியும் என்றாலும் கூட நாளையே இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் உங்கள் வீட்டைச் சூழ்ந்து இருக்கும். ஒரே நாளில்  நீங்கள்  உலக புகழ் அடைந்து விடுவீர்கள்.

வீட்டில் சும்மா இருக்கும்போது வேண்டுமென்றால் முயற்சி செய்து பாருங்கள்.

Comments

  1. புதிய தகவல் ஒன்று தெரிந்து கொண்டேன். நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"