"ரயில் ,முகில் ,திகில் "

"ரயில் ,முகில் ,திகில் "

ரா.பிரபு

(சஸ்பென்ஸ் குறுந்தொடர் )

அத்தியாயம் 1 :

முகிலுக்கு இந்த ரயில் பயணம் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு திகில் பயணமாக இருக்கும் என்று அவன் கனவிலும் நினைத்தது இல்லை...........

இருங்க...இருங்க ....
ஒரு நிமிஷம்..

இப்படி திடீர்னு 5 ஆவது அத்தியாயதின்
ஆரம்ப வரிகளை இங்கே தூக்கி சொருகி விடுவது சரி அல்ல என்பதால் ஆரம்பத்தில் ரயில்வே ஸ்டேஷனில் இருந்தே பயணத்தை தொடங்கலாம்....

☢☢ சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்..( என்ன தான் பெயர் மாற்றி விட்டாலும் மனதின் சென்டரில் பதிந்துள்ளது இன்னும் சென்ட்ரல் தான் )

மாலை மணி 7.00. மன்னிக்கனும்...மணி 19.00

கலைத்து விட்ட கரையான் கூட்டம் போல ரயிலில் இருந்து இறங்கி சிதறி ஓடி கொண்டிருக்கும் களைத்து போன மனிதர்கள் ...ரயிலை பிடிக்க ரயிலை விட வேகமாக ஓடி கொண்டிருக்கும் மனிதர்கள்... இவர்களுக்கு இடையே..அதோ அந்த காபி ஷாப்பில் இரண்டு காபி வாங்கி கொண்டிருக்கும் அவன்... முகில் அல்ல ..முகிலின் நண்பன் டேனியல்..
அந்த இரண்டாவது காபியை 5 நிமிட எதிர்காலத்தில் சொந்தமாக்க  போகும் நான் ... நான் தான் முகில்.

நான் நமது நாட்டின் லட்ச கணக்கான இன்ஜினியர்களில் ஒருவன்.. எல்லா இன்ஜினியர் மாணவர்களை போலவும்.. இன்ஜினியரிங் முடித்த உடன் மனதில் இன்ஜினியராக கொஞ்ச நாள் வலம் வந்து பிறகு எதார்த்தம் உணர்ந்து ஏதோ கிடைத்த வேலை செய்து பிழைத்து உழைத்து முன்னுக்கு வந்து நல்ல நிலையை அடைந்து ...இப்போ நிஜமாகவே இன்ஜினியர்.
இப்போதைக்கு லக்னவ் சென்று கொண்டு இருக்கிறேன். தனியாக...

ஏன் லக்னவ் செல்கிறேன் என்றால்......

"மச்சான் இந்தா காபி " என்றான் அதற்குள் டேனியல் . காப்பி கப்பில் இருந்த , இரண்டு டராகன்கள் மோதுவது போன்ற டிசைனை ரசித்து கொண்டே வாங்கினேன்.

"ட்ரெயின் தயாரா இருக்கு ஹேப்பி ஜர்னி .. காபி ஆறுது குடி ..."
டேனியல் கொஞ்சம் பரபரப்பான ஆள்.. செயலிலும் பேச்சிலும் வேகம் பரபரப்பு தான்.

சென்னையில் எனக்கு கிடைத்த ஒரே நண்பன் ..game developer .. புதிது புதிதாக கேம்களை உண்டாக்குவத்தில் விற்பனன் கொஞ்சம் மூளை காரன் என்பதால் வெளிநாட்டில் கூட இவனை கொத்தி கொண்டு போக ஆட்கள் உண்டு. பொதுவாக என்னோடைய life style க்கு நேர் எதிரானவன் .. நான் இயற்கை விரும்பி இவன் கணினி எனும் செயற்கை விரும்பி. எனக்கு அதிக நேரம் மொபைல் பயன்படுத்தவே பிடிக்காது.. இவனுக்கு கணினி தான் சாப்பாடே.
கொஞ்சம் உலக அறிவு அதிகம். பேசி கொண்டே இருக்கும் போது
"மச்சான் உனக்கு ஜான் வால்டர் டெய்லர் தெரியுமா மகா ஜீனியஸ் " என்று சம்பந்தம் இல்லாமல் கேட்பான்.
"எனக்கு பக்கத்து தெரு டெய்லர் தான் தெரியும் அவருக்கு வால் இருப்பதாய் தெரிய வில்லையே " என்று சொல்லி சமாளிப்பேன்.

 அதீத தொழில் நுட்பம் மனிதனை இயற்கைக்கு விரோதமாக கொண்டு செல்கிறது என்பது எனது கருத்து... அவனுக்கும் சரி அவனை காண வரும் அவனை போல தொழில்நுட்ப அடிமைகளுக்கும் சரி.. இயற்கை வாழ்வியல் பற்றி ஸ்பீச் கொடுத்து அவ்வபோது டேனியலை ..திணற அடிப்பேன்...  தொழில்நுட்பமா .. இயற்கையா என்று எப்போதும் ஒரு ஆரோக்கிய மோதல் இருந்து கொண்டே இருக்கும் எங்களுக்குள்...

"மச்சான் வா வண்டி கிளம்ப போகுது"

Use and throw வை குப்பை தொட்டியில் போட்டு விட்டு இருவரும் அந்த எக்ஸ்பிரஸில் சென்று ஏறி எனது சீட்டை தேடி பிடித்த போது ஒன்றை கவனித்தேன்..
இது லக்னவ் express இல்லை.

சொல்லப்போனால் அதிகாலை 5 மணிக்கு தான் லக்னவ் செல்லும் எக்ஸ்பிரஸ் இருந்ததாக எனக்கு ஞாபகம் . இந்த மாலை நேர எக்ஸ்பிரஸ் எப்போது விட்டார்கள் என்று தெரியவில்லை .டேனியல் தான் புக் பண்ணி இருந்தான். இதுவரை பார்க்காத புதுப்பொலிவுடன் இருந்தது  அந்த ரயில் . இதுவரை நான் பயணித்த எக்ஸ்பிரஸ்களை விட மிகவும் மேம்பட்ட  உயர்தரமாக அது இருந்தது . பெயரும் நான் இதுவரை கேள்விப் படாத பெயராக இருந்தது.
" heaven express "
பெயருக்கேற்றார் போல பார்க்க கொஞ்சம் சொர்க்கம் போல தான் இருந்தது

"புது ட்ரைனா மச்சான்.. இது...? " என்று கேட்டேன்..

"ஆமாம் டா இதான் முதல் பயணம்.. நேற்றே பேப்பர் ல கூட போட்டு இருந்தானே பாக்கள..? 'பழைய டிக்கட் விலையில்..புது சொகுசு express னு..' "

"கவனிச்சு இருக்க மாட்டேன் எனிவே.. வண்டி லக்னவ் போனா சரி....
சரி மச்சான்.. வண்டி ஹாரன் அடிச்சிட்டான் நீ கிளம்பு.. நான் போய் இறங்கியதும்..உனக்கு கால் பண்றேன்.." என்ற போது அந்த இரும்பு மலை பாம்பு மெல்ல ஊர்ந்து நகர தொடங்கி இருந்தது...

எங்கோ தலைக்குமேல் புதைந்திருந்த ஸ்பீக்கர் ஒன்றிலிருந்து ஒரு மாயாஜால குரல்..

" நமது heaven எக்ஸ்பிரஸில் இணைந்திருக்கும் பயணிகளுக்கு நல்வரவு உங்கள் முதல் பயணம் மறக்க முடியாத பயணமாக அமையட்டும் நன்றி "
என்று அசரீரி ஒலித்தது
அட ரயில்வே காரங்க கலக்கராங்களே பா.. என்றேன் மனதிற்குள்..

பிளாட்பாரத்தில் கைவிட பட்ட குழந்தை போல..பிளாட்பாரத்தை அனாதையாக கை விட்டு விட்டு ரயில் முன்னே பிரிந்து சென்று கொண்டு இருந்தது. தூரே டேனியல் இன்னும் கை அசைத்து கொண்டு டாப்ளர் எபெக்டில் மறைந்து கொண்டு இருந்தான். அவனுக்கு ஜன்னல் வழியாக எட்டி பார்த்து கையசைத்துவிட்டு.. இருக்கையில் சாய்ந்து அமர்ந்தேன். காற்று செல்லமாக கன்னத்தில் அறைந்து விளையாட தொடங்கியது.

ஜன்னல் வழியே இயற்கையை ரசிக்க தொடங்கினேன். கடந்து போகும் பல கட்டிடங்களை அசுவாரஸ்யமாக பார்த்து கொண்டே வந்தேன்.
வழியில் ஒரு மாடியில் குட்டி செடிகளை வளர்த்து இருந்தார்கள் அதன் அருகே நின்ற ஒரு குட்டி பாப்பா சோப்பு நுரையில் பபுல்ஸ் விட்டு விளையாடி கொண்டு இருந்தது .. வானவில் நிறத்தில் வண்ணமயமாக ஒரு கவுன் போட்டு இருந்தது. மாடி ஓரத்தில் அபாயகரமாக எட்டி பார்த்தது ஜன்னலில் என்னை பார்த்து கண் சிமிட்டி சிரித்தது.

"சிறு வயது ரயில் ஜன்னல்களில் எப்போதும்...
மரங்களே பின்னுக்கு ஓடின..
இன்று..
கட்டிடங்கள் மட்டுமே ஓடுகின்றன .
மரங்கள் கொன்று
மாடிகள் கட்டி ..
அந்த மாடியில்
மரம் வளர்க்கும் மூட மனிதன் "

என்று ஒரு கவிதை வரி போல மனதில் ஓடியது. எப்போதுமே எனக்கு ரயில் பயணத்தில் அறிவு கொஞ்சம் ஓய்வு எடுத்து கொள்ள மனம் விழித்து கொள்வது வழக்கம். அதிலும் இயற்கையை ஓடும் ஜன்னல் வழியே ரசிப்பது இதயத்தின் பல கதவுகளை திறக்க வைக்கும்.

அதே சமயம்..பார்வை வெளியே ரசித்தாலும் உள்ளே..கொஞ்சம் ஆயாசமாகவும் இருந்தது..
லக்னவ் 39 மணி நேர பயணம்..
2087 கிலோமீட்டர்.

வெளியே இருள் ..வானத்திற்கு கருப்பு பெயிண்ட் அடிக்கும் வேலையை தொடங்கி இருக்க..நிலா நைட் ஷிப்ட் க்கு இன்னும் வர வில்லை...

எனது சீட்டில் பக்கம் அக்கம் யாரும் வர வில்லை .தனி ஒருவனாக அமர்ந்து இருந்தேன்..
ரயில் தனக்கு தெரிந்த ஒரே ராகமான தடக் தடக்..ராகத்தில்..ஒரு மணி நேரம் தாலாட்டு பாடியதில் ..எப்போது என்று தெரியாத ஏதோ ஒரு நொடியில் என்னை அறியாமல் தூங்கி போனேன்.
அநேகமாக ஒரு 3 அல்லது 4 மணி நேரம் தூங்கி இருப்பேன்.

கண்ணை முழித்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

தடக் தடக் தொடரும்.........

🚉    🚉    🚉    🚉     🚉     🚉    🚉    🚉




அத்தியாயம் 2 :

தூக்கம் பிரிந்த பின்பும் கண்களை திறக்காமல் தூக்கம் கொடுத்த சிறிதளவு கிறக்கத்தை அனுபவித்தபடி கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து இருந்தேன். ரயில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் நிற்பது புரிந்தது.
கண்களைத் திறந்து மெல்ல கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன் மணி 7.

என்னது ஏழா ?? எந்த ஏழு ??அதிகாலை வரை தூங்கி விட்டேனா என்ன ??
புரியாமல் செல்போனில் அவசரமாக நேரம் பார்த்தேன் மணி 7 தான்.
குழப்பமாக இருந்தது. நான் பயணம் ஆரம்பிக்கும் போது தானே 7. ..அதிலிருந்து எனது கடிகாரம் ஓடவே இல்லையா... ? கிட்ட தட்ட ஒரு மணி நேரம் முழித்து தானே இருந்தேன் எவ்வளவு நேரம் தூங்கினேன் ? இது என்ன ஸ்டேஷன் ?
நியாய படி ஒரு மணிநேரத்தில் சூலூர் பேட்டை மற்றும் ஒன்றரை மணி நேரத்தில் நாயுடு பேட்டை வந்து இருக்க வேண்டும் .
அவைகள் ஏதும் வந்ததாக தெரிய வில்லை.
நான் கிளம்பி எப்படியும் மூன்று மணி நேரம் ஆகியிருக்கும். எனில் இது கூடூர் ஜங்ஷன் ஆகத்தான் இருக்க வேண்டும். அல்லது மூன்றரை மணி நேரம் எனில் நெல்லூர்.
மொபைலின் உதவி நாடி அதை உயிர்பித்தேன். அதில் சிக்னல் சுத்தமாக இல்லை எந்த தகவலும் தெரியவில்லை.

இது என்ன ஊர் என்பதை அறிய வெளியே எட்டி பார்த்தேன். சின்ன ஆச்சரியத்திற்கு உள்ளானேன்
'என்ன எழவு ஊருயா இது ?  '

அந்த ஸ்டேஷன் முழுக்க முழுக்க இருள் அப்பியிருந்தது. மிகச் சொற்பமாக ஆங்காங்கே சில விளக்கு வெளிச்சங்கள் தெரிந்தது.
 ஏன் இந்த ஸ்டேஷன் இவ்வளவு இருட்டாக இருக்கிறது?  அந்த ஸ்டேஷனில் இருந்து ஏதோ ஒரு இயல்பற்ற தன்மை தெரிந்தது . என்ன அது ?

வழியில் படிக்க ஏதும் நியூஸ் பேப்பர் வாங்கி வரலாம் என்று ஒரு எண்ணம் தோன்ற எழுந்து சென்று கீழே இறங்கினேன்.
நான் வந்த ரயிலின் இன்ஜின் முனையை பார்த்தேன் அது இருளில் மூழ்கி ரயில்  முடிவிலியாக நீண்டு தெரிந்தது.
ஏதோ இரவு நேர காட்டிற்குள் இறங்கியது போல ஒரு உணர்வு.
இன்னோரு ஆச்சர்யம் அங்கே இருந்த சொற்ப மனிதர்கள் எல்லோரும் ஏதோ செலுத்தப்பட்டவர்களை போல ஒரு மாதிரி மெதுவாக ஸ்லோ மோஷனில் நகர்ந்து கொண்டு இருப்பதாக பட்டது.
ஏதோ ஒன்னு சரி இல்லையே..

அந்த ஸ்டேஷனில் ஒன்றே ஒன்று மட்டும் வெளிச்சமாக இருந்தது தனியாக என்னை கவர்ந்தது அது ஒரு விளம்பர பலகை.. டிஜிட்டல் எழுத்துகளில் "call-con " என்று எதையோ விளம்பரம் செய்து கொண்டு இருந்தது.. கலர் கலராக லைட்டுகள் எரிந்து எரிந்து பல டிசைன்களில் மாறி கொண்டுஅணைந்து கொண்டு இருந்தது. அது என்ன அது கால்-கன் ? ஏதும் பொருளா அல்லது இடமா ?? அல்லது ஆளின் பெயரா..? என்று கேள்வி எழுந்தது.

நான் இருளில் மெல்ல நகர்ந்து சென்று நியூஸ் பேப்பர் கடை ஒன்றில் 5 ரூபாய் கொடுத்து பேப்பர் வாங்கினேன்.
அந்த கடைக்காரனும் அதே செலுத்தப்பட்ட தன்மையுடன் இருந்தான். மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்க முடிவு செய்தேன்.
"ஹெலோ மிஸ்டர் இது என்ன ஸ்டேஷன் ? யூ.. தமிழ் ஆர் தெலுகு ?" என்றேன்

அவன் ஏதோ காது கேட்காத செவிடன் போல என்னை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை சம்பந்தமில்லாமல் புத்தகங்களை அடுக்கி கொண்டிருந்தான் அதில் ஏதோ ஒரு செயற்கைத் தன்மை இருந்தது போல் தெரிந்தது . ஒருவேளை நிஜமாகவே செவிடனோ ?

"ஹெலோ உங்களை தான் "
என்று அவன் முகத்திற்கு முன்பே கைகளை ஆட்டினேன்

அவன் ஸ்லோ மோஷனில் நிமிர்ந்து பார்த்தான் . அவன் கண்கள் ....
ஏதோ பிணத்தின் கண்கள் போல உயிர்பற்று கிடந்தது . பதிலேதும் பேசாமல் கீழே குனிந்து கொண்டான்.
நான் புரியாத குழப்பத்துடன் மெல்ல பின் வாங்கினேன் மீண்டும் ஒருமுறை நேரத்தைப் பார்த்தேன் மணி ஏழு தாண்டி ஒரு வினாடி கூட நகரவில்லை.

ஏதோ ஒரு விளக்க முடியாத குழப்பம் என்னை சூழ.. மெல்ல  பின்வாங்கினேன்.  தற்செயலாக நான் திரும்பி பார்த்தபோது அதிர்ந்தேன்.

'ஓ மை காட் ! ரயில் எப்ப கிளம்பிச்சி ஹாரன் சத்தமே கேட்களையே.....'

மெல்ல நான் வந்த ரயில் கிளம்பி வேகம் பிடித்து நகர தொடங்கி இருந்தது.

எனது பெட்டி எது என்பதை அவசரமாக ஆராய்ந்து அது முன்னே சென்று கொண்டு இருப்பதை உணர்ந்து அதை நோக்கி ஓட்டம் எடுத்தேன். தட் தட் தட் என்று ஓடும் சப்தம் அந்த நிசப்த பிளாட்பார்மில் ஆம்ப்லி்பை  பண்ண பட்டு எதிரொலித்தது.
உடலின் சக்தி மொத்தத்தையும் கால்களுக்கு கொடுத்து தலை தெறிக்கும் வேகத்தில் ஓடினேன் நானும் ரயிலும் ஒரே நேரத்தில் வேகம் பிடித்தோம்.
கடைசி நொடியில் அந்த இரும்பு குதிரையை தாவி பிடித்தேன் .
'ஹப்பாடா கொஞ்சம் விட்டு இருந்தா லக்னவ் போய் சேர்ந்த மாதிரி தான் .. ' என்று நினைத்து கொண்டேன்.

பெட்டிக்குள்ளே ஒரு முதியவர் பாத்ரூமில் இருந்து வெளி பட்டு தனது இருக்கை நோக்கி சென்று கொண்டு இருந்தார் அப்போது தான் அதை கவனித்தேன்.. 'அதே செலுத்த பட்ட தன்மை ' அந்த இருண்ட பிளாட்பார வாசிகளை போலவே அதே ரோபோ தனமான நடை.
பொதுவாகவே எனது பெட்டியில் ஆட்கள் மிக சொற்ப அளவில் தான் இருந்தார்கள்.
லக்னவ் போறதுக்குள்ள ஏதோ விசித்திரமான சம்பவம் நடக்க போகுது என உள்மனம் என்னை எச்சரித்தது.
ஆமாம் ....நான் ஏன் லக்னவ் போயிட்டு இருக்கேன் னு சொல்லவே இல்லையே..

"ஹெல்ப் மீ ப்ளீஸ்......!"

திடீர் என்று கேட்ட அந்த அபய குரலில் திடுகிட்டேன். அதை விட அது பெண்குரல் என்பது எனது திடுகிடலுக்கு கூடுதல் காரணம்.
யார் அது ??

"ஹெலோ ப்ளீஸ் ஹெல்ப் மீ " குரல் ரயிலுக்கு வெளியே நழுவும் பிளாட் பாரத்தில் இருந்து வந்தது குரல் மிக பதட்டமாக இருந்தது. ஜுர நேர நோயாளி போல நடுக்கமான குரல்

கீழே திரும்பி பார்த்த நான் திடுகிட்டேன். நான் ஓடி வந்த அதே பிளாட் பாரத்தில் ஒரு பெண் ஓடி வந்து கொண்டு இருந்தாள். முகத்தில் பதட்டமும் பயமும் பூசி இருந்தாள்.

அதை விட ஆச்சர்யம் எனக்கு அவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.



தடக் தடக் தொடரும்........

🚉    🚉    🚉    🚉     🚉     🚉    🚉    🚉

அத்தியாயம் 3 :

செய்வதறியாது ஒரு கணம் திகைத்து பின் சுதாரித்தேன். Heaven express கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடித்து முன்னேறி கொண்டு இருந்தது.
அந்தப் பெண் என்னை நோக்கி கையை நீட்டி கொண்டு ஓடிவந்து கொண்டிருந்தாள்.
பூ டிசைன் போட்ட வெள்ளை சுடிதார் அணிந்து இருந்தாள். மெல்லிய ரோஸ் நிற டாப் அவள் ஓட்டத்தில் தனது கடமையை மறந்து இடம் மாறி கழுத்தில் படர்ந்து இருபுறமும் பறந்து கொண்டு வந்தது. கையில் சின்ன handbag ..அது அவள் ஓட்டத்திற்கு ஏற்றாற்போல ஊஞ்சல் ஆடி கொண்டு வந்தது.. அவள் அணிந்து இருந்த ஹைஹீல்ஸ் டைப் செருப்பு அவள் ஓட்டத்திற்கு சிரமத்தை கொடுத்து கொண்டிருந்தது தெரிந்தது. பிளாக் ஸ்டராப் போட்ட வாட்ச் அணிந்து இருந்தாள்.. இத்தனையும் என் கண்கள் வினாடியில் படம் எடுத்து மூளையில் சேகரித்தது. ..'ஆண்கள் புத்தி'.
பார்க்க கல்லூரி மாணவி போல இருந்தாள்.
அவள் ஓட்டம் ஒரு மானின் துள்ளலை நினைவு படுத்தியது .

சரி தான் என்னைப் போலவே ரயிலை தவறவிட்டவள் போல இருக்கு. ஆனா இவளை எனது பெட்டியில் பார்த்ததாக நினைவு இல்லையே. பெட்டியில் இருக்கும் அனைவரையும் கவனித்து இருக்க முடியுமா என்ன ?என்று உங்களில் யாரும் கேட்கலாம் ஆனால் ஆண்களுக்கு தெரியும் பெட்டியில் பெண்கள் இருந்தால் நிச்சயம் ஒரு ஆணின் கண்கள் அதை கவனிக்கத் தவறி இருக்க வாய்ப்பு ஏதும் இல்லை. அதுவும் இப்படி ஒரு துள்ளும் மானை.

அய்யோ அவளை ரசிக்கிற நேரமா இது ...
நான் அவசரமாக கைகளை நீட்டி .....

"ஹெலோ கையை பிடியுங்கள்"

நான் ஓடி வரும் போது இவள் எங்கே இருந்தாள்?? திடீர்னு எப்படி முளைத்தாள் ??
அவள் சிரமப்பட்டு வேகத்தை கூட்டி எனது கையை இலக்காக வைத்து பாய்ந்தாள்..

'தில்வாலே.. துல்ஹணியா லே ஜாயேங்கே 'படத்தில் வாயில் ரத்தம் ஒழுகி கொண்டு ஷாருக் ரயிலில் கையை நீட்ட.. அந்த பேமஸ் ddlj வின் அந்த பிரபல bgm இல் கஜோல் ஸ்லோ மோஷனில் ஓடி வரும் காட்சி நினைவிற்கு வந்தது. (நல்ல வேலை என் வாயில் ரத்தம் ஏதும் வர வில்லை.)

அவள் சட்டென்று எட்டி எனது கையை பிடித்து கொண்ட கணத்தில் கீழே பிளாட்பாரம் முடிவிற்கு வந்து இருந்தது.
சட்டென்று தாவி ஏறிய அவள் ,
"மைகாட்...தேங்க்ஸ் " என்றாள். என்னுடன் மோதி மோதாமல் நின்றாள். மூச்சிறைப்பிற்கு இடையில் வார்தைகளை தவணை முறையில் துப்பினாள்.
அருகாமையில் பார்ப்பதற்கு மேலும் அழகு கூடி காணப்பட்டாள்.. மூச்சிரைத்துக் கொண்டு இருந்ததால் மேலும் அதிகம் உற்றுப் பார்க்க வைத்தாள்.

ஒரு கணத்தில் அந்த இருள் பிளாட்பாரத்தை மறந்தேன் அந்த ரோபோ மனிதர்களைப் பற்றி மறந்தேன் ஏன் ஒரு குறுகிய வினாடியில் என்னை நானே மறந்தேன் என்று கூட சொல்லலாம்.
இப்படி ஒரு பெண்ணின் கையை பற்றுவது எல்லாம் இதுதான் முதல் முறை . இதுபோன்ற காட்சிகளை படத்தில் பார்த்ததோடு சரி. அதுவும் பாருங்கள் தேவதைகளின் உடை நிறம் அறிந்துதானே வெள்ளை அணிந்து இருக்கிறாள். இருண்ட ஸ்டேஷனில் இருந்து வந்த அந்த வெளிச்ச தேவதை .

"மூச்சை நீதான் அதிகம் இறைக்கிறாய் ஆனால்..
இதயமோ எனக்கு வேகமாய் துடிக்கிறது."

என்று மனதில் இன்ஸ்டன்ட் புது கவிதை பிறந்தது.
என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்று நான் தயங்கிக் கொண்டிருந்த போது நல்ல வேலையாக அவளே பேச்சை ஆரம்பித்தாள்..

" என்னுடைய ட்ரெயின் மிஸ் பண்ணிட்டேங்க... வாட்டர் பாட்டில் வாங்குவதற்கு சென்று இருந்தேன் அந்த நேரத்தில் ரயில் கிளம்பி விட்டது.. இப்ப TTR வந்தா நான் மாட்டினேன்" என்றாள் . நட்பாக சிரித்தாள். அவள் கையில் வாட்டர் பாட்டில் ஏதும் இல்லை. பாவம் வாங்காமலே வந்துவிட்டாள் போல .

வாங்க என்னுடைய சீட்டுக்கு போகலாம் என்றேன் அவளும் தயங்காமல் வந்தாள்.. எனது S 8  ஜன்னல் சீட்டுக்கு நேர் எதிர் S 10 சீட்டை காட்டி .

"இங்க உட்காருங்க.. இங்க மொத்த சீட்லயுமே வேற யாரும் வரல " என்றேன். அந்த இருள் ஸ்டேஷனில் நான் கவனித்த இயல்பற்ற தன்மையை இவளும் கவனித்து இருப்பாளா ??

"பை தி வே ஐயாம் முகில் " என்றேன்
கையை குலுக்குவதற்கு நீட்டலாமா என்று யோசித்து சரி வேண்டாம் என்று விட்டு விட்டேன் 'அதான் பிடித்து பார்த்தாச்சே '
அவள் சிரித்து

"ஹாய் ஐ ஆம் மானசா என்றாள் "

அவளே கையை நீட்டினாள்..வேறு வழி இல்லாமல் பிடித்து குலுக்கினேன்..

அவளை எங்கோ பார்த்தது போல் தோன்றுவது ஏன் என்று யோசித்துப் பார்த்தேன் எதுவும் விடை கிடைக்கவில்லை. கடந்த ஜென்ம தொடர்போ ...

இவள் அந்த ஷாருக் பட காட்சி ஹீரோயின் போல கோல்டன் கலர் இல் ஓடி வந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என மனம் ஒரு காட்சியை உண்டு பண்ணி பார்த்தது.
இயற்கையை விரும்பும்..இயற்கையை ரசிக்கும் யாரும் பெண்ணை ரசிக்காமல் இருக்க முடியாது. அப்படி பெண்ணை வெறுக்கும் ஒருவன் இயற்கையின் ரசிகனாக இருக்க முடியாது. காரணம் இயற்கையின் மிக அற்புத படைப்புகளில் ஒன்று தான் பெண்ணும் பெண்மையும்.

'வாவ்..
ராத்திரி ..ரசிக்கும் ரயில்....
தேகத்தில் தகிக்கும் தனிமை....
அருகே அசத்தும் அழகி....'

இந்த பயணம் ஒரு ரொமான்டிக்கான மறக்க முடியாத பயணமாக மாற போகிறது டா முகில்' என்று எனக்குள் பேசி கொண்டேன். அப்படி அமைந்து விட்டால் பின்னாளில்
எனது பயண கதையை ஒரு நாவலாக எழுத வேண்டும். அப்படி எழுதினால் அந்த கதைக்கு "ரயில், முகில் , காதல் " என்று பெயர் வைக்க வேண்டும் என்று பேராசை மனம் கணக்கு போட்டது.

"நீங்க எங்க போகணும் " என்றேன்.
அவளிடம் எப்படி பேச்சை வளர்க்கலாம் என்று மனம் யோசிக்க தொடங்கியது.

" நான் விஜயவாடா போகணும் நீங்க? "

"நான் லக்னவ் போகணும்ங்க "என்றேன் .

"என்ன விஷயமாக லக்னவ் போறீங்க ?"
என்று கேட்டாள் ..

"அது வந்து...." நான் சொல்ல தொடங்கும் முன்..

" சார் " என்று ஒரு முரட்டு ஆன் குரல் கேட்டு திடுகிட்டேன்...

அங்கே நின்று இருந்த ஒரு வயதான மனிதன் எங்களையே முறைத்து கொண்டு நின்று இருந்தான். முகம் முழுக்க அம்மை தழும்பு கூன் விழுந்து பார்க்க பயமுறுத்தலாக இருந்தான் இது போதாது என்று கருப்பு பெட்சீட் ஒன்றை வைத்து உடலை மூடி இருந்தான்.

யாருயா இது கரடி பூஜையில் சிவன் நுழைந்த  மாதிரி.. ச்சை பதட்டத்தில் உளருகிறேன் அது என்ன பழமொழி...

"சார் என்னோடைய பெட்டி மூட மாட்டேன்னுது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க " என்றார் அந்த முதியவர்.
ரொம்ப முக்கியம் என்று மனதில் நினைத்து கொண்டேன்.

"ஒன் மினிட் " என்று மானசா விடம் சொல்லி விட்டு எழுந்து சென்றேன்..
அந்த முதியவர் எங்கள் சீட்டை விட்டு இரண்டு மூன்று சீட்டுகள் தள்ளி அழைத்து சென்றார் எங்கள் சீட்டை தவிர மற்ற அனைத்து இடத்திலும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன.
தற்செயலாக கொஞ்சம் வெளிச்சம் இருந்த இடத்தில் அந்த முதியவர் முகத்தை அருகாமையில் பார்த்தேன்..
என்ன ஆச்சர்யம்.. இந்த முதியவரையும் நான் எங்கோ பார்த்தது போல இருந்தது...கிழவனும் கடந்த ஜென்ம தொடர்பா ..ச்ச ச்ச.. என்ன இது ஏன் இப்படி பிரமை உண்டாகிறது யாரை பார்த்தாலும்.

அவர் காட்டிய இடத்தில் ஒரு பெரிய இரும்பு பெட்டி இருந்தது அப்படியே மூடி மூடமுடியாமல் சிக்கி இருந்தது.

"இதாங்க சார் கொஞ்சம் மூடி விடுங்க ப்ளிஸ் " என்றார் முதியவர்.
ஒரு ஆளை உள்ளே வைத்து பூட்டலாம் என்கிற அளவு கொஞ்சம் பெரிய பெட்டி.

கொஞ்சம் சிரம பட்டு அதை மூடி கொடுத்து நிமிர்ந்து பார்த்த போது அந்த முதியவர் ஏதோ அர்த்தமாக சிரித்தது போல இருந்தது. அந்த சிரிப்பிற்கு என்ன காரணம் ? நான் முதியவர் சொன்ன நன்றியை அவசரமாக பாக்கெட்டில் போட்டு கொண்டு. எனது S 8 சீட்டுக்கு சென்றேன்.
அங்கே ...
மானசாவை பார்த்த போது .
வியப்பில் ஆழ்ந்தேன்..

என்ன இது.. ?எப்படி இது ??

இப்போது அவள் கோல்டன் நிறத்தில் சுடிதார் அணிந்து இருந்தாள். நான் கனவு கண்டது போல..
 நான்5 நிமிடம் முன் பார்த்த போது வெள்ளை சுடியில் தானே இருந்தாள் ??நான் கூட தேவதையுடன் ஒப்பிட்டேனே..!  அதற்குள் எப்படி உடை மாற்ற முடியும்..அதுவும்...5 நிமிடம் முன்பு நான் ஆசை பட்ட அதே கலர்..
இதென்ன திரைப்பட பாடல் காட்சியில் வருவதுபோல ஒரு பெண் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் எப்படி உடையை மாற்ற முடியும் அதுவும் இந்த ரயில் பெட்டியில்..

"என்னங்க இது ! " என்றேன் சற்றே சப்தமாக..சற்றே வியப்பாக..

அவள் திடுக்கிட்டு "என்னது ?என்னங்க இது "? என்றாள்..

"இப்போ தானே வெள்ளை சுடி ல இருந்திங்க "

"ஆமாம் மாத்திட்டேன்... ஓடி வரும் போது அளுக்காயிடிச்சி இல்ல.. "

" என்னங்க விளையாடுறீங்களா இவ்வளவு குறுகிய நேரத்திற்குள் ஒரு பெண் எப்படி தனது உடையை மாற்ற முடியும் " என்றேன் ஆச்சரியமாக.

" ஏன் முடியாது ..வேணும்னா சொல்லுங்க உங்க முன்னாடி இன்னோரு வாட்டி மாற்றி காட்டறேன் " என்றாள்.. அதை நக்கலாக சொன்னாளா இல்லை சீரியஸாக சொன்னாளா என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

அஹா காட்டுங்க பார்ப்போம் என்று மனம் சொன்னதை அடக்கி கொண்டு..
"அய்யோ அதெல்லாம் ஒன்னும் வேணாம் ..இவ்லோ சீக்கிரம் மாற்றியது கொஞ்சம் அதிசயமா இருந்தது அவ்ளோ தான் " என்றேன்..வியப்பை மறைத்து கொண்டு சிரித்தேன்.
'எப்படி நான் என் மனதில் கற்பனை பண்ணின அதே நிற உடைக்கு மாறினாள் ?'

மீண்டும் அதை உணர தொடங்கினேன்.
'என்னை சுற்றி ஏதோ வித்தியாசமாய் நடக்கிறது. '

கண்களால் துழாவி பார்த்தபோது அவள் கழட்டிய வெள்ளை சுடி அங்கே எங்கேயும் காணவில்லை அவள் வைத்திருந்த சின்ன ஹேண்ட் பேக்கில் அதை சுற்றி வைக்கவும் வாய்ப்பில்லை.
என்ன ஜன்னல் வழியா ஏதும் வீசி விட்டாளா என்ன ?
அதைப் பற்றிக் கேட்கலாமா என்று நினைத்து சரி வேண்டாம் என்று விட்டு விட்டேன்.
கொஞ்சம் அசுவாரஸ்யமாக ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தேன் இருள் இருள் வெறும் இருள்.

        ✴           ✴              ✴              ✴

🕸 எங்கள் ரயில் இருளைக் கிழித்துக்கொண்டு இப்போது பிசாசு வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
கொஞ்சம் நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் மவுனமாக இருந்தோம். அமைதியின் பின்னணியில் ரயில் கூவியது.

யூரின் போக வேண்டும் போல் இருந்தது. அவளிடம் "எக்ஸ்கியூஸ் மீ " என்று சொல்லி விட்டு எழுந்து பாத்ரூம் நோக்கி சென்றேன் அப்போது வழியில் அந்த முதியவர் தூங்கி விட்டாரா என்று பார்க்க தற்செயலாக எட்டி பார்த்தேன் திடுக்கிட்டேன்..

அவர் இருந்த சீட் வெறிச்சோடிப் போய் இருந்தது அங்கே அந்த முதியவர் காணாமல் போயிருந்தார். முற்றிலும் மாயமாக காற்றோடு காற்றாக கலந்து இருந்தார்.

 இவ்வளவு பெரிய பெட்டியை தூக்கிக் கொண்டு இவ்வளவு சீக்கிரம் அந்த முதியவர் எங்கே சென்றிருக்க முடியும் ?

குழப்பம் சூழ மெதுவாக பாத்ரூம் சென்று விட்டு.. எனது இருக்கைக்கு வந்தேன் நான் குழப்பமாக இருப்பதைப் பார்த்துவிட்டு மானசா என்னங்க ஆச்சு என்றாள்.

"இல்ல ...அந்த முதியவர் ஆளை காணோம் "என்றேன்..

" ஹா ஹா இதெல்லாம் ஒரு விஷயமா சிம்பிள்.. அவரும் உங்களைப்போல பாத்ரூம் சென்று இருப்பார் அவ்வளவுதான் "என்றாள்

"இல்ல அவ்வளவு பெரிய இரும்புப் பெட்டி அதுவும் காணோம் .அதைத் தூக்கிக் கொண்டு பாத் ரூம் போக முடியாது " என்றேன் குழப்பம் நீங்காதவனாய்...

"அட அங்க தான் இருக்கும் இருட்டுல கவனித்து இருக்க மாட்டீங்க " என்றாள்..

கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்.. மணி 7.
'ச்சை 'என்றேன் சப்தமாய்.

''என்ன ஆச்சு " என்றாள் மீண்டும்.

"இந்த கடிகாரம் நான் ரயிலுக்கு வந்ததில் இருந்து ஓட மாட்டேன்னுது. என்ன தெரியல "என்றேன்

"பேட்டரி தீர்ந்து இருக்கும் சிம்பிள் " என்றாள்.
அட இவளுக்கு எல்லாமே சிம்பிள் தானா.

நான் பேசாமல் ..இருள் பிளாட்பாரத்தில் வாங்கிய நியூஸ் பேப்பரை எடுத்து படிக்க தொடங்கினேன்..

அசுவாரஸ்யமாக படித்து கொண்டு வந்தேன்..
அதே தினசரி அரசியல் ..அதே தினசரி போராட்டம்.. அதே பிரச்னைகள்..
உலக செய்தி பக்கத்தில் மூன்றாம் உலக போர் மூளுமா என்று கேட்டு இருந்தது..ஏதோ ஆதிக்க நாடு ஒன்று
உலக மக்கள் தொகை குறைக்க புதிய வைரஸ் உண்டாக்கி இருப்பதாக ஐநா கண்டனம் தெரிவித்து இருந்தது.. அந்த கிருமி மனித உடலில் பல விசித்திர பாதிப்பை உண்டு பண்ணுமாம்.
அந்த கிருமி பரப்ப பட்டால் உலகில் ஜனத்தொகை பாதியாக குறையும் உடனே போர் மூளும் என்று ஆர்டிகள் சொல்லி இருந்தது.

அடுத்த பக்கத்தில் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம் தாறுமாறாக மின் வெட்டு இருக்கும் என்ற தகவல் இருந்தது.. அந்த ஸ்டேஷன் இருட்டாக இருந்ததற்கும் மின் வெட்டு தான் காரணமா ?

நான் கடுப்பாகி அதை மூடி விட்டு ராசி பலன் பக்கத்துக்கு தாவினேன்.. அங்கே..எனது ராசிக்கு என்ன போட்டு இருக்கிறது என்று பார்த்தேன்...என்னையா இது... நமக்கு இன்று ராசியானது எது என்று தானே போட்டு இருப்பார்கள். ஆனால் இங்கே..வித்தியாசமாக இருந்தது..

"உங்களுக்கு இன்று ராசி இல்லாத நிறம் நீலம்..
ராசி இல்லாத எண் 8 .
ராசி இல்லாத திசை வட மேற்கு " என்று போட்டு இருந்தது.

ஆயாசமாக இருந்தது.
நான் பேப்பரை மூடி வைத்து விட்டு  எனது நீல நிற சட்டை கசங்காமல் வாகாக எனது 8 ஆம் நம்பர் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.. வடமேற்கு திசை நோக்கி ரயில் இருளில் காற்றை கிழித்து கொண்டு  சீறி பாய தொடங்கி இருந்தது.

...வர போகும் விபரீதத்தை நான் அப்போது அறிந்து இருக்க வில்லை.


தடக் தடக் தொடரும்.........


🚉    🚉    🚉    🚉     🚉     🚉    🚉    🚉

அத்தியாயம் 4 :

வண்டி எங்கே ஓடிக்கொண்டிருக்கிறது எந்த ஊரை கடந்து கொண்டிருக்கிறது எந்த மாநிலம் எதுவும் அறிய முடியவில்லை ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் இருளும் இருளும் சேர்ந்து இருளை பிரசவித்து.. இருளில் தொலைந்து போனது மட்டும் தான் தெரிந்தது.
ஏதோ காட்டு பகுதியை வண்டி கடந்து கொண்டு இருப்பது மட்டும் நிலவொளியில் தெரிந்தது. மொபைலில் சுத்தமாக சிக்னல் வரவே இல்லை எனவே மொபைலை கொண்டும் ஏதும் அறிய முடியவில்லை.
இப்படி கூகுலாண்டவரே கைவிட்டால் எந்த கடவுளை உதவிக்கு அழைப்பது?  ஒருவழியாக நிலா நைட் ஷிப்ட் க்கு ஆஜர் ஆகி இருந்தது...

ஒரு முறை கூஊ.. என ரயில் இருளை துளைத்து ஓலம் இட்டது...
குளிர் காற்று ஜன்னல் வழி வந்து உடலை துளைத்தது..

நான் மானசா.. என்ன செய்கிறாள் என்று மெல்ல நிமிர்ந்து பார்த்தேன்..
விளக்குகள் அணைக்க பட்டு இரவு விளக்கு மட்டும் எரிந்து கொண்டு இருந்ததில் அந்த குறைந்த வெளிச்சத்தில் அவள் என்னையே பார்த்து கொண்டு இருப்பது பார்த்து சின்னதாய் திடுகிட்டேன்.. அந்த பார்வை என்னை ரசிப்பதாய் தெரிய வில்லையே. அந்த பார்வையில் ஏதோ ரகசியம் இருந்தது. அது நிச்சயம் ரொமான்ஸ் இல்லை.

" உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேங்க...உங்களுக்கு அப்படி ஏதும் தோன்றுகிறதா ? "என்று மெல்ல பேச்சு கொடுத்தேன்..

சினிமா காட்சி போல முதல் சந்திப்பில் காதல் சாத்தியமா என்று மனம் கணக்குப் போடத் தொடங்கி இருந்தது.
சாத்தியம் எனில் சாதக பாதகம் என்ன என்று யோசிக்கத் தொடங்கியது.
இவள் யாரோ என்ன ஜாதியோ வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா ?
ஏற்கனவே தங்கை நீலா வின் காதல் ஒரு கசப்பான அனுபவமாக குடும்பத்தில்  நீங்கா வடுவாக பதிந்து இருந்தது ஒரு பெரிய குறை.

தங்கை நீலா ஆன்மீகம் மாந்திரிகம் என்று ஆர்வம் கொண்டு சுற்றியவள்..அதனால் திருமணத்தில் ஆர்வம் அற்று இருந்தவள்.. ஒரு வழியாக ஒருவனை காதலித்தாள்...ஆனால் அவன் ஒரு மந்திர வாதி என்பதை அறிந்து குடும்பம் அதிர்ந்தது..எதிர்ப்பு தெரிவித்தது.. அவள் மனம் உடைந்து போய் 'எங்கள் ஆன்மா ஒன்று கலக்கட்டும் 'என்று எழுதி வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டாள்..

எனது மனதையும் எண்ண ஓட்டங்களையும் நினைத்து எனக்கே சிரிப்பாக இருந்தது இப்போது தான் ஒரு பெண்ணை முதன் முறையாக பார்க்கிறேன் அதற்குள் அவளைப் பற்றி இவ்வளவு சிந்தனை ...இந்த ஆண்களின் மனம் இருக்கிறதே......

"இல்லையே உங்களை எங்கும் நான் பார்த்தது இல்லை இதான் முதல் தடவை "

என்று அவள் எனது சிந்தனையை கலைத்தாள்.
நான் பேக்கை திறந்து இரண்டு ஆபிள்களை எடுத்து பாக்கெட் கத்தியை வைத்து நறுக்கினேன். ஒன்றை அவளிடம் நீட்டினேன் மறுக்காமல் வாங்கி கொண்டாள்..அந்த பூ போட்ட குட்டி கத்தியை மீண்டும் பாக்கெட்டில் வைத்தேன்.

"எனக்கு தூக்கம் வருது நான் படுத்து கொள்ளடுமா " என்றாள்..

"ஆம் தாராளமாக " என்று கூறி விட்டு இருவரும் படுத்து கொண்டோம்..
நான் எனது பேகை திறந்து பெட்ஷீட் எடுத்து போர்த்தி கொண்டேன்.
பயணம் முடிவதற்குள் அவள் போன் நம்பரை வாங்கி விட வேண்டும் என்று நினைத்து கொண்டே உறங்கி போனேன்.

   ✳            ✳            ✳            ✳           ✳

எவ்வளவு நேரம் கடந்ததோ சரியாக தெரியாது (இந்த ஓடாத கடிகாரத்தை வைத்து என்ன நேரம் பார்ப்பது )
திடீரென விழித்துக் கொண்டேன்.
யாரோ முனகுவது போல் சத்தம் கேடட்டது.
சட்டென்று எழுந்து மானசா இருந்த இடத்தை பார்த்தேன் . அவள் போர்வைக்குள் இருந்து தான் முனகும் சத்தம் வந்து கொண்டு இருந்தது குரல் கொஞ்சம் கனமாக இருந்தது போல் தெரிந்தது.
வரும் போது அவளிடம் போர்வை ஏதும் இல்லையே என்பது நினைவில் வந்தது.
மேலும் இந்த போர்வையை எங்கோ பார்த்தது போல இருந்தது. (அட போர்வையை கூடவா...)
சட்டென்று நினைவு வந்தது ..இந்த பெட்சீட்.........

மெல்ல நெருங்கி அந்த போர்வையை விலக்கினேன் திடுகிட்டேன் அங்கே மானசா இல்லை அந்த பெட்டி மூட சொன்ன முதியவர் இருந்தார். முகம் முழுக்க ரத்தம் அப்பி இருக்க தலையில் பலமாக அடி பட்டிருப்பது  தெரிந்தது.

நான் நடுங்கும் கைகளால் மெல்ல அவரை தொட்டேன்.
தொட்டதுதான் தாமதம் மின்சாரம் தாக்கியது போல திடுக்கிட்டு எழுந்தார்.
எழுந்தவர் ஆம்புலன்ஸ் சைரன் போல அலறினார்.

"இவன் தான் சார்.. இவன் தான்.. "

என்றார் எனக்கு பின்னால் எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசினார். பின்னாடி திரும்பி பார்த்தேன் அங்கு யாரும் இல்லை.

" என்னது இவன் தான்...??. உங்க பெட்டியை மூடி விட்டவனா...?? " என்றேன்.

"சார் பிடிங்க " என்றான் மீண்டும் பின்னால் எங்கோ பார்த்து கொண்டு..

மீண்டும் பின்னால் திரும்பிப் பார்த்தேன். அட இவர்கள் எப்படி திடீரென்று முளைத்தார்கள்..?
அங்க நான்கு தடி மாடுகள் நின்றிருந்தார்கள். நால்வரும் மொட்டை அடித்து இருந்தார்கள்.
படத்தில் வரும் காஸ்டலி அடியாட்கள் போல கோட் அணிந்து இருந்தார்கள்.

"உங்களை கைது பன்றோம் மிஸ்டர் "
என்றான்  மலை போல வளர்ந்து இருந்த கருப்பு நிறத்தை மொத்தமாக குத்தகை எடுத்து இருந்த ஒருவன்.
வாயில் பபில்கம் போல எதையோ மென்று கொண்டு இருந்தான்.

கருப்பு கோட்.. மொட்டை... கையில் துப்பாக்கி... ஏதும் ஆங்கில பட காட்சியில் நுழைந்து விட்டதை போல இருந்தது..

"நீங்க போலீஸா... ?ஏன் யூனிபார்ம் ல இல்லை. எங்க உங்க id காட்டுங்க பார்க்கலாம்.." என்றேன் பதட்ட படாமல்.

ஒரு வேளை சிபி சிஐடி யா இருப்பார்களோ..? சிஐடி அளவுக்கு வொர்த் இல்லையே நான். இவர்களைப் பார்த்தால் ரயில்வே போலீஸ் போலவும் தெரியவில்லை சாதா போலீஸ் போலவும் தெரியவில்லை. குறைந்த பட்சம் சினிமா போலீஸ் போல கூட இல்லையே.
இவங்க போலீஸ் னா அதை குழந்தை கூட நம்பாது.

பக்கா அடியாளுக்கான 9 பொருத்தமும் சரியாக இருந்தது அவர்களிடம்..
அதை விட ஆச்சர்யம் சொன்னால் நம்ப மாட்டீர்கள் அவர்கள் நால்வரையும் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.. ஏன் யாரை பார்த்தாலும் அப்படி தோன்றுகிறது ?

"அதை உன் கிட்ட காட்டனும்  னு அவசியம் இல்லை " என்றான் அந்த மலை.

போலீஸ்காரர்களிடம் இதான் பிரச்சினை திடீரென்று ஒருமைக்கு தாவி விடுவார்கள் நீங்கள் இஞ்சினியரோ டாக்டரோ அவர்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.

நான் மானசா எங்கே என்று கண்களால் தேடினேன். அவளை காண வில்லை.

'இவர்கள் எப்பொழுது இந்தப் பெட்டியில் ஏறினார்கள்?'
எனது மனதை படித்ததை போல அவர்களே அதற்கு பதில் சொன்னார்கள்..

"நல்ல வேலை கொலை நடந்ததும் இவர் உடனே போன் பண்ணி தகவல் தெரிவித்தார் அடுத்த ஸ்டேஷனில் நாங்கள் வந்து உன்னை பிடித்து விட்டோம்.
ஆனால் நாங்கள் வருவதற்குள் இவரையும் தாக்கி வைத்து இருக்கிறாய்."

நான் அதிர்ந்து போய்
"என்னது கொலையா ?  "என்றேன்

அந்த வயதானவர் மீண்டும் ஓல குரலில் கூவினார்..
"ஏன் கண்ணு முன்னாடியே என் பெண்ணை வெட்டி ஓரு பெட்டியில் போட்டான் சார் .." நிறுத்தி விட்டு குழந்தை போல தேம்பினார் .எனக்கே பாவமா இருந்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள்..

"வேணும்னா அந்த பெட்டியில் கைரேகை சோதனை பண்ணி பாருங்க சார்" என்றார் முதியவர்.
 அடா பாவி. பெட்டியை மூடி விட்டது ஒரு குற்றமா. யார் மான்சாவையா சொல்கிறான். அய்யோ மானசா இறந்து விட்டாளா என்ன ?
மானசா உன் பெண்ணா.. ? எப்போ திடீர்னு 5 நிமிடத்தில் உன் பெண்ணானாள் ??
எனது பாக்கெட்டில் ஆப்பிளை நறுக்கிய பூ போட்ட கத்தி இருந்தது சம்பந்தம் இல்லாமல் நினைவுக்கு வந்து போனது.

அவர் சொல்லி முடிக்கவும்
அதில் ஒருத்தன்..

"சார் இங்க வாங்க இங்க ஒரு பெட்டி கிடக்குது " என்றான்..

மலை உடனே தனது பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து என்னை நோக்கி நீட்டினான்.
இந்த மாதிரி உயர்ரக கைத்துப்பாக்கியை நான் நம்ம ஊர் எந்த போலீசிடமும் பார்த்ததில்லை.

"ம் நட டா டே "

மரியாதை தேய்ந்து கட்டெரும்பாகி இருந்தது.

நான் மந்திரித்து விட்டவன் போல அவர்களுடன் நடந்து 3 சீட் தள்ளி அந்த பெட்டியை அடைந்தேன்.. மின் விளக்கை ஆன் செய்து இடத்தை வெளிச்சமாக்கினார்கள்.
அப்போதுதான் கவனித்தேன் இந்த பெட்டியில் எங்களை தவிர வேறு யாருமே இல்லை எல்லோரும் எங்கே போனார்கள் அனைவருமே நான் தூங்கும்போது இவர்கள் சொன்ன ஸ்டேஷனில் இறங்கி விட்டார்களா ?
ஒருவன் கூடவா மிச்சமில்லை ?

அதில் ஒருவன் கையில் துணி யை வைத்து மெதுவாக அந்த கனமான பெட்டியை திறந்தான்.

எனக்கு அதிர்ச்சியில் இதயம் வாய் வரை வந்து போனது...
ஒரு கணம் ரயில் சப்தம் எல்லாம் மியூட் இல் போட பட்டது போல மூளை நிசப்தம் ஆகி காதுகள் அடைத்து கொண்டது.

அங்கே..

சற்றுமுன் அழகு பதுமையாக இருந்த மானசா...
ரத்த வெள்ளத்தில் வெட்ட பட்டு சிதறிய பூசணிக்காய் போல இருந்தாள்.

நான் போன் நம்பர் வாங்குவதற்குள் இறந்து போய் இருந்தாள்..


தடக் தடக் தொடரும்.........

🚉    🚉    🚉    🚉     🚉     🚉    🚉    🚉

அத்தியாயம் 5 :

இந்த 5 ஆவது அத்தியாயத்தின் ஆரம்ப வரிகளை நீங்கள் இந்த கதையின் முதல் அத்தியாயத்தின் ஆரம்ப வரியிலேயே படித்து விட்டீர்கள் தான் என்றாலும்.. அதை ரத்தமும் சதையுமாக நான் இப்போது அனுபவித்து கொண்டு இருந்தேன்.
ஆம் இந்த பயணம் எனது ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு திகில் பயணமாக இருக்கும் என்று முகில் ஆகிய நான் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை.

என்னை சுற்றி ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது ஏதோ ஒன்று விசித்திரமாக நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது அது என்ன என்பது தான் புரிந்து கொள்ள முடியவில்லை. அது அமானுஷ்யமா அறிவியலா.. யாரும் செய்யும் சதியா என்றே புரியவில்லை. யாரும் எனக்கு சூனியம் வைத்து விட்டார்களா என்று கூட தோன்றியது.

மீண்டும் ஒரு முறை மானசா வை சாரி..அவள் டெட் பாடியை பார்த்தேன்..
சலனமற்று கிடந்தாள் ..ஏடா கூடமாக ஏதோ ஒரு கோலத்தில் கோணத்தில்..மடங்கி ரத்த சகதியாக...

நீண்ட இனிமையான ஒரு காதல் பயணமாக இந்த பயணம் இருக்கும். எனது துணையாக மானசா இருப்பாள் என்று நான் நினைத்து நான் கட்டிய மன கோட்டை  இன்றைய அரசியல்வாதிகள் கட்டிய பாலம் போல  இவ்வளவு சீக்கிரமாக இடிந்து விழ வேண்டுமா?
ரயில் முகில் காதல் என்று என்று எனது பயண கதைக்கு தலைப்பு எல்லாம் வைத்து இருந்தேனே.. இனி என்ன வென்று வைப்பேன்.. 'ரயில்,முகில்,சாதல் ' என்றா ?

அந்த மானசா பிணத்தில் ஒரு ஆச்சர்யத்தை கவனித்தேன். அவள் இப்போது மீண்டும் வெள்ளை சுடி அணிந்து இருந்தாள்.
இருள் ஸ்டேஷனில் ஓடி வரும் போது அணிந்திருந்த அதே உடை.
மீண்டும் குழப்ப மேகம் என்னை சூழ தொடங்கியது. என் மூளைகுள் சந்தேக மழையை அது பெய்ய தொடங்கியது. என் மூளையில் யாரோ புகுந்து குழப்பம் விளைவிக்கிறார்களா ?
நான் ஏதும் வசியத்தில் இருக்கிறேனா யாரோ காட்ட நினைக்கும் காட்சியை தான் நான் காண்கிறேனா ?

நீண்ட நாள் முன்பு ரயிலில் கொள்ளை அடிக்கும் ஒரு கோஷ்டி பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. அவர்கள் ரயிலில் ஏறி தனியாக இருப்பவர்களிடம் பேச்சு கொடுப்பார்கள் அவ்ளோ தான் என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியாது. முழித்து பார்த்த போது பொருட்கள் நகைகள் காணாமல் போய் இருக்கும். அவர்கள் யாரும் மயக்க பொருள் கொடுத்து மயங்க வைப்பவர்கள் அல்ல. அவர்கள் ஹிப்னாடிச கலை பயின்றவர்கள். கண்ணை உற்று பார்த்து நம்மை மயங்க வைக்க கூடியவர்கள்.

ஆனால் வசியத்தில் இருப்பவர்களுக்கு ஒரு மிக பெரிய அறிகுறி இருக்கிறது.
ஒருவன் தான் தூங்கும் போது தான் தூங்குவதை உணர முடியாது. வசியதிலும் அப்படி தான். வசியத்தில் இருக்கும் ஒருவன் தான் வசியத்தில் இருக்கிறோமா என்று ஒரு போதும் சந்தேகிக்க மாட்டான். அப்படி சந்தேக பட்டால் உடனே வசியத்திலிருந்து வெளியேறுவான்.
என்னை சுற்றி உள்ள குழப்பம் என்ன விதமானது என்று முடிவிற்கு வர முடியாமல் தவித்தேன்.

அந்த மிராண்டா மொட்டை தனது கைத்துப்பாக்கியை இப்போது என்னை நோக்கி மிக உறுதியாக திருப்பியிருந்தான்.

"இங்க பாரு நீ தப்பிக்க முடியாது ஒழுங்கா உண்மையை ஒத்துகிட்டு சரண் அடைந்து விடு..." என்று கர்ஜித்தான் மலை.
வேட்டை நாயின் கூர்மை இருந்தது அவன் குரலில்..

" உண்மையா ?என்ன உண்மை ? நான் ஒரு சாதாரண பயணி இதான் உண்மை.
லக்னோ சென்று கொண்டிருக்கிறேன் இதான் உண்மை. என்னை சுற்றி அசாதாரணமாக ஏதோ நடந்து கொண்டிருக்கிறது அதான் உண்மை...
நீங்க எல்லாம் யார் என்ன திடீர் திடீரென்று வருகிறீர்கள். அந்தப் பெண் அந்த வயதானவர் .. உங்களை போலீஸ் என்று சொல்லிக் கொள்கின்ற நீங்கள் எல்லோருமே ஏதோ பெரிதாக எனக்கு எதிராக சதி செய்வதாகவே தெரிகிறது ..
உண்மையை நீங்க சொல்லுங்க யார் நீங்க எல்லாம் ஏன் உங்க எல்லாரையும் எங்கேயோ பார்த்தது போல் தெரிகிறது எனக்கு.. ?ஏன் எனக்கு குழப்பம் ஏற்படுத்துகிற வகையில் ஏதேதோ செய்கிறீர்கள் ?உண்மையை சொல்லுங்கள் இல்லையேல் போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவேன் "

என்று உணர்ச்சிவசப்பட்டு கடகடவென்று பேசி முடித்தேன்.

அவர்கள் மூன்று வினாடி மௌனமாக இருந்துவிட்டு..பிறகு நூற்றாண்டின் சிறந்த ஜோக்கை கேட்டது போல விழுந்து விழுந்து சிரித்தார்கள். அந்த வயதானவனும் அவர்கள் சிரிப்பில் கெக்கே பிக்கே  என்று கலந்து கொண்டான்.

' ஏண்டா டேய் உன்னுடைய பொண்ணு செத்துப் போயிருக்குனு சொல்ற இந்த சூழல்ல யாருக்காவது சிரிப்பு வருமா' என்று நினைத்துக் கொண்டேன்.

இப்போது இவர்களில் யாராவது எனது பாக்கெட்டை சோதனை போடப் போகிறார்கள். அதில் ஆப்பிளை நறுக்கி விட்டு நான் வைத்திருக்கும் பாக்கெட் கத்தியை எடுக்கப் போகிறார்கள். அதையும் எனக்கு எதிரான ஆதாரமாக சேர்க்கப் போகிறார்கள் என்று உள்ளுணர்வு சொன்னது. ஆனால் நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை.

இப்போது மலை எதிர்பாராத ஒன்றைச் செய்தான். எனக்கு பின்னால் நின்று இருந்தவனை பார்த்து ஏதோ சைகை செய்தான்.
சடாரென்று எனது பின்னந்தலையில் ஒரு மின்னல் வெட்டியதை உணர்ந்தேன். உடனே
நினைவுகள் இழந்து மூர்ச்சை ஆகி கீழே விழுந்...............

     ✴              ✴                  ✴                ✴

இரண்டு பெரிய ராட்சத பல்சக்கரங்கள் ஒன்றை ஒன்று அரைத்துக்கொண்டு 35 அடி உயர கூரையில் இருந்து மேலிருந்து கீழே இறங்கியது.. மேலே கண்கூசும் ஒளி. கலிலியோ கண்டு பிடித்த பென்டுல பிஸிக்ஸ் ஐ ஒட்டி ஆடி கொண்டே அது வந்தது. Saw படத்தின் காட்சியை அது நினைவு படுத்தியது.
அது ஒரு மிக பெரிய தொழிற்சாலையாக தான் இருக்க வேண்டும்.
அந்த பல்சக்கரங்கள் கீழே இறங்கும் இடத்தில் கீழே ஒரு ஸ்ட்ரெச்சரில் நான் கிடத்தப்பட்டு இருந்தேன். அந்த பல்சக்கரங்கள் ஒன்றை ஒன்று அரைத்துக்கொண்டு நேராக இறங்கி எனது உடலை இரண்டாக... துண்டாக... வெட்டி அரைத்தது.. துண்டான ஒரு பகுதியிலிருந்து எனது மறு துண்டை பார்த்து அலறிய போது .....
சடாரென கண் விழித்து கொண்டேன்.

தடக் தடக்... தடக் தடக்...

அதே ரயில் அதே இடம்.. ஆனால் இப்பொழுது நான் கட்டப்பட்டு இருந்தேன். கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு சீட்டில் தள்ளப்பட்டு இருந்தேன். எதிரே அந்த நான்கு தடி மாடுகளும் கையில் நீட்டிய துப்பாக்கியுடன் தேவுடு காத்து கொண்டிருந்தார்கள்..
'எந்த போலீஸ் இப்படி கட்டுவதற்கு கைல கயிரோடு சுத்தராங்க ' ??

அந்த வயதான ஆசாமி ஏதும் நடக்காதது போல ஜன்னலோரத்தில் சாய்ந்து அமர்ந்து வெளியே இருட்டில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான். முகத்தில் மெல்லிய புன்னைகை இருந்தது போல கூட தோன்றியது.

" என்ன ஹீரோ கண்ணு முழிசுட்டீங்க போல " என்றான் மலை..

"யார் சார்  நீங்கயெல்லாம் என்ன ஏன் இப்படி எல்லாம் பன்றிங்க.." என்றேன் பரிதாபமாக .

" அதான்... சொன்னோமே நாங்கள் போலீஸ் என்று.. ஓடும் ரயிலில் ஒரு இளம்பெண்ணை கொன்றதற்காக உன்னை கைது செய்ய வந்தோம் கைது செய்துவிட்டோம் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி உன்னை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செல்ல வேண்டும். அவ்வளவு தான். போதுமா.. இல்ல வேற ஏதாவது கேள்வி இருக்கா "

இந்த பெட்டியில் இருந்த மற்ற ஆட்கள் என்ன ஆனார்கள் எல்லோருமே கீழே இறங்கி விட்டார்களா என்ன?
இவர்களை அதிகம் பகைத்துக்கொண்டால் நஷ்டம் எனக்கு தான் என்று தோன்றியது . கொஞ்சம் இறங்கி சென்று பேசலாம் என்று முடிவு செய்தேன்.

"ஆபீசர் இங்க பாருங்க.. இது என்ன ஊர் .நான் இப்ப எங்க இருக்கேனாவது சொல்லுங்க ப்ளீஸ்... நான் கிளம்பியதில் இருந்தே எங்கே போய் கொண்டு இருக்கிறேன்னே தெரியல " என்றேன்.

அவன் பதில் எதுவும் சொல்லாமல் ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு அந்தப் பக்கமாக திரும்பி கொண்டான்.

" ஆபீஸர் ப்ளீஸ் நான் எங்கே இருக்கிறேன் என்று தெரிந்து கொள்ளக் கூட எனக்கு உரிமையில்லையா "

அவன் மெதுவாக ஜன்னல் பக்கம் பார்த்தான்.. ஊதை காற்றை கிழித்து கொண்டு இருட்டில் ரயில் முன்னேறி கொண்டு இருந்தது... நிலவொளியில் இடத்தை கண்ணால் ஆராய்ந்து...

"நீ இப்ப "call-con" ல இருக்க .இன்னும் முக்கால் மணி நேரத்தில் ஸ்டேஷன் வரும் .." என்றான்.

என்னது அப்படி ஒரு ஊரா... நான் திகைத்து போனேன்.. இந்தியாவில் லக்னோ செல்லும் வழியில் இப்படி ஒரு ஊரை நான் கேள்விப்பட்டதே இல்லையே. அதைவிட முக்கியம் ஆம் இப்போது ஒன்றை நீங்கள் யூகித்து விட்டு இருப்பீர்கள். ஆம் இந்த "call-con... " எங்கேயோ கேள்வி பட்ட மாதிரி இல்ல..??
அந்த இருண்ட ஸ்டேஷன்.. விளம்பர போர்டு..

நான் இந்தியாவிலேயே இல்லையா ? அது எப்படி சாத்தியம் 7 மணிக்கு சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தானே கிளம்பினேன்.. இவர்களும் தமிழ் தானே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் எப்படி சம்பந்தமில்லாத ஏதோ 'கால்கானி'ற்கு நான் எப்படி வரமுடியும். ?

நான் ஒன்றை கவனித்தேன் நான் முதலில் தூங்கும் வரை எல்லாம் சரியாக தான் இருந்தது .தூங்கி எழுந்த பின் நடப்பது எல்லாமே குழப்பமாக இருக்கிறது.
டேனியல் கொடுத்த காபியில் போதை வஸ்து ஏதும் இருந்ததா என்ன ?

எது எப்படியோ நான் இப்போது ஒரு முடிவு செய்து இருந்தேன்.. அது இவர்களிடம் இருந்து தப்புவது என்று.

"ஆபீசர் ! " என்றேன் குழைவாக. முடிந்த அளவு கஷ்ட பட்டு வார்த்தையில் தேன் தடவினேன்.

அவன் எக்ஸாமில் படித்து விட்டு வந்து எழுதும் மாணவன் தன்னிடம் சீண்டும் மக்கு பைய்யனை பார்க்கும் பார்வை போல ஒரு வேண்டா வெறுப்பு பார்வை பார்த்தான்...

"என்ன " என்றான்.
வார்த்தையில் முடிந்தளவு வேப்பந்தழை தடவி இருந்தான்.

"கைகள் கட்ட பட்டு இருக்கு ..இல்லைனா ஒரு விரல் காட்டி இருப்பேன் ஆபீசர்.. வெரி அர்ஜெண்ட் " என்றேன். மீண்டும் தேன்.

அவன் சைகை செய்ய இன்னொரு மொட்டை என்னை நெருங்கி எனது கட்டை கொஞ்சம் மாற்றி அமைத்து முன் பக்கம் கைகளை வைத்து கட்டினான். "வா நட " என்றான்.

"ஆபீசர் ப்ளீஸ்.. கட்டை முழுசா அவிழ்த்து விடாமல் எப்படி யூரின் போக முடியும்.
நான் உங்களை விட்டு ஓடும் ரயிலில் எங்கே தப்ப முடியும்.. கட்டை 5 நிமிடம் அவிழ்த்து விடுங்கள் ப்ளீஸ் " என்றேன்.

"இதே போதும் உனக்கு ..கொஞ்சம் முயற்சி பண்ணு .. வசதியா வச்சி தான் கட்டி இருக்கோம்.. முடில னா பேன்ட் லயே போ " என்றான்.
அதை கேட்டு அந்த கிழவன் உட்பட அனைவரும் பக பக என்று சிரித்தார்கள்.

அந்த மலை உரும .. இன்னொருவன் என்னை பாத்ரூம் அழைத்து சென்று கதவை மூடினான்.

"ம் சீக்கிரம் "என்றான் .

நான் கதவை மூடிய உடன் வேகமாக செயல் பட்டேன் என்னிடம் அதிகம் நேரம் இல்லை. முன்பக்கம் கட்ட பட்ட கையை அசைத்து அசைத்து கொஞ்சம் கொஞ்சமாக பாக்கெட் பக்கம் கொண்டு போனேன்.
ஒரு கோணத்தில் கஷ்ட பட்டு மடங்கி அந்த பூ போட்ட கத்தியை இலக்காக வைத்து கையை நகர்த்தினேன். அது அவ்வளவு எளிதானதாக இல்லை. நண்டு போல கைகளை வளைத்து வலிகளுக்கு இடையில்....
அப்பாடா.. அந்த கத்தியின் முனை தொட்டேன். அதன் இரும்பு தீண்டல் பெரிய பரவசமாக இருந்தது.. காலை மடக்கி தூக்கி உடலை உதறினேன் கத்தி கொஞ்சம் வெளிப்பட்டு கையில் சிக்க டக்கென்று இரு விரலால் பிடித்து இழுத்தேன்.
இப்போது கையில் கத்தி இருந்தது .பலசாலியாக உணர்ந்தேன். உடனே அடுத்த செயலில் இறங்கினேன். கைகளின் கயிறை பர பர வென்று அறுக்க தொடங்கினேன்.

மேலே சொன்ன சம்பவங்கள் நீண்ட காலம் போல தோன்றியது. ஆனால் ஆச்சர்யமாக 1.15 நிமிடத்திற்குள் முடித்து இருந்தேன்.

"இன்னுமா முடில ? " வெளியே அந்த மொட்டை குரல் கொடுத்தான்.

'இருடா நாயே இன்னும் ஒரு கயிறு பாக்கி இருக்கு '

"இதோ ஆச்சு  ஆபீசர்.." என்றேன்..
"படக் " அந்த கயிறு அறும் சப்தம் அப்போதைக்கு காதலியின் குரலைவிட இனிமையான குரலாக ஒலித்தது எனக்கு.

கைகள் முற்றிலும் விடுதலை அடைந்து இருந்தது.

அடுத்த 15 ஆவது விநாடி பாத்ரூம் கதவை திறந்தேன்.
கைகளில் கட்டுகள் பார்க்க இயல்பாக இருப்பது போல சுற்றி இருந்தேன்.. இருட்டில் அது அறுந்து இருந்ததை அவன் கவனிக்க வில்லை.

கட்டுகள் அவிழ்த்தாச்சு சரி.. அடுத்து என்ன ? இவர்களை தாக்கி விட்டு தப்புவது எனக்கும் என்னிடம் உள்ள குட்டி கத்திக்கும் அதிகப்படியான ஒன்று. ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. நான் தனி ஒருவன் அவர்கள் நான்கு பெயரை வீழ்த்தி ஆக வேண்டும்.

குழப்பான சிந்தனையில் ரயில் கதவை கடந்த போது குளிர் காற்று வேகமாக அறைந்தது உடல் முழுக்க சிலிர்த்தது.
வெளியே நிலா ஒளியில் அந்த காட்டு பகுதி மிக ரம்மியமாக இருந்தது. ரயில் ஏதோ மேட்டில் ஏறி கொண்டு இருந்தது. தூரத்தில் ஏதோ மலை பகுதி தெரிந்தது அப்புறம் தூரத்தில் ஒரு மாதிரி வளைந்த கூம்பு வடிவில் ஒரு மலை அதில் அருவி... அது பால் அபிஷேகம் போல் அவ்வளவு அழகாக இருந்தது.
அந்த சூழலிலும் மனம் அந்த இயற்கை அழகை ரசித்தது எனக்கே ஆச்ரயமாக இருந்தது.

"இங்க நின்னு என்னடா வேடிக்கை பாக்கர ம்.. நட "

வெளியே ரயில் அசுர வேகத்தில் பறந்து கொண்டு இருந்தது.

நான்  கொஞ்சமும் யோசிக்காமல் இதை செய்தேனா.. அல்லது மிகுந்த யோசனைக்கு பின் இதை செய்தேனா என்று சரியாக சொல்ல முடியவில்லை.

வினாடியில் 10 இல் ஒரு பாகத்தில் இதை முடிவு செய்து செயல் படுத்தினேன்.
அசுர தனமாக பேய் போல ஓடும் அந்த ஹெவன் எக்ஸ்பிரஷின் திறந்து கதவுகள் வழியே .......
அந்த மொட்டை எதிர்பார்க்காத ஒரு வினாடியில் .........
அம்பு போல காற்றை கிழித்து கொண்டு  வெளியே எகிறி குதித்தேன்.


தடக் தடக் தொடரும்................


🚉    🚉    🚉    🚉     🚉     🚉    🚉    🚉

அத்தியாயம் 6 :

நான் வசிக்கும் ஸ்ரீகாமாக்ஷி நகர் இருக்கிறதே.. கொஞ்சம் நெருக்கமான சந்துகளும் பரபரப்பான டிராபிக்களும் நிறைந்த தெரு. தினமும் அந்தப் பிள்ளையார் கோவில் சந்து வழியாக தான் பைக்கில் ஆபிசுக்கு செல்வேன் பிள்ளையார் கோவிலில் 'ஆசை பிள்ளையார் ' என்ற பெயரில் பிள்ளையார் அருள் பாலிக்கிறார்.
கோவிலை அடைவதற்கு முன்பே அந்த பார்பர் ஷாப் ஒன்று இருக்கிறது. அந்த கடையின் அந்த முரட்டு மீசை வைத்த பார்பர் இருக்காரே....

ஒரு நிமிடம் இருங்கள் நான் எங்கள் தெரு பார்பரை..பற்றி திடீர் என்று ஏன் சொல்லி கொண்டு இருக்கிறேன் ?   நான் இப்பொழுது சொல்லவேண்டியது அது இல்லையே !
அய்யோ சாரி... கொஞ்சம் குழப்பம்.. கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்.
நான் கதையை எங்கே விட்டேன் ?

......ஆம் என்னை மாய வலையில் சிக்க வைத்து இருக்கும் அந்த hell express இன் (ஆம் இதான் பொருத்தமான பெயர் ) பிடியில் இருந்து தப்பி , ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்தேன்.

"ஷட்டட்ட் " என்ற ஒலியுடன் எனது மண்டை தரையில் மோதி..
கபாலம் பிளந்து..
ரத்த களரியாக.. நாளை நியூஸ் பேப்பரில் வாட்ஸ் அப் பதிவில் நீங்கள் முகம் சுளித்துக்கொண்டே உச் கொட்டி கொண்டு பார்க்கும்படி..
சட்னி முகமாக எனது பிணம்.....

இப்படி தான் எதிர்பார்த்தேன் அதனால் கண்களை இறுக மூடிக்கொண்டு குதித்து இருந்தேன்.  ஏன் இதைச் செய்தேன் என்று எனக்கு சரியாக தெரியாது. அந்த ரயிலில் இருந்து தப்பினால் போதும் என்ற ஒரு வினாடி வேகம்.. இதை செய்ய தூண்டியது. உண்மையில் எனக்கு சாக ஆசை இல்லை துளியும் இல்லை.. அய்யோ என் மண்டை சிதறு தேங்காய் ஆக போகிறது. யாராவது காப்.......

🕸 " ஸ்ஸ்ப்ளாஸ்ஸ்ஸ் ...." என்று மிக குளிரான நீர் முகத்தில் அறைய கண்ணைத் திறந்து பார்த்தேன். எனக்கு நிச்சயமாக அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். வேகமாக ஓடும் ஒரு காட்டாறு ஒன்றில் விழுந்து இருந்தேன்.

மேலே அண்ணாந்து பார்த்தேன். மேலே பாலத்தில் நான் வந்த ரயில் கட கட என்று பாலம் அதிர ஓடி கொண்டு இருந்தது. நான் இருட்டில் டாட்டா காட்டினேன்.. கொஞ்சம் சிரித்து கொண்டேன்.. ஹு... ஒரு வழியா தப்பி விட்டேன்.
அப்பாடா வேடனின் பெரிய வலையில் இருந்து தப்பிய மான் குட்டி போல ஒரு உற்சாகம் கண்டது எனது மனது. பிரேக் அப் ஆன காதலன் போல சுதந்திரமாக உணர்ந்தேன். மீண்டும் ஒரு முறை சிரித்து கொண்டேன்.

ஆனால் கொடுமை என்ன வென்றால்..அந்த சிரிப்பு அதிக நேரம் நீடிக்கவில்லை.

காரணம் அடுத்தடுத்த நான் உணர்ந்த இரு பெரும் மரண பிரச்சனைகள். ஒன்று இந்த காட்டாற்றின் வேகம்... அது நான் வந்த ரயிலை விட மோசமான வேகத்தில் இருந்தது . கரை ஏறுவது சாமான்யமான விஷயமாக இருக்க போவது இல்லை. அடுத்து அதன் குளிர். நான் இதுவரை வாழ்நாளில் அனுபவித்து இராத பனி ஆற்றின் குளிர். அப்போது தான் அந்த ஆச்சர்யத்தை கவனித்தேன். அது பனி ஆறு 'போல 'இல்லை. பனி ஆறே தான். ஆங்காங்கே வெள்ளை பனி மிதந்ததை நிலவொளில் அப்போது தான் கவனித்தேன். ஆற்றை தொடர்ந்து கொஞ்சம் ஆச்சர்யத்திலும் மூழ்கினேன். லக்னொ செல்லும் வழியில் பனி ஆறா..? இதென்ன வழி மாறி வண்டி இமாலயா பக்கம் ஏதும் வந்து விட்டதா ? இந்த பனி ஆறு எப்படி சாத்தியம் ?

உடலெங்கும் கத்தி சொருகுவது போல குளிரில் நான் நிதானம் இழந்தேன்.
கானகத்தில் ஆழ்ந்த மௌனத்தை இரண்டாக கிழித்து கொண்டு ஓடும் இந்த கொடிய ஆற்றில்.. அதுவும்
மைனஸ் டிகிரியில் இப்படி தாறு மாறு வேகத்தில் ..தூசு போல அடித்து செல்லும் நான்.  அதற்கு மேல் தாங்க முடியாமல்.. மயக்கமானேன். அல்லது உயிரிழந்தேனா என்று சரியாக தெரிய வில்லை. ஆனால் நினைவு தப்பும் முன் கடைசியாக எனக்குள் தோன்றிய வார்த்தை ..

"இதற்கு அந்த ரயிலே பரவா இல்லை "

           ✴             ✴            ✴              ✴

🕸 நான் வசிக்கும் ஸ்ரீகாமாக்ஷி நகர் இருக்கிறதே.. கொஞ்சம் நெருக்கமான சந்துகளும் பரபரப்பான டிராபிக்களும் நிறைந்த தெரு. தினமும் அந்தப் பிள்ளையார் கோவில் சந்து வழியாக தான் பைக்கில் ஆபிசுக்கு செல்வேன் பிள்ளையார் கோவிலில் 'ஆசை பிள்ளையார் ' என்ற பெயரில் பிள்ளையார் அருள் பாலிக்கிறார். அதற்கு பக்கத்தில் இருக்கும் அந்த மீசை பார்பர் ஐ கடந்து சென்றால் பிள்ளையார் கோவில் அருகில் ஒரு பெண் தினம் பூ கட்டி விற்று கொண்டு இருப்பாள். ஒல்லியாக இருப்பாள்..
ஆனால்  எனது மூளை ஏன் இதை சிந்திக்கிறது? என்று சிந்தித்த போது..

டங் என்று பிள்ளையார் கோவில் மனி  ஒன்று எனது மூளையின் மூலைக்குள் அடித்தது.
அந்த பூ கட்டும் பெண் அவளது வேகமாக இயங்கும் கைகள்..அவளது மெலிந்த தேகம்.. நினைவில் வந்து போனது.  பெரிய சிக்கல் ஒன்றில் முடிச்சின் நுனி ஒன்று தட்டு பட்டது போல் இருந்தது. பயங்கர இருளில் சிக்கியவனுக்கு ஒரு மின் மினி பூச்சி யின் வெளிச்சம் கூட மிக பெரிய ஆறுதல் தான்.
மிக பெரிய பூட்டுகளை திறக்கும் சாவி சின்னதாக தான் இருக்கும் . அவ்வளவு பெரிய ராக்கெட் ஐ உயிர்பிக்கும் ட்ரிக்கர் வெறும் 12 வோல்ட் சப்ளையில் இருந்துதான் தொடங்குகிறது.
இந்த பூக்காரி எனது சிக்கலை விடுவிப்பதற்கான சின்ன ட்ரிகராக  தோன்றினாள்.  இடியாப்பமாய் சிக்கி கிடக்கும் சிக்களின் முடிச்சை அவிழ்க்கும் ஒரு நூல் முனையாக அவள் தோன்றினாள். அது எப்படி என்றால்...

'சொத் ' என்று விலாவில் ஏதோ குத்தியது. ஆமாம் பூக்காரி பற்றி சிந்தித்துக் கொண்டு நான் இப்போது எங்கே இருக்கிறேன் ?
ஆற்றில் இன்னுமா நான் மூழ்க வில்லை ?

கண்ணை மெல்ல திறந்து பார்த்தேன் முதலில் கண்ணுக்கு தெரிந்தது அந்த வானத்தை தொடும் மரம் தான்.. சட்டென்று கண்களை சுழற்றி நான் எங்கே இருக்கிறேன் என்று பார்த்தேன்.
பக்கத்தில் அந்த ஆறு பேய்த்தனமாக ஓடிக் கொண்டிருக்க நான் அந்த ஆற்றின் கரையில் புல் மெத்தையில் படுத்திருந்தேன். ஆற்றில் அடித்துக் கொண்டு வரும் போதே இந்த மரங்களை நான் கவனித்தது நினைவு வந்தது. இந்தக் காட்டின் மரங்கள் மிகவும் அசாதாரணமான உயரத்திற்கு வளர்ந்து இருந்தது. சொல்லப்போனால் மரங்களை இவ்வளவு உயரத்திற்கு நான் எங்கேயும் பார்த்ததில்லை அதன் உச்சி கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு மேகத்தை முட்டிக்கொண்டு இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் நான் கவனித்த இன்னொரு விசித்திரம் அனைத்து மரங்களிலும் ஏதோ ஒரு ஒழுங்கு இருந்தது. அனைத்து மரங்களும் ஒரே மாதிரி ஜெராக்ஸ் எடுக்க பட்டது போல் இருந்தது. மேலும் மிக வரிசை வரிசையாக வீட்டு தோட்டத்தில் இருப்பது போல இருந்தது. ஒரு காட்டின் மரங்கள் இப்படியா இருக்கும்.. ?

நான் படுத்து கொண்டே பக்கத்தில் தலை சாய்த்து அதை பார்த்தேன். அந்த அருவி.. வளைந்த மலை முகட்டில் இருந்து ஊற்றும் அந்த அருவி.. நான் தூரே ரயிலில் இருந்து பார்த்து ரசித்த அந்த அருவி. ஆற்றில்  அடித்து கொண்டு இங்கே வரை வந்து இருக்கிறேன்.

அப்போது தான் ...
அந்த முரண் முதல் முதலாக உறுத்தியது .

ஒருவன் ஆற்றில் அடித்து கொண்டு அருவிக்கு வருவது சாத்தியம் இல்லாத விஷயம். அருவி விட்டு ஆறுகள் தொலைவில் மட்டுமே செல்லுமே தவிர அருவியை நோக்கி ஒரு போதும் ஆறுகள் வராது .
முன்பிருந்தே.. எனக்குள் தோன்றிய விஷயம்..இங்கே ஏதோ ஒன்று சரி இல்லை . ஆனால் இப்போது தோன்றுவது என்ன வென்றால் 'இங்கே எல்லாமே சரி இல்லை. எதுவுமே சரி இல்லை '

மெல்ல ஆச்சர்யம் தாக்க புல் வெளி மணலில் நிமிர்ந்து உட்கார்ந்தேன் எனக்கு முன்னால் இருந்த அந்த அருவியை நிலா ஒளியில் உற்று பார்த்தேன். ஆச்சர்யத்தில் எனது மூளை நியூரான்கள் செயல்படாமல் ஒரு கணம் நின்று மீண்டும் இயங்கியது. அங்கே நான் கண்ட காட்சி அப்படி.
அந்த அருவி மலையில் தலைகீழாக மேல் நோக்கி ஏறி கொண்டிருந்தது.

 எனது வழக்கமான உலகம் வழக்கமான ரியாலிட்டியில் நான் இல்லை என்று தெள்ள தெளிவாக எனக்கு புரிந்தது. நான் ஏதோ ஒரு கற்பனை பண்ண முடியாத விபரீத உலகில் சிக்கி இருக்கிறேன். என்ன தான் நடக்கிறது என்னை சுற்றி ? இங்கே இந்த இடத்தின்  பிஸிக்ஸ் ஏன் தாறு மாறாக வேறாக இருக்கிறது ? அதிக பட்சமாக இது கனவில் தான் சாத்தியம்.. நான் இன்னும் அந்த ஓடும் ரயிலில் தான் உறங்கிக் கொண்டிருக்கிறேனா இவைகளெல்லாம் எனது கனவா ?

"நீங்களெல்லாம் சொற்பனம் தானோ வெறும் அற்ப மாயை களோ..." என்ற பாரதி வரிகள் தான் நினைவில் வந்தது.

யாரும் என்னை  சுற்றி செயற்கை உலக காட்சியை ஹாலோக்ராபிக் போல ஒளி பரப்பி என்னை இயக்கி  விளையாடுகிறார்களா என்ன... ?
ஆனால் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை காரணம் எனது உடல் உணரும் வலி.. இது என்னை சுற்றி ஏதும் virtual reality இல் நான் இல்லை என்பதை எனக்கு தெள்ள தெளிவாக  உணர்த்தியது. ரயிலில் மொட்டையிடம் மண்டையில் வாங்கிய அடி ஆகட்டும்.. அல்லது பனி ஆறு எனது உடலை ஊடுருவிய வலி ஆகட்டும் இவைகள்  நான் நிஜமான உலகத்தில் தான்  அனுபவித்து கொண்டு இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தியது. ஆனால் இது எப்படி சாத்தியம் என்று தான் புரியவில்லை.
ஒரு வேளை ஹாலுசிநேஷன்.. ஸ்பிலிட் பர்சனாலிட்டி.. மல்டிபல் பர்சனாலட்டி.. என்று ஏதும் மன நோயில் சிக்கி கொண்டேனா ? மீண்டும் அந்த லாஜிக் இடித்தது.. 'ஒரு மனநோயாளியால் தான் ஒரு மனநோயாளி என்று சந்தேக பட முடியாது'.

ஒரு வேளை parallel universe என்கிறார்களே.. குவாண்டம் பிஸிக்ஸ் காரர்கள் . அப்படி ஏதும் சங்கதியில்  வந்து சிக்கி கொண்டேனா.. அங்கே நம்மை போலவே ஒரு காபி இருக்கும் என்கிறார்களே.. ஒருவேளை இந்த உலகில் என்னை நானே சந்திப்பேனா ?
எனக்கு அறிவியலில் அதிகம் நாட்டமும் அறிவும் இருந்தது இல்லை. ஆனால் இந்த மாதிரி சிக்கலுக்கு விடை தரும் அறிவியல் புலி ஒருவன் இருக்கிறான். அவன் தான் நண்பன் டேனியல்.

நான் தீர்மானித்தேன் ஆம் அவனை தான் எப்படியாவது தொடர்பு கொள்ள வேண்டும். அது மட்டும் முடியும் என்றால் எனது விசித்திர நிலைக்கு விடை கிடைத்து விடும் . இயங்காத செல்போன் வைத்து... அதுவும் இப்போ அது நீரில் மூழ்கி ஈராமாகி இருக்கும்.. இதை வைத்து எப்படி டேனியலை தொடர்பு கொள்வது. நான் யோசிக்க தொடங்கினேன். தீவிரமாக யோசிக்க தொடங்கினேன்.. எப்படி..??எப்படி....??

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்..அந்த பூக்காரி....

அப்போது எனது விலாவில் மீண்டும் அது குத்தியது... இதோ மீண்டும் ஒரு வலி.

அப்போது தான் எனக்கு பின்னால் நான் திரும்பி பார்த்தேன்.

கையில் நீட்டிய கூர் ஈட்டியுடன் அந்த காட்டு வாசி நின்று இருந்தான். நிலவொளியில் கருப்பு சிலை போல இருந்தான். தடித்த உதடு.. தூண் போன்ற கால்கள்.
 உடலெங்கும் வெட்டு தழும்பு போட்டு முதுகில் கைகளில் முதலை தோல் டிசைனை முயற்சி பண்ணி இருந்தான்.
இருட்டில் அவன் பல் மட்டும் பளிச்சென்று தனியாக தெரிந்தது.

மீண்டும் எனது விலாவில் ஈட்டியால் குத்தினான்.

நான் ஆச்சர்யம் விலகாமல் அவனை பார்க்க அவன்.. என்னை பார்த்து
தெள்ள தெளிவாக ஆங்கிலத்தில்..

"Welcome to call-con "  என்று கூறி மேலும் ஆச்சர்யத்தை கொடுத்தான்.

நான் திகைத்து போய்  சிலையாகி நின்றேன்.


தடக் தடக் தொடரும்..........

🚉    🚉    🚉    🚉     🚉     🚉    🚉    🚉

அத்தியாயம் : 7

என்னது ஆங்கிலத்தில் பேசும் காட்டுவாசியா...?
நான் திகைத்துப் போய் பார்க்க அவன் என்னைப் பார்த்து "ஹுகாய் ஹுய்' என்றான் காட்டு வாசி பாஷையில்.

இப்போ தானே ஆங்கிலத்தில் பேசினாய் ?

அவன் குத்திய இடத்தில் விலா எலும்பை தொட்டு பார்த்தேன் மெலிதாக இரத்தம் வந்திருந்தது.
அவன் பதில் ஏதும் பேசாமல் தனது இடையில் இருந்த கட்டை பிரித்து அதிலிருந்து ஒரு சின்ன குழலை எடுத்தான் அதற்குள் ஏதோ பொடி தூவினான்.. வினாடிக்கும் குறைவான நேரத்தில் என்னை நோக்கி அந்த குழலை வைத்து ஊதினான். நான் இந்த கதை முடிவதற்குள் இன்னும் எத்தனை முறை மயக்கமடைய போகிறேனோ என்று நினைத்துக்கொண்டே மயங்கி போனேன்.

          ✴            ✴           ✴            ✴

🕸 இம்முறை கண்ணை விழித்தபோது ஒரு குடிசையில் இருந்தேன்.
ஆங்காங்கே மான்கொம்பு சிறுத்தை தோல் என்று தொங்கிக் கொண்டிருந்தது. எனக்கு முன்னால் ஒரு இருக்கை இருந்தது அதில் நல்ல குண்டாக ஒருவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு அருகில் என்னிடம் ஆங்கிலத்தில் பேசிய காட்டுவாசி கையை கட்டி நின்றிருந்தான்.
நான் முழித்துக் கொண்டதை பார்த்து ஏதோ சைகை செய்தான்.

அந்த குண்டன் என்னை அருகே வரச்சொல்லி சைகை செய்தான். நான் மெல்ல நடந்து அவன் அருகே சென்றேன். மீண்டும் புரியாத பாஷையில் என்னிடம் ஏதோ கேட்டான்.

"இங்க பாருங்க ப்ளீஸ் எனக்கு புரியற பாஷைல பேசுங்க நீங்க ஆங்கிலம்கூட பேசுவீங்க என்று எனக்கு தெரியும்" என்றேன்.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
பிறகு என்னிடம் திரும்பி

"நீ எப்படி இங்க வந்த " என்று கேட்டார்கள். அவர்கள் பார்வையில் ஆச்சரியம் இருந்ததை கவனித்தேன்.

"நீ இன்னும் இங்க வர நேரம் வர வில்லையே.. நியாய படி நீ ஸ்டேஷன் இல்ல போய் இருக்கணும். இங்கு வர இன்னும் நீ நிறைய நேரம் நிறைய இடம்.. கடந்து இருக்கனுமே.. இங்க எப்படி வந்த  ? " என்று வினவினான்.

" இங்க என்ன நடக்குது நீங்க எல்லாம் யாரு என்று எனக்கு சொல்லுங்கள் நான் இங்கே எப்படி வந்தேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன் " என்றேன் இது ஒரு மிக அருமையான டீல் என்று தோன்றியது எனக்கு.
பதிலை கேட்க ஆவலாய் இருந்தேன்.

அவர்கள் பொறுமையாக மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

" இவன் தனது நேரத்திற்கு முன்பாகவே இங்கு வந்திருக்கிறான் இவனை என்ன செய்யலாம் கொன்று விடலாமா " என்று ஒருவன் கேட்க அதற்கு மற்றொருவன் "இல்லை இவனை மிசிப்பி இடம் அழைத்து செல்லுங்கள் அவர் முடிவு செய்யட்டும் ''என்றான்.

யார் அந்த மிசிப்பி என்று நான் கேட்க நினைத்த போது அவன் மீண்டும் அந்தக் குழலை ஊதி இருந்தான்.

நான் 87ஆவது முறை மீண்டும் மயங்கினேன்.

இந்த முறை கண்விழித்த போது எங்கோ ஒரு பாறையில் கிடத்தப்பட்ட இருந்தேன். சற்று தூரத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்க அதைச்சுற்றி பத்துக்கும் மேற்பட்ட காட்டுவாசிகள் வலம் வந்து கொண்டிருந்தார்கள் மெதுவாக ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு இருந்தார்கள்.

நான் கண்ணை திறந்ததும் ஒவொருவராக என்னை நெருங்கி சூழ்ந்து கொண்டார்கள். தங்களுக்குள் குசுகுசுவென்று எதையோ பேசிக் கொண்டார்கள். அதில் ஒல்லியாக உயரமாக இருந்த ஒருவன் என்னை நெருங்கி என் கையிலிருந்த வாட்சை கழட்ட முயற்சி செய்தான். அதில் இன்னமும் நேரம் 7 தான் காட்டி கொண்டு இருந்தது. அது எனது முதல் சம்பளத்தில் வாங்கிய வாட்ச் என்பதால் சென்டிமென்டாக அதை விட்டுக் கொடுக்க எனக்கு மனசு வரவில்லை.
கைகளை இறுக்க மூடிக்கொண்டேன். அதை மீறி திறக்கப்பட அவனை என்ன செய்வது என்று புரியாமல் கோபத்தில் அவன் முகத்தில் தூ என்று துப்பினேன்.

நான் அந்தத் தவறை செய்திருக்க கூடாது. அவன் ஓவ்... என்று அலறினான். பிறகு மிக விசித்திரமான காரியம் ஒன்றை செய்தான். எரியும் நெருப்பில் சிறு விறகு குச்சி எடுத்து தன் முகத்தில் நெருப்பை தேய்த்து கொண்டான். நெருப்பு நான் துப்பிய இடத்தில் பொசுக்க கொஞ்சமும் அவன் முகம் வலியை பிரதிபலிக்க வில்லை ஆனால் அளவு கடந்த கோபம்தை அது பிரதிபலித்தது.

பிறகு தனது இடையில் இருந்த அந்த குறுவாளை உருவினான். நேரே எனது இதயத்தை நோக்கி செலுத்தினான்.
கத்தி செலுத்தப்பட்ட வேகம் எனது இதயத்தை ஒரே வீச்சில் வெளியே கொண்டு வரும் போல் இருந்தது. ஆனால் கடைசி வினாடி அந்த அதிசயம் நடந்தது. ஒரு மெல்லிய கரம் அவனது கையை பாதியில் தடுத்தது. அது ஒரு பெண்ணின் கரம் கை நிறைய வளையல்கள் அணிந்த பெண்ணின் கரம்.

அவள் அங்கு மிக மதிப்பான ஒருவராக இருக்க வேண்டும். காரணம் அவளைப் பார்த்ததும் அனைவரும் 'மிசிபி மிசிப்பி' என முணுமுணுத்துக் கொண்டு முட்டி போட்டார்கள். அவள் "ம் "என்றதும் தான் எழுந்தார்கள்.
அவள் அணிந்து இருந்த உருண்டை மாலைகள் அவள் பொட்டு அவள் உடை எல்லாம் அவள் ஒரு மத குரு என்பதை சொன்னது.

கொஞ்சம் நெருங்கி வந்த போது தான் நெருப்பில் அவள் முகத்தை பார்த்தேன்.

440 வோல்ட் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்தேன். அவள் நீலா.. எனது தங்கை நீலா.

மந்திர வாதியை காதலித்து நாங்கள் ஒத்து கொள்ளாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்து போனதாய் நாங்கள் நம்பி கொண்டிருக்கும் நீலா..

எனக்கு அதிர்ச்சியில் இதயம் நின்றுவிடும் போலிருந்தது இவள் இறக்கவில்லையா ? இவள் இங்கே எப்படி ?

"நீலா "என்றேன் மெதுவாக அவள் என்னை உற்று பார்த்தாள்.

"யார் நீலா " என்றாள்.

"நீ எப்படி இங்க வந்த " என்று கேட்டாள்

"ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து இங்கே வந்தேன். நீ எப்படி நீலா இங்க... நீ செத்துட்டனு இல்ல........"

"என்ன உளர்ற " என்று சொல்லி விட்டு அவள் வேறு பக்கம் திரும்பி ஏதோ சொல்ல அவர்கள் சற்று தூரத்தில் கும்பலாக சூழ்ந்து கொண்டார்கள். அவள் என்னை காட்டி ஏதோ சொல்லி கொண்டு இருந்தாள். என்னை என்ன செய்வது என்று முடிவு எடுக்கிறார்கள் போல.

அவள் அந்த கும்பலில் இருந்து நான்கு பேரை தனியாக பிரித்தாள் அந்த 4 பேரில் நான் முகத்தில் உமிழ்ந்தவனும் இருந்தான். என்னை காட்டி ஏதோ சொல்ல நால்வரும் தலையாயாட்டினார்கள். இதை சொல்லி முடித்ததும் நீலா மீண்டும் நடந்து சென்று தூரத்தில் தெரிந்த குடிசைக்குள் புகுந்து கொண்டாள் மற்ற காட்டுவாசிகள் பிரிந்து சென்றார்கள்.

அந்த நால்வர் மட்டும் என்னை நெருங்கினார்கள் . அதில் மூவர் எனது கை கால்களை இறுகப் பிடித்துக் கொள்ள இன்னொருவன் கையில் ஏதோ மூலிகைகளை வைத்திருந்தான் அதைப் பிழிந்து எனது வாய்க்குள் சாறு இறக்கினான்.
என்ன இது என்ன செய்கிறார்கள்.? மயக்கம் ஆக்குவதற்கு புகை தானே ஊதுவார்கள். இது என்ன மூலிகை சாறு ?  என்னை கொல்ல முடிவு செய்து விட்டார்களா.. இது என்ன விஷம் ?
அந்த விஷம் ஊற்ற பட்ட 5 ஆவது நிமிடம்....
எனது உடலில் ஒவொரு பாகமாக செயலிழப்பதை உணர்ந்தேன். எனது உடல் முற்றிலுமாக இயக்கத்தை நிறுத்தியது.. நான் பிணம் ஆனேன்...

அப்போது தான்  கவனித்தேன். எனது நினைவுகள் மட்டும் அப்படியே இருக்க உடல் மட்டும் அசைக்க முடியாத நிலைக்கு மரத்து போய் இருந்தது. ஓ இது கடுமையான மறப்பு மருந்து.

அவர்கள் உடனே குதிரைகளை கொண்டு வந்தார்கள் என்னை ஒரு குதிரையில் ஏற்றி நால்வரும் வேகமாக கிளம்பினார்கள்.
குதிரை இருட்டில் எதையோ இலக்காக வைத்து பாய்ந்தோட தொடங்கியது.
"நமக்கு நேரம் இல்லை சீக்கிரம் " என்றான் அதில் ஒருவன்.

சில நிமிடங்களில் அந்த இடத்தை கடந்து இருந்தோம்.
எனது குதிரையை செலுத்தி கொண்டு இருந்தவன் என்னிடம் வாட்ச் ஐ பறிக்க நினைத்தவன்.
அவன் மற்ற ஆட்களை முன்னே செல்ல விட்டு வேண்டும் என்றே பின்னால் வந்தது போல் தெரிந்தது.
ஒரு கட்டத்தில் அவர்கள் இவனை விட்டு வெகு தூரம் முன்னேறி இருக்க. இவன் மெதுவாக பின் வாங்கி குதிரையை நிறுத்தினான் . பிறகு என்னை கீழே கிடத்தினான்.
மெதுவாக கத்தியை எடுத்தான். அவன் பார்வையில் கழுகின் கூர்மை இருந்தது.
தனது தீய்ந்த முகத்தை க்ளோஸ் அப் இல் காட்டினான் மிக விகாரமாக இருந்தது.

"இப்ப நான் கொடுக்க போற வலியை அனு அணுவா அனுபவிக்க போற ஆனா உன்னால் உன் சுண்டு விரலை கூட அசைக்க முடியாது. என் முகத்திலா துப்பற ..இப்ப உன் முகத்தை சிதைக்கிறேன் பாரு..உன் இதயத்தை எடுத்து உனக்கே காட்டறேன் பாரு " என்றால் கொடூரமாக சிரித்தான்.

கத்தியால் சற்றும் யோசிக்காமல் எனது முகத்தில் ஒரு பக்கம் வைத்து அழுத்த கன்னத்தில் கோடு விழுந்து ரத்தம் எட்டி பார்த்தது.

அவன் உற்சாகமானான்..கொடூரமாக சிரித்து கொண்டு கூரான கத்தியுடன் ஆசையாக என்னை நெருங்கினான்.
என் நெஞ்சில் கத்தியை வைத்தான்.

என்னிடம் ஏதோ கொடூர விளையாட்டு விளையாட போகிறான் என்று புரிந்தது.

தடக் தடக் தொடரும்..........

🚉    🚉    🚉    🚉     🚉     🚉    🚉    🚉

அத்தியாயம் 8

எங்கோ சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் ஏறி திடீரென்று காட்சி மாறி சம்பந்தம் இல்லாமல் ஏதோ இருண்ட ஸ்டேஷன் சென்று யாரோ ஒரு பெண்ணை ரயிலில் சந்தித்து சம்பந்தமில்லாத நான்கு மொட்டைகளை எதிர்கொண்டு.. அங்கிருந்து தப்பி இந்த ஏதோ ஒரு காட்டுவாசியிடம் மாட்டிக்கொண்ட என்னை நினைத்து எனக்கே சிரிப்பாக இருந்தது.
எனது வாழ்க்கை திடீரென்று ஒரு புதிர் விளையாட்டில் சிக்கி இருந்தது. ஏதோ ஒரு விபரீத புதிர் விளையாட்டு.

அந்த காட்டுவாசி கையில்  பளபளக்கும் கத்தியுடன் என்னை இன்னும் கொஞ்சம் நெருக்கமாக  அணுகி உட்கார்ந்தான்.

" இதயத்தை காட்டறேன் பாக்கரியா " என்று காதலி சொல்ல வேண்டிய வசனத்தை சொன்னான்.  ஓநாய் போல இளித்தான்.
பின் தான் வைத்திருந்த கத்தியை அப்படியே எடுத்து எனது நெஞ்சில்  வைத்து அந்தக் கத்தியின் மேல் இன்னொரு கையால் ஓங்கி.....

"நிறுத்து " என்று ஒரு குரல் கேட்டுத் திகைத்துப் போய் நிமிர்ந்து பார்த்தான் அந்த காட்டுவாசி. அவனது மற்ற நண்பர்கள் முகத்தில் கோபத்துடன் அவனுக்குப் பின்னால் நின்று இருந்தார்கள்.

"சந்தேகப்பட்டு குதிரையை திருப்பி வந்ததும் சரியாக போச்சு..
உனக்கும் மிசிப்பி சொல்லி இருக்கும் கட்டளை என்ன?  நீ செய்துகொண்டிருப்பது என்ன ? இப்போது நீ செய்வது ஒரு குற்றம் தெரியுமா இதற்கு நீ காட்டை விட்டு வெளியேற்றப்படலாம்.  மிசிப்பிக்கு இது தெரிந்தால் உன்னை கடுமையாக தண்டிப்பார் "

அந்த காட்டுவாசி கொஞ்சம் தயங்கிவிட்டு
"ஆனால் இவன் கொல்லப்பட வேண்டியவன் "என்றான்

"அதை மிசிப்பி  முடிவு பண்ணட்டும் ம் இவனை குதிரையில் தூக்கி போடு" என்றான்.

அந்த மர்ம மூலிகையின் விளைவால் இன்னமும் எனது கை கால்களை துளி கூட என்னால் அசைக்க முடியவில்லை என்னை குண்டுகட்டாக தூக்கி மீண்டும் குதிரையில் போட்டார்கள் மீண்டும் இருட்டில் அந்த ஏதோ ஒரு இலக்கை நோக்கி வேகமாக பாய்ந்து சென்றார்கள்.

குதிரை எங்கோ மலை பாங்கான இடத்தில் ஏறி கொண்டு இருந்தது.. உடலை அசைக்க முடியவில்லை என்றாலும்..உடலில் உணர்வுகள் மட்டும் கூர்மையாக வேலை செய்தது.
ஊதை காற்று உடலை கத்தி போல ஊடுருவியது உணர முடிந்தது.
என்னை என்ன செய்ய போகிறார்கள் எங்கே அழைத்து செல்கிறார்கள் ?

இப்போது குதிரைகள் மலை பாங்கான இடம் என்பதால் சற்றே திணறி திணறி ஏறி கொண்டு இருந்தது. நான் சவம் போல குதிரையில் கிடைத்த பட்டு இருந்தேன். ஒரு பெட்ஸீட்டை சுற்றி போட்டது போல துவண்டு போய் கிடந்தேன். உடலை ஒரு முறை அசைத்து பார்த்தேன் முடியவில்லை. எனது உடல் குதிரை ஓட்டத்திற்கு ஏற்றார் போல தன்னிச்சையாக ஆடி கொண்டே வந்தது. காட்டில் அந்த ஒழுங்கு வரிசை ராட்சத மரங்கள் மறைந்து மேடுகளில் பல புதர் செடிகளே அதிகம் காண பட்டது.

அவர்களில் மூவர் முன்னாடி சென்று கொண்டு இருக்க என்னை சித்திரவதை செய்ய நினைத்த அந்த காட்டுவாசி இப்போது கையில் அந்த தடியை எடுத்து இருந்தான்.. நான் ஓர கண்ணில் அவனை கவனித்து வந்தேன் ஏதோ விபரீதமாக செய்ய போகிறான். குதிரையை மெல்ல விரட்டி நான் கிடத்த பட்டு இருந்த குதிரையை நெருங்கினான்.
முன்னே சென்றவர்கள் இதை கவனிக்க தவறி இருந்தார்கள். அவன் அந்த தடியை எனது தலையில் வைத்து ஒரு முறை குறி பார்த்து இலக்கை நிர்ணயித்தான் பின் வேகமாக தலையை சுற்றி அந்த தடியை ஓங்கி எனது தலையை நோக்கி வீசினான்.

 மிக வேகமான அசுர தனமான அடி. தலை தனியாக கழண்டு விழும் அளவு வேகம் கொண்ட அடி அது.
ஆனால் அது என்னை தாக்குவதற்கு ஒரு மைக்ரோ செகண்ட் முன்னாடி தான் முன்னால் சென்ற காட்டுவாசிகளில் ஒருவன் தற்செயலாக எங்களை திரும்பி பார்த்தான். நிலைமை உணர்ந்து சடாரென அந்த குதிரையை தூர விரட்டினான். அந்த அசுர அடி குதிரையின் முதுகில் விழுந்தது. வலி தாங்காமல் அது
"ஹீஹீஹீ.....ஈ..ஈ..ஈ......." என்று எழுப்பிய சப்தம் காட்டில் எதிரொலித்தது.

அவர்கள் குதிரையை நிறுத்தி விட்டு திரும்பிப் பார்த்து கடும் கோபமாக
" ஏய் நிறுத்து "

என்றார்கள் இப்போது கையில் ஈட்டி முளைத்திருந்தது.

" முடியாது இவன் எனக்கான இரை ..இவனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் " என்று சொல்லி விட்டு அந்த வாட்ச் திருடன் காட்டுவாசி தனது தடியால் அந்த இனொருவன் உடலில் ஓங்கி தாக்கினான். தனது சக நண்பர்களேயே அவன் தாக்குவது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
அவர்கள் கவனித்து சுதாரிப்பதற்குள்
இவன் சடாரென்று நான் கிடத்தப்பட்டிருந்த குதிரைக்கு தாவினான். மின்னலுக்கும் குறைவான நேரத்தில் அந்த குதிரையை திருப்பி எங்கோ பள்ளத்தை நோக்கி அம்பை போல பாய்ந்து ஓட தொடங்கினான்.

அவர்கள் பின்னால் "ஹெய் நிறுத்து" என்று அளறினார்கள்.. இவன் வேகம் அசுர தனமாக இருந்தது.. என்னை கிடத்திய படியே குதிரையை வேகமாக ஓட்டினான்.
சற்று நேரத்தில் அவர்களிடையே இடைவெளி மிகவும் கூடி இருந்தது.

"உனது மரணம் அதோ இருக்கிறது பார்" என்று என்னை சீண்டி காட்டினான் அவன்.

"உன்னை அணுஅணுவாய் சித்திரவதை பண்ணி ரசிக்கலாம் என்று இருந்தேன் ஆனால் சந்தர்ப்பம் ஒத்துழைக்கவில்லை " என்று வருத்த பட்டான்.
அவன் காட்டிய இடத்தில் ஒரு பெரும் பள்ளத்தாக்கு இருந்தது. அதை நோக்கி தான் எங்கள் குதிரை பாய்ந்து சென்று கொண்டு இருந்தது.

என்ன இவன் என்னோடு சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறானா ? என்னை கொல்வதில் அவ்வளவு குறிக்கோளா ??

குதிரையை வேகமாக பள்ளத்தை நோக்கி தட்டி விட்டான் அவன். பயங்கர வேகத்தில் பள்ளத்தை குதிரை நெருங்கும் போது அவன் லாவகமாக குதிரையை விட்டு தாவினான்..கீழே உருண்டு தப்பித்தான்.

நானும் குதிரையும் ...
ஹா... என வாய் பிளந்து இருந்த பள்ளத்தாக்கில் ....
அபாயகரமாக பாய்ந்தோம் .

கடைசியில் இந்த பள்ளத்தாக்கில் தான் எனது உயிர் போக வேண்டுமா ? இதான் விதியா ?? என்னை சுற்றி நடந்த மர்மங்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே நான் அப்பாவியாக மண்டை சிதறி சாகப் போகிறேனா.. பரிதாபம்.
நாளை நீங்கள் எல்லாம் .. நியூஸ் பேப்பரில் வாட்ஸ் அப் பதிவில் நீங்கள் முகம் சுளித்துக்கொண்டே உச் கொட்டி கொண்டு பார்க்கும்படி..
சட்னி முகமாக எனது பிணம்.....

நான் காற்றில் பயங்கர வேகத்தில்
விழுந்து கொண்டு இருந்தேன் .ஒரு கழுகை போல காற்றை கிழித்து கொண்டு பள்ளத்தாக்கில் பறந்து கொண்டு இருந்தேன்.

அப்போது... திடீரென்று....

எனது கைகளில் ஒரு சுருக்கு கயிறு வந்து என்னை அந்தரத்தில் இறுக்கியது..

"நான் பிடிச்சிட்டேன் " என்று எங்கோ நிலாவில் இருந்து வந்தது போல் அந்தரத்தில் ஒரு குரல் கேட்டது.
மேலே நிமிர்ந்து பார்த்தபோது பள்ளத்தாக்கின் நுனியில் அந்த மூவரும் நின்று இருந்தார்கள் அதில் ஒருவன் கையில் கயிறு வைத்து என்னை அந்தரத்தில் கேட்ச் பிடித்து இருந்தான். அந்த சூழ்நிலையிலும் அவர்களின் கயிறு வீசும் துல்லியத்தைப் பார்த்து அதிசயித்தேன்.
கிணற்றிலிருந்து நீர் இறைப்பது போல அவர்கள் மெதுவாக என்னை கொஞ்சம் கொஞ்சமாக மேலே தூக்கினார்கள்.

மேலே வந்ததும் என்னை மீண்டும் குதிரையில் கிடத்தினார்கள்.
என்னை சுற்றி இந்த ஒரு இரவுக்குள் தான் எத்தனை எத்தனை சம்பவங்கள் ? இந்த இரவு முடியவே முடியாதா...?
என்னை சுற்றி நடக்கும் விசித்திரங்களின் காரணத்தை நான் கடைசி வரை அறியவே போவது இல்லையா ?

அவர்கள் என்னை மீண்டும் குதிரையில் கிடத்தினார்கள்.
ஓரத்தில் என்னை கடத்தி வந்த காட்டுவாசி கிடந்தான். அவன் உடலில் ஈட்டி பாய்ந்து இருந்ததை பார்த்தேன். அவனை இவர்கள் கொன்று விட்டார்களா ?
அப்போது அந்த ஆச்சர்யத்தை பார்த்தேன். அவன் இறந்த உடன் உடல் ஆவியாகி காற்றில் கரைந்து கொண்டு இருந்தது . நாங்கள் நகரும் முன் பாதிக்கும் மேல் கரைந்து விட்டது. இப்படி ஒரு விஷ ஈட்டியா ??

"ம் சீக்கிரம் நமக்கு நேரம் இல்ல இப்பவேநேரம் நிறைய விரயம் ஆகி விட்டது " என்று அலறினான் ஒருவன்.

இவர்கள் நேரத்தை விரயம் ஆக்காமல் சரியான டைமுக்கு  அப்படி என்னை எங்கு தான் கொண்டு செல்லப் போகிறார்கள் ??

இந்த முறை அவர்கள் குதிரை முன்பை விட இரு மடங்கு வேகத்தில் பாய்ந்தது.

          ✴            ✴            ✴            ✴        

எவ்வளவு நேரம் அப்படி சென்றோம் என்று தெரியவில்லை.
திடீரென ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேட்டில் ஏறி  குதிரைகளை நிறுத்தினார்கள். எனக்கு இன்னும் தங்கை நீலா நினைவாக இருந்தது..எப்படி உயிர் பிழைத்தாள்? எப்படி இங்கே வந்தாள் ?

அவர்கள் என்னை கீழே கிடத்தினார்கள் படுக்க வாட்டில் படுக்க வைத்தார்கள்.
முதுகு பக்கம் ஜிலீரென்று உலோக தீண்டல் உணர்ந்தேன்.

'தண்டவாளம் ' .

அவர்கள் என்னை தன்டவாளத்தில் கிடத்தி இருப்பதை அப்போது தான் உணர்ந்தேன். என்னைக் கிடத்தி விட்டு அவர்கள் காத்திருந்தார்கள்.

அப்போதுதான் அந்த ஒலியைக் கேட்டேன்.

"கூ..... கூ.....ஊ..... "

"நல்ல வேளை சரியான நேரத்திற்கு வந்தோம் " என்றான் ஒருவன்.

தூரத்தில் அந்த ரயில் மேட்டில் முக்கி கொண்டு மிக மெதுவாக ஊர்ந்து வந்தது.
எனக்கு முதுகு தண்டில் அமிலம் பாய்ந்தது... என்னை கொல்ல வேண்டும் என்றால் அங்கேயே கொன்று இருக்கலாமே... இவ்ளோ தூரம் அழைத்து வந்து ரயில் ஏற்றி தான் கொல்ல வேண்டுமா...

நான் எனது கை கால்களை அசைக்க பிரம்ம பிரயத்தனம் செய்து பார்த்தேன்.
'ம்ஹூம் ' விரல் நுனி கூட ஆட வில்லை.

அந்த ரயில் மெதுவாக என்னை நெருங்கி இருந்தது.
ஜஸக் புஷக்... ஜஸக்..புஷக்.. என்று மலை ஏறி இருந்ததால் மூச்சு வாங்கி கொண்டே பூதாகரமாக அது நெருங்கி வந்தது.
அருகில் வர வர ஒன்றை கவனித்தேன் அது நான் வந்த அதே ஹெவன் எக்ஸ்பிரஸ் தான்..
நாங்கள் இருந்தது ஒரு சுற்று வளைய பாதை என்று புரிந்தது.. மலையின் பாகத்தை ரயில் சுற்றி வருவதற்குள் நான் ஆற்றில் விழுந்து காட்டுவாசிகள் இடம் அக பட்டு நேரே குறுக்கு வழியில் மீண்டும் மேடு ஏறி..ரயிலுக்கு வந்து சேர்ந்து இருக்கின்றோம் என்று புரிந்தது.
'சனியன் தப்பி ஓடினாலும் விட மாட்டேன்னுதே...'

ரயில் இப்போது மிக நெருங்கி இருந்தது க்ளோஸ் அப் இல் பூதாகரமாக தெரிந்து ரத்தத்தை உறைய வைத்தது. அது எழுப்பும் சப்தம் இன்னும் பய முறுத்தலாக இருந்தது.

அய்யோ எனக்கு இந்த ரயிலில் தானா சாவு ?
அய்யோ எனது உடல் கொடூரமாக இரண்டாக பிளந்து அதை நாளை நீங்கள் நியூஸ் பேப்பரில் வாட்ஸ் அப் பதிவில் நீங்கள் முகம் சுளித்துக்கொண்டே உச் கொட்டி கொண்டு பார்க்கும்படி..
சட்னி முகமாக எனது பிணம்.....

அவர்கள் வேகமாக செயல்பட்டார்கள்.
அந்த ரயில் என்னை தொடும் அளவு நெருங்கியதும் சடாரென்று என்னை குண்டுகட்டாக தூக்கி மெதுவாக கடந்து செல்லும் அந்த ரயில் பெட்டியில் திறந்த கதவின் வழியாக உள்ளே தூக்கிப் போட்டார்கள்.

"மீண்டும் உன் நேரம் வரும் போது மீண்டும் காட்டுக்கு வருவ அப்போ மீண்டும் சந்திக்கலாம் ..
ஹாப்பி ஜர்னி " என்று ஆங்கிலத்தில் வாழ்த்தி அனுப்பினார்கள். குதிரையில் பறந்து பிரிந்தார்கள்.

       ✴            ✴            ✴            ✴        

"வெல்கம் டூ ஹெவன் எக்ஸ்பிரஸ் அகெய்ன் "

எனக்கு முன்னால் அந்த பழைய ரயில் சிநேகிதர்கள்..அந்த  4 மொட்டைகள் புன்னகையுடன் அமர்ந்து இருந்தார்கள்.


தடக் தடக் தொடரும்...........

(விரைவில் இறுதி அத்தியாயம்....)

🚉    🚉    🚉    🚉     🚉     🚉    🚉    🚉

அத்தியாயம் 9

"வெல்கம் டூ ஹெவன் எக்ஸ்பிரஸ் அகெய்ன் "

எனக்கு முன்னால் அந்த பழைய ரயில் சிநேகிதர்கள்..அந்த  4 மொட்டைகள் புன்னகையுடன் அமர்ந்து இருந்தார்கள்.

🕸 நான் கொஞ்சம் சீட்டில் நிமிர்ந்து வசதியாக உட்கார்ந்தேன் மூலிகை சாறு தனது வீரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இருந்தது இப்போது உடலை நன்றாக அசைக்க முடிந்தது.

"என்ன ஹீரோ கண்ணு முழிச்சிடீங்க போல " முன்பு சொன்ன அதே வசனம்.

"Call-con " உடைய விதி முறையையே மீற பாத்து இருக்க .. பெரிய ஆள் தான்யா நீ " என்றான்.

நான் வசதியாக சாய்ந்து அமர்ந்தேன். அவன் முகத்தை நேராக பார்த்து மெல்ல வாயை திறந்து உறுதியான குரலில் பேசினேன்.

"ஹலோ மிஸ்டர் பார்பர் " என்றேன் நேராக அவனை பார்த்து புன்னகை செய்தேன்.

அவன் முகத்தில் சின்ன அதிர்ச்சி துல்லியமாக தெரிந்தது.

"வாட்.. பார்பர் ? ஹு இஸ் பார்பர் ?? எ..என்ன உளர்ற ? "

அவன் பேச்சில் தடுமாற்றம் தெரிந்ததை கவனித்தேன்.
முதல் தடவையாக எதிரியை சரியான இடத்தில் தொட்டு இருக்கிறேன்.

" ஆமாம் நான் வசிக்கும் தெருவில் பிள்ளையார் கோவில் அருகே இருக்கும் பார்பர் ஷாப்பில் இருக்கும் பார்பர் தானயா நீ ?? என்ன அங்கே பெரிய மீசை நீண்ட முடி வைத்திருப்பாய் இப்பொழுது மீசையை சிரைத்து மொட்டை அடித்து இருக்கிறாய்..கோட் போட்டு இருக்கிறாய் அவ்வளவுதான்.
அப்புறம் அந்த பொண்ணு மானசா... அவள் கோவில் அருகில் பூ கட்டி விற்கும் அந்தப் பெண் தானே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து மேக்கப் போட்டு உருவம் மாற்றியிருக்கிறீர்கள் அவ்வளவுதான்.

 அதானே..உங்களையெல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே னு அப்போவே நினைத்தேன் "

சொல்லி விட்டு அவன் கண்ணை நேருக்கு நேராக பார்த்தேன் ..அவன் எந்த சலனமும் இல்லாமல் என்னைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

என்ன ஆச்சு பேச்சு வர வில்லையா..?

நல்ல வேலையாக எனது மூளை இவர்களை அடையாளம் கண்டு இருந்தது.

"சொல்லுங்கடா.. ஏன் என் தெருவில் இருக்கிறவர்கள் எல்லாம் சேர்ந்து ஏதோ நாடகம் போடறீங்க... உங்க நாடக மேடையை இவ்வளவு பிரமாண்டமா காடு மலை ஆறு ரயில் காட்டுவாசி னு செட்டிங் எப்படி போட முடிந்தது..? எப்படி சென்ட்ரல் ல ஒரு ரயில் ல தூங்கி போன நான் உங்க செட்டிங் ல கண்ணு முழிச்சு உங்க நாடகத்தில் மாட்டி தடுமாறி கொண்டு இருகேன் ? நீங்கள் எல்லாம் யாரு எத்தனை பேர் கொண்ட டீம் நீங்கள் ? இதையெல்லாம் எதற்காக செய்கிறீர்கள் ? ஒரு இடத்தின் பிஸிக்ஸ் ஐ எப்படி உங்களால் மாற்ற முடிகிறது ?
"CAll-CON" னா என்ன ?? உங்க நாடகத்தில் செத்து போன தங்கை நீலாவை எப்படி கொண்டு வர முடிந்தது ? ஒன்னு விடாம சொல்லுங்க ..டா..."

நான் ஆட்டோமேட்டிக் துப்பாக்கி துப்பும் புல்லட் களைப் போல கேள்வி தோட்டா களை  கடகடவென்று வீசினேன்

"அந்த கிழவன் எங்க காணோம் " என்று அடிஸ்னல்  சீட் கேட்டு மேலும் ஒரு கேள்வியை இணைத்தேன்.

அந்த நான்கு மொட்டைகளும் ஒருவரோடு ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"இவன் ஆபதானவன்... மிக ஆபதானவன்..." என்றான் பார்பர் மலை.

'ஆமாண்டா பின்ன கடைசி வரைக்கும் அடி வாங்கிட்டே இருப்பேன் னு நினைச்சியா '

"ஸ்டேஷன் செல்லும் வரை இவனை முடக்கி வையுங்கள்.." என்றான்.

உடனே அதில் ஒருவன் என்னை நெருங்கினான். அவன் கையில் கயிறு இருந்தது இன்னொருவன் என்னை துப்பாக்கியில் குறி பார்த்தான்.
நான் இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தேன். எனது பாக்கெட்டில் இருந்த பூ போட்ட குட்டி கத்தியை எடுத்து கையில் ஒளித்து வைத்து இருந்தேன்.
அந்த மொட்டை என்னை நெருங்கியதும் அவன் கண்ணை குறி பார்த்து கத்தியை வீசினேன்.

"சதக் " அவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை.. முகில் இப்போது எதற்கும் துணிந்து இருந்தான் என்பது பாவம் அவர்களுக்கு தெரியாது..

அவன் கண்ணில் பீறிட்டு சிகப்பு பவுன்டனை கையால் பொத்தி கொண்டு அலற.. அடுத்தவன் என்னை கோபமாக நெருங்கினான் நான் அவன் தாடையில் ஓங்கி வெடித்தேன்.
நான் இந்த ரயிலை நிறுத்துவது என திடீரென் முடிவு செய்தேன். இந்த ரயிலை நிறுத்தினால் எல்லாம் சரியாகி விடும் என்று உள்ளுணர்வு சொன்னது. அபாய சங்கிலியை பிடித்து இழுக்க முடிவு செய்தேன். ஆனால் அது இந்தப் பெட்டியில் முடியாது என்று வெகு நிச்சயமாக எனக்கு தெரியும். எனவே சற்றென்று அவர்களிடமிருந்து தப்பி நான் பெட்டிக்குள் தடுமாறி ஓடத் தொடங்கினேன்.

அந்தப் பெட்டி முழுவதும் எங்களை தவிர வேறு யாருமில்லை அவர்கள் என்னை காரைத் துரத்தும் நாய் போல துரத்தி கொண்டு வந்தார்கள். நான் எனது பெட்டியை கடந்து இரு பெட்டிகளை இணைக்கும் குகை அமைப்பு வழியாக அடுத்த பெட்டிக்கு தாவினேன் எனது வேகத்தை இன்னும் கூட்டினேன் ஆச்சரியம் அந்தப் பெட்டி முழுக்கவும் யாருமே இல்லை.
1 2 3 4 என்று நான் பெட்டிகளை கடந்து கொண்டே சென்றேன் எந்த பெட்டியிலும் ஒரு மனிதன் கூட என் கண்ணுக்குத் தெரியவில்லை.

இப்போது நான் இருந்தது கடைசிப் பெட்டியில். இல்லை இல்லை முதல் பெட்டியில் இன்ஜினை ஒட்டியிருக்கும் முதல் பெட்டியில்.
நான் எந்த விலை கொடுத்தாவது இந்த ரயிலை நிறுத்துவது என்று முடிவு செய்தேன் . அவர்கள் பின்னால் ஓடி வரும் சத்தம் கேட்டது. நான் ஒரு முடிவுக்கு வந்தவனாய் அந்தப் பெட்டியிலிருந்து கதவு வழியாக வெளியே எட்டிப் பிடித்து தொங்கினேன்.. காற்று எனது தலை முடியை கலைத்து விளையாடியது... நான் பெட்டியை விட்டு வெளியேறி தொங்கி.. ஒரு இன்ச் அளவு உள்ள இடத்தில் பிடிமானம் செய்து இன்ஜினை தாவி பிடித்தேன்.. நான் சொன்ன அளவு எளிமையான காரியம் இல்லை இது. மகா சாகச வேலை.. ஆனால் நான் இப்போது எதற்கும் துணிந்து இருந்தேன். தூரத்தில் வளைந்த கூம்பு வடிவ மலையில் அருவி நிலவொளியில் காட்சி அளித்ததை ரசிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை.

மெல்ல இன்ஜினின் பாடியில் நடக்க துவங்கினேன். ரயில் ஓட்டுநர் அறையை அடைந்து எட்டி பார்த்தேன் நிறுத்துங்க என்று கூவ நினைத்து திகைத்து போனேன்.. காரணம் அங்கே ஓட்டுநர் யாருமே இல்லை ரயில் ஆட்டோமேட்டிக்காக இயங்கி கொண்டு இருந்தது.

நான் திகைத்துப் போய் நின்று இந்த கணத்தில் எனது பின்னங்கழுத்தில் இரும்பு உலோக குழாயை உணர்ந்தேன்..

"ம் போதும்  விளையாட்டு . பெட்டிக்கு வா"

அவர்கள் என்னை துரத்தி என்னைப்போலவே ரிஸ்க் எடுத்து இன்ஜின் வரை வந்துவிட்டு இருந்தார்கள். இவர்களிடம் தப்புவது தற்போது சாத்தியம் இல்லை என்று தோன்றியது அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மீண்டும் பெட்டிக்குள் இருந்தேன்.

இம்முறை இமைக்காமல் மூன்றரை ஜோடி கண்கள் துப்பாக்கியால் என்னை குறி பார்த்தது.

அவர்களில் ஒருவனை ஒரு கண்ணை நான் குருடன் ஆக்கி இருந்தது மிக்க மகிழ்ச்சியை தந்தது.

"உனக்கு மாஸ்டர் கடுமையான தண்டனை கொடுப்பார்..மிக கடுமையான தண்டனை " என்றான் பார்பர் மலை

"மாஸ்டரா யார் அது ஸ்டேஷன் மாஸ்டரா " என்றேன்

"முட்டாள் ..மாஸ்டர்.. உனக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் மாஸ்டர் "

'யார் யா அந்த கோமாளி புதுசா ' என்று நினைத்துக்கொண்டேன் இருக்கிற குழப்பம் போதாதென்று புது கேரக்டர் வேற...யாரும் பரோட்டா தட்றவனா இருக்கும் இங்க வேஷம் மாற்றி கூப்பிட்டு வந்து இருப்பாங்க.

அப்போது...

"வெல்கம் டு கால்கன் ஸ்டேஷன்.." என்று ரயிலில் ஸ்பீக்கரில் வசீகர பெண் குரல் ஆசிரிரி வாசித்தது.

நான் ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன்... வீடுகள் அப்பார்ட்மெண்ட் கள்.. வீடுகள் வீடுகள் மேலும் வீடுகள்..அனைதும் இருளில் மூழ்கி இருந்தது. நான் வெளியே பார்த்து கொண்டே வந்தேன்..

கடந்து போகும் பல கட்டிடங்களை அசுவாரஸ்யமாக பார்த்து கொண்டே வந்தேன்.
அப்போது தான் அதை பார்த்தேன்..

வழியில் ஒரு மாடியில் குட்டி செடிகளை வளர்த்து இருந்தார்கள் அதன் அருகே நின்ற ஒரு குட்டி பாப்பா சோப்பு நுரையில் பபுல்ஸ் விட்டு விளையாடி கொண்டு இருந்தது ..விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது. வானவில் நிறத்தில் வண்ணமயமாக ஒரு கவுன் போட்டு இருந்தது. மாடி ஓரத்தில் அபாயகரமாக எட்டி பார்த்தது ஜன்னலில் என்னை பார்த்து கண் சிமிட்டி சிரித்தது.

அட என்று அதிசையித்தேன்.. இது நான் சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து கிளம்பிய உடன் ஜன்னல் வழியே பார்த்த காட்சி அல்லவா.. அது எப்படி மீண்டும் ரிப்பீட் ஆகிறது.. அதே காட்சி ஆனால் அப்போது பகல் இப்போது இருட்டு.

ரயில் மெல்ல மெல்ல கடந்து ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. பிறகு மெதுவாக நின்றது..

"Thanks for coming " என்றது ஆசிரிரி..
அதை கேட்டு அந்த சூழ்நிலையிலும் எனக்கு சிரிப்பு வந்தது.

"ம் இறங்கு மாஸ்டர் உனக்காக காத்து இருக்கார் "

நான் துப்பாக்கி முனையில் இறக்க பட்டேன். ஒரு வழியா பயணம் முடிந்தது ஒரு விடுதலை உணர்வாக இருந்தது.
ஆனால் அடுத்து எனக்காக என்ன காத்து இருக்கோ என்று நினைக்கும் போது கொஞ்சம் திகிலாக இருந்தது.

இறங்கி அந்த ஸ்டேஷனை பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன்.
அந்த ஸ்டேஷனில் எங்களை தவிர வேறு யாரும் இல்லை. ஒரு மூடப்பட்ட பிரம்மாண்ட குகை அமைப்பு போல அந்த ஸ்டேஷன் இருந்தது. ஆனால் மிகவும் ஹைடெக் ஆக  இருந்தது. எங்கும் பள பளகும் தூய்மை.

ஒரு ஓரத்தில் ஒரு படிக்கட்டு அமைப்பு கண்ணாடி தடுப்புகளைத் தாண்டி காணப்பட்டது. அவர்கள் என்னை அதை நோக்கிதான் அழைத்துச் சென்றார்கள்.

போகும் வழியில் வரிசையாக கண்ணாடி தடுப்பு போட பட்ட ஜெயில் மாதிரி அமைப்பு இருந்தது.. அங்கே இரண்டு அறைகள் இருந்தன.. அதில் ஒரு சேம்பரை கடந்த போது அந்த கண்ணாடி அறையில்.. 10 க்கும் மேற் பட்ட வெறி நாய்கள் அடைத்து வைக்க பட்டு இருந்ததை ஆச்சர்யமாக பார்த்து கொண்டே சென்றேன். அவைகளை கடந்த போது அனைத்து நாய்களும் ஒரே நேரத்தில் என்னை பார்த்து முறைத்து பல்லை பயங்கரமாக காட்டி உறுமியது. அடுத்த கண்ணாடி செம்பரில்  10 க்கும் மேற் பட்ட மனிதர்கள் இருந்தார்கள் அவர்கள் கையில் கத்தி ..சுத்தி..லத்தி.. என விதவிதமாக ஆயுதங்கள் வைத்து இருந்தார்கள்.. இவர்கள் எல்லாம் யார் எதற்காக சிறை வைக்க பட்டு இருக்கிறார்கள் ??

அந்த ஸ்டேஷன் முழுக்க அப்படி ஒரு சுத்தம்.. முழுக்க முழுக்க எங்கே பார்த்தாலும் வெண்மை மயம்..
நாங்கள் தூரே சென்று அங்கே  கடைசியில் இருந்த படியில் ஏறினோம்.. ஏறியதும் தான் அது எஸ்குலேடர் என்று புரிந்தது. நகரும் படிக்கட்டுகள்  எங்களை ஒரு  பெரிய கதவு அருகே அழைத்துச் சென்றது அந்தக் கதவு பழைய காலத்து அரண்மனை கதவுகளை போல மிக பிரம்மாண்டமாக இருந்தது. அந்த  இடத்திற்கு பொருந்தாமல் இருந்தது. அவர்கள் அருகே வந்து நின்றதும் அது தானாக திறந்து கொண்டது.

நாங்கள் உள்ளே பிரவேசித்தோம். மிக உயரமான கூரையை கொண்ட மிக பெரிய ஹால் .. முழுக்க முழுக்க சிகப்பு வர்ணம் அடிக்க பட்டு இருந்தது. அவ்வளவு பெரிய ஹாலில் நடுவே ஒரு இருக்கை தவிர வேறு எதுவுமே இல்லை. அந்த இருக்கை அரசர்களின் சிம்மாசனம் போல பல படிக்கட்டுகள் கொண்டு உயரமாக இருந்தது . மேலும் ஆச்சர்யமாக அது அந்தரத்தில் மிதந்து கொண்டு இருந்தது. அதில் ஒருவன் அமர்ந்து இருந்தான். ஹால் முழுக்கவே அரைகுறை வெளிச்சமாகவே இருந்தது.
 எனவே அந்த நடு மையத்தில் அமர்ந்திருக்கும் ஆசாமியின் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. ஹாலில் அவன் அமர்ந்திருக்கும் இடத்தை நெருங்குவதற்கு நாங்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி இருந்தது.

அவர்கள் கிட்டே நெருங்க நெருங்க..

"மாஸ்டர் நாங்கள் அவனை கூட்டி வந்து விட்டோம் " என்றார்கள்.

 இவர்களால் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவன் எந்த சலனமும் இன்றி எங்களைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

கிட்டே நெருங்கியதும்..

"வா முகில் உனக்காக தான் காத்து இருக்கேன் ஹா ஹா "

என்றான் அந்த மாஸ்டர்.

இப்போது நெருக்கத்தில் இருந்ததால் அவன் முகத்தை பார்க்க முடிந்தது.
வெளிச்சம் அவன் முகத்தில் விழுந்த தருணத்தில் அவன் முகத்தை பார்த்த போது...

அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனேன் .
அட இது எப்படி சாத்தியம் ?


தடக் தடக் தொடரும்.............

(அடுத்த அத்தியாயத்தில் அணைது மர்மங்களும் விலகும்.)

🚉    🚉    🚉    🚉     🚉     🚉    🚉    🚉

அத்தியாயம் 10

அவர்களால் மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட அந்த மனிதனின் முகத்தில் வெளிச்சம் விழுந்தபோது தான் அவனை பார்த்தேன். அப்படியே அதிர்ச்சியில் உறைந்தேன்..

அட இது எப்படி சாத்தியம்.. ??
எனது விழிகள் வியப்பில் வெளியே வந்து விழாத குறை தான்...

அங்கே இருக்கையில் அமர்ந்து இருந்தது... நான் ...சாட்சாத் முகிலாகிய நான்..

"என்ன முகில் அதிர்ச்சியா இருக்கா ..இல்ல ஆச்சர்யமா இருக்கா... இல்ல அட்டகாசமா இருக்கா ... எப்படி இருக்கு சொல்லு... " என்றான் அவன்..

இந்த காட்சி... இதே வசனம்.. எனக்கு இதற்கு முன் பார்த்தது போல கேட்டது போல இருந்ததை நினைத்து நான் பெரிதாக அலட்டி கொள்ள வில்லை.
எத்தனையோ அதிர்ச்சியை சந்தித்து விட்டேன் அதில் இது ஒன்று...

"எல்லாமே குழப்பமா இருக்கா...?? ஹா ஹா இருக்கும் கண்டிப்பா இருக்கும் எப்படி இல்லாம இருக்கும்..? இதோ பார் " என்று சுவற்றில் ஒரு இடத்தை காட்டினான். அங்கே ரத்த சிகப்பில் திரை அணிவிக்க பட்டு ஏதோ ஒன்று ஆள் உயரத்திற்கு மறைத்து வைக்க பட்டு இருந்தது.

"இந்த திரை விலகினால் உனக்கான அனைத்து குழப்பங்களும் ஒரே வினாடியில் தீரும்.
ஆனால்...
உன் மூளையால் இதை புரிந்து கொள்ள முடியாது அதற்கு நீ வேறு காட்சிகளை காண வேண்டும் முகில்.
அந்த காட்சிகள் பார்த்து விட்டு வா.. பிறகு மீண்டும் உன்னை சந்திக்கிறேன்."

சொல்லி விட்டு அந்த இன்னோரு முகில் தனது விசேஷ கைஉறையில் ஏதோ சைகை செய்தான். அவன் அணிந்து இருந்த கைஉறை மிக விசித்திரமாக இருந்தது. அவன் அதை செய்ததுமே..
என்னையும் மொட்டைகளையும் தவிர அந்த ஹால் மொத்தமாக அப்படியே சூறாவளி போல் சுற்றியது கண்டு ஒரு கணம் திகைத்து போனேன். அறையின் சுவர்கள் படு வேகத்தில் சுழன்றது ..சுவர் மட்டும் அல்ல மேல் கூரை.. கீழ் தரை...
மொத்தத்தில் பிரமாண்ட மிக்சிக்கு உள்ளே அசையாமல் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது போல ஒரு உணர்வு....

திடீரென....

மொத்தமாக இருட்டாக ஆகியது.. எங்கோ பிரபஞ்சத்தில் ஒரு இருட்டில் தொலைந்தவன் போல ஆனேன்.
பிளாக் ஹோலில் வீச பட்டவன் போல் உணர்ந்தேன்.

     ✳           ✳          ✳           ✳          ✳

நகரும் படிக்கட்டில் நகர்ந்து.....
அந்த இடத்திற்கு பொருத்தம் இல்லாத மிக பெரிய அரண்மனை கதவுகள் திறந்து .....
அந்த ஹாலில் நாங்கள் நீண்ட தூரம் நடந்து...
அவனை நெருங்கி...

அவர்கள் கிட்டே நெருங்க நெருங்க..

"மாஸ்டர் நாங்கள் அவனை கூட்டி வந்து விட்டோம் " என்றார்கள்.

எனக்கு மண்டை ஆன்டி கிலாக் வைசில் சுற்ற தொடங்கியது. இதே காட்சி... இதே காட்சி ...இப்போ தானே 5 நிமிடம் முன்னாடி நடந்தது. அதில் மிக மிக மிக குழப்பான நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயம்... அந்த 5 நிமிடம் முன் நடந்த இதே நிகழ்ச்சியின் போதும் எனக்கு இதே நிகழ்ச்சி முன்பே நடந்தது போல் தோன்றியது தான். இப்போது அது மிக பெரிய விஷயமாக தோன்றியது...its like a infinity loop..கடவுளே என்னை சுற்றி என்ன தான் நடக்கிறது தயவு செய்து சொல்.

அப்போது தான் மிக மிக மெல்லிய ஒரு உணர்வை அடைந்தேன்.  அங்கே இருப்பது நான் அல்ல..நான் இங்கே இருக்கிறேன்..இருட்டுக்குள்.. சுழலும் அறைகுள்.. பிளாக் ஹோலுக்குள்.. மிக்சிக்குள்.. ஏதோ ஒன்றுக்குள் ஆனால் அங்க நான் இல்லை. அங்கே நடப்பது நான் காணும் காட்சி மட்டுமே..அந்த இன்னோரு முகில் சொன்ன காட்சி. எனவே எனது எண்ணத்தை காட்சிக்கு தடையாக்காமல் கவனிக்க தொடங்கினேன்.

🕸  இவர்களால் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவன் எந்த சலனமும் இன்றி எங்களைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்...மன்னிக்கவும்.. மன்னிக்கவும்..எங்களை அல்ல அவர்களை பார்த்து கொண்டு இருந்தான் .

கிட்டே நெருங்கியதும்..

"வா முகில் உனக்காக தான் காத்து இருக்கேன் ஹா ஹா "

என்றான் அந்த மாஸ்டர்.
கிட்டே நெருங்கியதும் அவன் முகத்தில் வெளிச்சம் விழுந்தது. அவன் முகம் காண கிடைத்தது..

அவன்....

என்னை இந்த கதையின் தொடக்கத்தில் ரயில் ஏற்றி விட்ட எனது நண்பன் டேனியல்.

"டேனியல் " என்றான் ஆச்சர்யமாக முகில்.

'எனக்கு தெரியும் இவனை கேட்டால் நான் டேனியல் அல்ல என்பான்.. தங்கை நீலா கதை தான் இங்கேயும் நடக்கும்.. 'என்று நினைத்தான் அந்த முகில்.

ஆனால்.....

"ஆம் உனது நண்பன் டேனியல்... உன்னை ரயில் ஏற்றி விட்ட உனது நண்பன் டேனியல் " என்றான் ஆச்சர்யமாக .தன் மனதை படிக்கிறான் என்று உணர்ந்தான் அந்த முகில்.

"Come my dear rat " என்றான்..
அவன் ஏன் அப்படி அழைத்தான் என்று சத்தியமாக முகிலுக்கு தெரியாது.

"என்ன முகில் எல்லாமே குழப்பமா இருக்கா.. " என்றான் பிறகு ஹா ஹா என்று அட்டகாசமாக சிரித்தான் ஓநாய் சிரிப்பது போலிருந்தது அது.

"இருக்கும் ...கண்டிப்பா இருக்கும் .. குழப்பம் கண்டிப்பா இருக்கும் இல்லாம எப்படி இருக்கும்? என்னுடைய call-con டிசைன் அப்படி..." என்றான்.. பரபரப்பாக வேகமாக பேசினான் டேனியல் . அவன் இயல்பு அது .

"நீ இது வரை குழம்பியது போதும் முகில்.. உனக்கு சொல்றேன்.. எல்லாம் சொல்றேன்.. விளக்கமா சொல்றேன்..கிட்ட வா.."  குழந்தை போல வாஞ்சையோடு கூப்பிட்டான்.

முகில் அந்த இடத்தை கண்ணால் ஆராய்ந்தான் கூரை முதல் மேஜை வரை தரை முதல் தம்ளர் வரை  எங்கும் சிகப்பு எல்லாமே சிகப்பு நிறம்..

"என்ன முகில் அப்படி பாக்கர .. இந்த கலர் பிடிகளையா ? சொல்லு மாத்திடறேன் " என்றான்.. கைகளால் ஏதோ சைகை போல செய்தான்.
அவன் கைகளை அப்போதுதான் கவனித்தான் முகில் மிக விசித்திரமான ஒரு கையுறையை அவன் அணிந்திருந்தான் வலது கையில் மட்டும் அதை அணிந்து இருந்தான். இடது கையில் காபி கோப்பை வைத்து இருந்தான் அதில் இரண்டு டிராகன்கள்  மோதுவது போல டிசைன் இருந்ததை பார்த்தான் முகில். வலது கையில்  அந்த கை உறை ஆங்காங்கே சின்ன லைட் மினுக்கிக் கொண்டு.. ஒரு எலக்ட்ரானிக் டிவைஸ் போல இருந்தது.. அதில் ஏதோ விரல் அசைவு செய்ய அது மீண்டும் லைட்டை மினுக்கியது...

உடனே மந்திரம் போட்ட மாதிரி அந்த அறையின் காட்சி மாறியது.. முழுக்க முழுக்க அனைத்தும் வெளியே ஸ்டேஷனில் பார்த்தது போல வெள்ளை நிறத்திற்கு மாறி விட்டது..

இன்னும் கொஞ்சம் லைட் போடட்டுமா என்றான்.. அறை இப்போது பிரகாசமான ஒளியில் மூழ்கியது..

"இந்த கால் கன் உலகில் என்னால் பிக்ஸ் பண்ண முடியாதது ஒண்ணே ஒன்னு தான் .. கடிகாரங்கள் இங்கே ஓடாது."

டேனியல் அணிந்து இருந்த வெள்ளை கோட் வெள்ளை பேண்ட் பளபளப்பாக காட்சி அளித்தது..

"என்ன முகில் அசத்தலா இருக்கா .. இல்ல ஆச்சர்யமா இருக்கா ..இல்ல... அட்டகாசமா இருக்கா ? எப்படி இருக்கு சொல்லு...திஸ் இஸ் கால்ட்.. 'கால்-கன் ' வெல்கம் டூ மை வர்ல்ட் டியர்.. இங்க நான் தான் கடவுள்..
actually நீ ஆரம்பத்துல இருந்தே கால் கன் ல தான் இருக்க நான் எங்க இருக்கேன் என்ற கேள்வியை பயணம் ஆரம்பிக்கும் போதே கேட்டு இருந்தா அப்போவே சொல்லி இருப்போம் இதை."

முகில் அசந்து நிற்பதை கொஞ்சம் ரசித்துவிட்டு டேனியல் தொடர்ந்தான்.

" இந்த டேனியல்  என்கிற நண்பனை உனக்கு வெறும் சாதாரண கேம் டெவலப்பராக தான் தெரியும் ஆனால் நான் அதற்கெல்லாம் மேல ...ரொம்ப மேல.. நீ கற்பனை பண்ண முடியாத அளவு கண்டுபிடிப்பாளன்.
இந்த ...கண்ணுல virtual reality டிவைஸ் மாட்டி கிட்டு 3D effect ல game விளையாடுவது பார்த்து இருப்ப ஆனா நான் கண்டு பிடித்த இந்த game tech ..அதை விட 100 மடங்கு அற்புதமான சரக்கு. இதில் ஒரு தனி உலகத்தையே உருவாக்கி அதில் உன்னை போல நிஜ கேரக்டரையும்..  இவர்களை மாதிரி (அந்த மொட்டைகளை காட்டி ) உருவாக்க பட்ட கதாபாத்திரங்களையும் ஒன்றாக ரத்தமும் சதையுமாக உலவ விட முடியும். முகில் நீ பார்த்த ரயில் காடு மலை அருவி.. எல்லாமே வெறும் ஒரு பூட்டின ரூமில் நீ கண்ணை மூடி கொண்டே பார்த்தது னு சொன்னா நம்புவியா... "

முகில் அவனை திகைத்து போய் பார்த்து கொண்டு இருந்தான்.  உண்மையில் அவன் சொல்வது ஒண்ணுமே முகிலுக்கு புரியவில்லை...

"நீ ..நீ.. ஏதோ குழப்பம் பண்ற... நான் ..நான்.. லக்னோ போற ஒரு பயணி.. ரயில்ல நான் தூங்கின பின்..நீ கடத்தி வந்து என்ன எதோ பண்ற....." என்றான் முகில் தட்டு தடுமாறி...

"ஹா ஹா...ஹா ஹா... " அந்த அரங்கம் அதிர சிரித்தான் டேனியல்...
"நான் குழப்பம் பண்ணல டியர் குழப்பம் தெளிவிக்கிறேன் "

"முகில்.... முகில்.... மை டியர் நண்பா.. நீ போறனு சொல்ற அந்த லக்னோ.. நான் உனக்கு பண்ண brain game ப்ரோக்ராம் நண்பா. என்ன நம்பிக்கை இல்லையா..?. சரி அப்போ நான் கேக்கிற ஒரு எளிமையான 2 மார்க் கொஸ்டின் க்கு ஆன்ஸ்வர் பண்னு பார்க்கலாம்... மூச்சுக்கு முன்னூறு தடவை நான் லக்னோ போறேன் லக்னோ போறனு சொல்றீயே.. நீ லக்னோ ஏன் போயிட்டு இருக்க னு சொல்லு பாக்கலாம்.... "

"நான் லக்னோ எதற்காக போகிறேன் என்றால்.... எதற்காக போகிறேன் என்றால்...."  நான் பரீட்சையில் படிக்காமல் வந்தவன் போல விழித்தேன் . .சாரி சாரி முகில் விழித்தான். ஆம் நிஜமாக அதற்கு முகிலுக்கு விடை தெரிய வில்லை என்பதை உணர்ந்தான்.

"மை டியர் பிரன்ட்.. இந்த கொஸ்டினை நீ சாய்ஸ் ல தான் விட்டு ஆகணும் இன்னும் 10 மணி நேரம் யோசித்தாலும் விடை சொல்ல முடியாது காரணம் உனக்கு நான் அதை இன்னும் ப்ரோக்ராம் பண்ணவே இல்லை .
நீ உண்மையில் இப்போ ரயிலிலும் இல்லை ஸ்டேஷனிலும் இல்லை.. நீ இப்போ எங்க இருக்க தெரியுமா.... ஒரு வானந்திர பிரதேசத்துல எனது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கைவிட பட்ட பில்டிங் ல என்னோடைய ஒரு பர்சனல் டெம்பரவரி லேப் ல சோதனை அறை ல கான்ஷியஸ் இல்லாம படுத்து இருக்க.
இப்ப நான் பேசிட்டு இருப்பது உன் மூளைக்குள் ஊடுருவி... என்ன நம்பிக்கை இல்லையா ?"

முகில் பேச ஏதும் இன்றி நின்று இருக்க டேனியல் தொடர்ந்தான்...

"உன்னையே நீ பாக்க விரும்பரியா ? like a out of body experience. அந்த காலத்தில் சித்தர்கள் சாதித்தது மாதிரி.. வா.. இங்க உட்கார் "

 அவன் சொன்ன இருக்கையில் மந்திரித்து விட்டவன் போல அமர்ந்தான் முகில். அவன் கைகளில் அணிந்து இருந்த கையுரையில் மீண்டும் ஏதோ செய்தான். ஹாலின் மையத்தை நோக்கி கையை காட்டினான்.

இப்போது மேலே கூரையில் இருந்த
சின்ன ப்ரொஜெக்டர் மாதிரி கருவி ஒளியை அறையில் பாய்ச்சியது அது ஒரு ஹைடெக் 3d ஒளி பரப்பு கருவி..
அந்த ஹாலில் மையத்தில் ஹாலோ கிராபிக் இல் தத்ரூபமாக காட்சியை ஒளி பரப்பியது..

அதில் மிஷின்கள் ..மின்னணு கருவிகள் கணினிகள் ..மானிடர்கள்.. நிறைந்த ஒரு அறையில் நடுவே ஸ்ட்ரெக்ச்சர்  மாதிரி அமைப்பில் ஒருவன் படுத்து இருந்தான்.. அவன் வேறு யாரும் இல்லை முகில் தான்.
அதாவது......
சுழலும் அறையில் இருந்து இதை பார்ப்பவன் முகில் இதை பார்க்க வைத்தவன் முகில் அங்கே காட்சியில்  நின்று கொண்டு இருப்பவன் முகில் . அவன் காணும் காட்சியில் அங்கே படுத்து இருப்பவனும் முகில்.

அந்த படுத்திருந்த முகில் தலையில் ஹெல்மட் மாதிரி அமைப்பு மாட்ட பட்டு இருக்க அதில் L.E.D கள் ஒளிர்ந்து கொண்டு இருந்தது.. அவன் அருகே அங்கு ஒரு  டேனியல் கண் மூடி அமர்ந்து இருந்தான் அவன் தலையில் இருந்து ஒரு சின்ன கருவியில் இருந்து wire அந்த முகில் ஹெல்மெட் இல் இணைந்து இருந்தது. பக்கத்தில் சுவரில் ஒரு பெரிய மானிடர் இருந்தது அதில் இதோ என் கண் முன்னால் இருக்கும் இந்த முகிலும் இந்த டேனியலும் இந்த ஹாலில் இப்போது பேசி கொண்டு இருக்கும் இந்த காட்சி லைவ் ஆக ஒளி பரப்ப பட்டு கொண்டு இருந்தது.

"இதான் உன் ரியாலிட்டி... நிஜ உலகம். இப்ப நீ பேசிட்டு இருப்பது உனது மூளைக்குள் ஊடுருவி இருக்கும் என்னிடம். அதாவது நான் கட்டமைத்த உலகில். உன் நிஜத்தை லைவ் வீடியோ பண்ணி அதை இதோ இந்த ஹெல்மட் வழியே உனது மூளைக்குள் அனுப்பி மீண்டும் காட்சிப்படுத்தி தான் உன்னை நீயே பார்க்க முடிகிறது.. உன் மூளையில் நீ 'பார்க்கும் ' விஷயங்கள் அனைத்தும் நிஜ உலகில் உன் அருகில் அதோ அந்த ஸ்க்ரீனில் ஒளிபரப்பாகும். Reality to virtual... Virtual to reality... This is my new level 'virtual reality..'.
the great invention of the great Daniel.    "callosum controller"  சுருக்கமா ."CALL-CON "  

உனக்கு Callosum தெரியும் இல்ல.. "corpus callosum " அதாவது வலது cerebrum மற்றும் இடது cerebrum ஐ இணைக்கும்.. ஒரு...ஒரு... fiber bundle னு வச்சிகளாம்.. its like a communication bridge. பள்ளி பாடங்களில் மூளையின் படம் வரைந்து பாகம் குறிக்கும் போது இதை படித்து இருப்போமே.
உனது வலது இடது மூளைகள் தங்களுக்குள் தகவல் பரிமாறி கொள்வது இதன் வாயிலாக தான். உடலின் இடது பாகத்தை வலது மூளையும் வலது பாகத்தை இடது மூளையும் கட்டுப்படுத்தும் னு ஸ்கூல் ல படிச்சி இருப்ப இல்ல. உன்னோடைய க்ரியேட்டிவிட்டி பகுதி இதுல எங்க இருக்கு சொல்லு.... ? உனது வலது மூளையில்.

இங்கே தான் எனது call con புகுந்து நான் சொல்லும் சிக்னல் ஐ கொடுக்கும். ஒரு மனிதன் வலியை உணர சம்பந்த பட்ட உறுப்பு தேவை இல்லை தெரியுமா ? உனது இடது காலை துண்டாக்கி தனியாக எடுத்து விட்ட பின்பும் கூட உனது காலின் கட்டை விரலில் வலியை உண்டாக்க முடியும். இரண்டாம் உலக போரில் காலே இல்லாத சோல்ஜர் ஒருவன் கால் கட்டை விரலில் கடுமையான வலி இருப்பதாய் துடித்த போது இதை கவனித்தார்கள். நீ வீணை சப்தம் கேட்காமலே வீணை இசையை கேட்க வைக்க முடியும். நீ வீணை கேட்கும் போது மூளையில் எங்கே மின் துடிப்பு எவ்வளவு உண்டாகிறது என்று அறிந்து செயற்கையாக அதே மின் துடிப்பை கொடுத்தால் போதும்.. வீணை இசை கேட்கும்.. மனிதன் உணரும் எல்லாம் உணர்வுகளுமே மூளை எனும் அற்புதத்தில் நடக்கும் மேஜிக்.. "

இப்பொழுது அவன் முகம் ரத்தம் குடித்த ஓநாய் போல் மாறி இருந்தது.

முகில் மெல்ல மெல்ல இப்பொழுது அந்த விபரீதங்களை ஜீரணிக்க தொடங்கி நம்பத் தொடங்கி இருந்தான்.
இவன் விபரீதமானவன்...மிகமிக விபரீதமானவன். பிளாக் மாம்பா விட கொடிய நச்சு பாம்பு என்று நினைத்தான் முகில்.

"முகில் இதெல்லாம் எப்படி நான் பண்ண முடிந்தது என்று உனக்கு குழப்பம் இருக்கும்.. கொஞ்சம் விரிவா சொல்றேன்.. பொறுமையா கேளு..
நான் ஒரு game creator  அது உனக்கே தெரியும். சில சைக்கோ தனமான மூளையை ஆக்கிரமிக்கும் அசாதாரண 3D game களை உண்டு பண்ணினேன். அதன் கொடூரத்தை பார்த்து யாரும் வாங்கவே பயந்தார்கள். அப்படி மீறி என்னை தேடி வந்த சில கஸ்டமர்களை தான்..நீ உன் இயற்கை வாழ்வு னு பாழாப்போன ஸ்பீச் கொடுத்து கெடுத்த நியாபகம் இருக்கா ? அன்னைக்கு மட்டும் எனக்கு எத்தனை டாலர் நஷ்டம் தெரியுமா ?

ஆனால் தளராமல் நான் அதை வெளிநாட்டு இணைய கள்ள சந்தையில் விற்றேன்.. டார்க் வெப் டீப் வெப் தான் எனது சந்தை களம் அங்கே தான் அறிமுகம் ஆனார் ...
' ஜான் வால்டர் டெய்லர் '
அவர் முன்பு ஒரு முறை நீ கமெண்ட் அடித்தது போல ஏதோ உன் பக்கத்து தெரு டெய்லர் இல்லை..பிரபல மூளை நிபுணர்.. deep web ரெகுலர் கஸ்டமர் அவர்.

'நாம் இருவரும் இணைந்தால் ஒரு புதிய அற்புதத்தை உண்டு பண்ணலாம் ' என்றார்.
இந்த பழைய மாடல் படி VR ஐ கண்ணில் மாட்டி கொள்வதை தூக்கி தூர போடு.. உனது கேமை என்னிடம் கொடு நான் அதை மனித மூளைக்குள் நேராக உள்ளே செலுத்த முடியும் என்றார். அப்படி உண்டானது தான் call con ப்ரோக்ராம்.

அவரது ஸ்பெஷல் ஹெல்மெட் பற்றி சொன்னார். எனது game ஐ சிப் இல் வைத்து அதை அவர் கண்டு பிடித்த ஹெல்மட்டில் சொருக வேண்டும் அவ்வளவு தான் . அதன் பின் நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு வேண்டிய ஆளை...சாரி.. ஆக்சுவலி.. வேண்டாத ஆளை பிடித்து வந்து அவனுக்கு மயக்க மருந்து கலந்து கொடுதோ இஞ்ஜக்சன் பண்ணியோ மயக்கம் ஆக்கி இந்த ஹெல்மட்டை அனிய வைக்க வேண்டும் இதில் உள்ள ஊசிகள் சரியாக சில நரம்பில் குத்தி கொள்ளும்.  தனக்குள் feed பண்ண பட்ட உலகத்தை சப்ஜெக்ட் க்கு மூளையில் மின் துடிப்பாக feed பண்ணும் .

சப்ஜெக்ட் அதை நிஜ உலகம் என்று நம்ப தொடங்குவான். அந்த சப்ஜெக்டின் எதிர் வினை பொறுத்து game இல் ப்ரோக்ராம் செய்யப்பட்ட கதாபாத்திரங்கள் எதிர்வினை ஆற்றும். அந்த உலகத்தில் எனது game கள் தனக்கே உரிய screen play கொண்டு இருக்கும். உனக்கு நான் கொடுத்த ரயில் பயண ஸ்க்ட்ரிப்ட் போல...
அதற்கு அவனது மூளை தொடர்ந்து எதிர்வினை ஆற்றி கொண்டு இருக்க அவைகளை வெளியே மானிட்டரில் நாங்கள் கண்டு களிப்போம்.. அதை பதிவு பண்ணுவோம் அதை டார்க் வெப் இல் நல்ல விலைக்கு விற்போம். Live போடுவோம்... இந்த game ஐ சப்ஜெக்ட் எங்களுக்காக மூளையில் வலியை உணர்ந்த படி விளையாடும். கேம் நல்லா இருந்தா அதை save பண்ணி வேற சப்ஜெக்ட் க்கு சூப்பர் இம்போஸ் பண்ணி இதே கேமை விளையாட வைக்கவும் முடியும்..சப்ஜேக்ட்  நிஜத்தில் வலியை உணரும் நிஜத்தில் உடல் கூட துடிக்கும்..ஆனால் தனக்கே தெரியாமல் ...செம ஜாலி இல்ல.. "

அவன் பேச்சை கேட்க கேட்க இப்போது இந்த முகிலின் விர்சுவல் உடல் பயத்தில் மெதுவாக நடுங்கியது.. டேனியல் ஒரு கொடூர சைக்கோ என்கிற உண்மை முகிலுக்கு மெல்ல புரிய தொடங்கியது..
கடைசியாக முகில் அவன் வீட்டுக்கு அவனை பார்க்க சென்றது நினைவு வந்தது அதன் பின் தான் தன்னை ஏதோ பண்ணி இருக்கிறான். என்று முகில் புரிந்து கொண்டான்.

"ஒரு நாள் உன் பிஸ்னசை கெடுத்ததுக்காகவா.. என்னை...என்னை.. இப்...இப்படி கொடூரமா பழிவாங்கற... " என்றான் முகில் நடுக்கமாக...

"ஹா ஹா..என்ன ரொம்ப சீப்பா எடை போட்டு இருக்க மைடியர் முகில்.. பழி வாங்கறது னு ஏதோ 80 காலத்து தமிழ் சினிமா வில்லன் மாதிரி என்னை கற்பனை பண்ணாத..
இது பழி வாங்கறது இல்ல .. டியர்..
This is science experiment... And you are my first subject. பெருமை படு பின்னால் ஆயிரகணகாண சப்ஜெக்ட் வந்தாலும் நீ தான் முதல். என் ப்ராஜெக்ட் ஹிஸ்டரியில் உனக்கு என்றைக்கும் ஒரு தனி இடம் உண்டு.

எங்களது கண்டு பிடிப்பை மனிதனுக்கு சோதனை பண்ணலாம் னு சோதனை எலியை தேடி கொண்டு இருந்த போது தான்.. என் பிஸ்னசை கெடுத்து என்னுடைய வெறுப்பை சம்பாதித்து இருந்த ..அப்பவே முடிவு பண்ணேன் நீ தான் என் முதல் சோதனை எலி.. my dear rat "

இந்த ஹாலில் நுழைந்ததும் அவன் தன்னை rat என்று அழைத்து ஏன் என்று இப்போது தான் முகிலுக்கு புரிந்தது..

"உனக்காக தான் காட்டில் கைவிட பட்ட ஒரு கட்டிடத்தை வாங்கினேன் மராமத்து செய்து  மின்சார வசதி..செய்து ஒரு டெம்பர்வரி லேப் உண்டு பண்ணினேன்.

என்னை காண வீட்டுக்கு வந்த உன்னை காபியில் மயக்க மருந்து கொடுத்து.... என்ன செய்ய இது 80 காலத்து டெக்னீக்தானாலும் பலன் அளித்ததே.
உன்னை லேபில் கொண்டு வந்து வைத்து முதல் சோதனை தொடங்கினேன். உனக்காக பிரத்தியேக game ஐ உண்டு செய்தேன். Game கதாபாத்திர வடிவமைப்புக்கு reference உனது நிஜ உலகில் இருந்தே எடுத்தேன். நீ தினம் பார்க்கும் பார்பர்.. பூக்காரி அப்புறம் உன் தங்கை நீலா.. நீ படிக்கும் நியூஸ் பேப்பர்..இப்படி. இடையே கொஞ்சம் நான் பயன் படுத்தும் பொருட்களும் reference எடுத்து இருக்கிறேன்..உதாரணம் இந்த டிராகன் படம் போட்ட காகித காபி கப்.
நீ தினம் பார்க்கும் ஆட்களை கொஞ்சமே கொஞ்சம் உருவம் மாற்றி உலவ விட்டேன். உன் மூளைக்கு நான் கொடுத்த சவால்.
மேலும் நிஜ உலகில் இருந்து reference எடுத்தால் தான் நீ நிஜம் எது நிழல் எது என்று புரியாமல் தொடர்ந்து குழம்பி கொண்டே இருப்பாய்.

உனக்காக நான்கு லெவலில் ஒரு விளையாட்டை உண்டு பண்ணினேன். அதில் துரத்தல் உண்டு.. காதல் உண்டு..குழப்பம் உண்டு.. சஸ்பென்ஸ் உண்டு. உன்னை தொடர்ந்து குழப்பத்தில் வைத்து இருக்கும் படி அதில் திரை கதை இருக்கும்.

லெவல் 1 ஐ நீ முடித்தால் லெவல் 2 விலிருந்து வெறும் சேஸிங் மட்டும் தான்.. வரும் வழியில் பார்த்து இருப்பியே வெறி நாய்கள்.. அது உனக்காக தான். அதிலிருந்து நீ தப்பினால் லெவல் 3 ஆயுதம் ஏந்திய கொலைக்காரர்கள். அவர்களை நீ கடந்தால் லெவல் 4 அது தான் காடும் காட்டுவாசிகளும். இதில் யாராவது ஒரு enemy உன்னை  இங்கே கொலை செய்து விட்டால்.. அங்கே நிஜத்தில் உனது மூளையின் முக்கிய பாகதில் சின்ன பட்டாசு வெடிக்கும் அந்த முக்கிய பாகம் சிதைந்து செயலிழந்து போகும். Like a brain death  .and you will be like a vegetable. எனவே உன் உயிரை நீ இங்கே காபாற்றி வைத்து இருப்பது ரொம்ப முக்கியம்.

இதை வைத்து உலக அளவில் டார்க் வெப்பில் பந்தயம் கட்டினால் பயங்கரமாய் சம்பாதிக்கலாம்..  உலக பணக்காரர்கள்  சைக்கோகள்.. தங்களுக்கு விருப்பமான பிளேயர் மீது லட்ச கணக்கில் கட்டுவார்கள். கிரிக்கெட் மேட்சை எல்லாம் தூக்கி சாப்பிட போகுது இந்த game..
நீ இப்ப டெஸ்டிங் mode ல இருக்க டியர்.. அதாவது என்னை மாதிரி வெளி ஆட்கள் game இல் உள்ளே interact ஆக முடியுமா என்ற சோதனை.. and than almost we have succeeded ."

"ஒரு வேளை நீ தப்பித்து லெவல் 4 தாண்டி விட்டால் மீண்டும் உன்னை ரயிலில் தூக்கி போட்டு விடுவார்கள். மீண்டும் லெவல் 1 இல் இருந்து விளையாட்டு தொடங்கும் . A never ending game..like never before.
ஆனால் ...

இங்கு தான்.. நீ நாங்கள் எதிர்பாராத வகையில் லெவல் 1 யிலிருந்து தாவி லெவல் 4 க்கு போய் எங்களுக்கு ஆச்சர்யம் கொடுத்தாய். உன் விளையாட்டை ரசித்தேன்... உன் துணிச்சலுக்கு பாராட்டுகளுடன் பரிசு கொடுக்க நினைத்தேன். அதான் இந்த உண்மைகளை எல்லாம் உனக்கு சொல்லி விட்டேன்.. இதான் நான் கொடுக்கும் பரிசு.. உண்மையில் இதுவும் ஒரு எக்ஸ்பிரிமெண்ட் தான்..ஒருவன் கால்கன் பற்றி தெரிந்து கொண்டே விளையாடினால் எப்படி இருக்கும் என்ற சோதனை... எனவே தயாராய் இரு..பாக்கலாம் எவ்ளோ நேரம் தாக்கு பிடிக்கிறாய் என்று.. And than i hope u will not disappoint me.
அப்புறம்..  ரொம்ப போர் அடிச்சா சொல்லு இவளை அனுப்பி வைக்கிறேன் " என்றான்

 கைகளை சொடுக்கினான். பின்னால் இருட்டில் இருந்து அவள் வெளிப்பட்டு அவன் அருகில் வந்து நின்றாள்.

 'மானஸா '.....

வெள்ளை சுடியில் இருந்தாள் என்னை பார்த்து கை அசைத்து புன்னகைத்தாள் . காதல் ஒரு மாயை என்று கூட கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால்  இங்கே காதலியே மாயை. என்று நினைத்தேன். சாரி சாரி..நினைத்தான்.  என்னை பார்த்து இல்லை அவனை பார்த்து கை அசைத்தாள்..

நான் இப்போது இறந்து போன சவம் போல் ஆனேன்..தப்பிக்கவே முடியாத ஒரு சைக்கோபாதிக் மரண விளையாட்டு இது என்று புரிந்து கொண்டேன்..சாரி புரிந்து கொண்டான். உடல் உதறல் எடுத்தது.

டேனியல் கைகளை தட்டினான்..
அறையின் காட்சி மாறியது.. உடனே முகில்  மேல் வானத்தில் இருந்து பூ மழை பெய்தது..
"Congratulation you finished level 1 " என்றது ஒரு ஆசிரிரி..

அதை தொடர்ந்து.." level 2 starts now " என்றது..
ஹால் முழுக்க சைரன் ஒளி கேட்டது.. அங்கே ஒரு கதவு திறக்க வெறி நாய்கள் அங்கே இருந்து பாய்ந்து வர........

"நீ விளையாடிட்டு இரு எனக்கு ஜான் வால்டர் டெய்லர் கூட மீட்டிங் இருக்கு உண்ண அப்புறம் சந்திக்கிறேன் டியர் "என்று சொல்லி விட்டு டேனியல் கிளம்பினான்.

🕸   எப்போது வெளியேற்றினார்கள் என்று தெரிய வில்லை திடீரென முகில் ஸ்டேஷனுக்கு எதிரே தன்டவாளத்தில் ஓடி கொண்டு இருந்தான். அது காட்டை நோக்கி செல்லும் தன்டவாளம்.
முகிலுக்கு பின்னால் பிசாசுகள் போல அந்த வெறிநாய்கள் துரத்தி வர... welcome to level  2 என்ற எழுத்துகள் வானத்தில் ஒளிர்ந்தது.

முகில் முடிவில்லா பாதையில் முடிவில்லா பயணம் நோக்கி பீதியுடன் முடிந்தளவு வேகமாக ஓட தொடங்கினான்.

சரியாக 20 நிமிடம் கழித்து அந்த வெறி நாய்கள் முகிலின் கழுத்தை கடித்தன.


      ✴          ✴               ✴             ✴

சூறாவளியாய் சுற்றும் அறை கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து நின்றது .

முகில் என்னை பார்த்து புன்னகை செய்தான். எனக்கு மூளை சுத்தமாக வேலை செய்வதை நிறுத்தி இருந்தது.

"ரொம்ப குழப்பமா இருக்கு இல்ல இன்னும் கொஞ்சம் காட்சி பாக்கி இருக்கு முகில்.. அதையும் பார்த்து விட்டால் உனக்கு எல்லாமே கிரிஸ்டல் க்ளியரா புரிந்து விடும் அது வரை குழப்பமாக தான் இருக்கும்  கொஞ்சம் பொறுத்து கொள் "என்றான் முகில்.

(தடக் தடக்.. அடுத்த அத்தியாயத்தில் முற்றும் .)

🚉    🚉    🚉    🚉     🚉     🚉    🚉    🚉

அத்தியாயம் 11

(இறுதி அத்தியாயம்.)

"என்ன ரெடியா அடுத்த காட்சி காண .."
என்றான் அந்த முகில் .
அந்த அறை மீண்டும் சுழல தொடங்கியது மீண்டும் இருட்டில் ஆழ்ந்தேன்

        ✴          ✴             ✴            ✴

அந்த கரடுமுரடான தண்டவாளத்தில் எவ்வளவு தூரம் முகில் ஓடினான் என்று தெரியாது. நீண்ட நேரமாக இப்படியே ஓடி கொண்டு இருந்தான். அவனது கால்கள் களைப்படைந்து விட்டதை அவனால் உணர முடிந்தது.
அதற்கு மேல் சக்தி இல்லாமல் தண்டவாளத்தில் துவண்டு உட்கார்தான். அப்படியே முட்டி போட்டு மடங்கினான். அவனை துரத்தி வந்த வெறி நாய்கள் அவனை மிக நெருங்கி இருந்தன. அபாய கரமாக வாயை பிளந்து படி அவைகள் பாய்ந்து வந்தன. வாயில் எச்சில் ஒழுக என்னை சாரி... அவனை நெருங்கின. அவைகளின் மிக கூரான கோரை பற்கள் அந்த முடிவே இல்லாத இரவின் நிலாவின் வெளிச்சத்தில் பளபளப்பாக மின்னியது.

இப்போது அவைகள் முகிலை ஆசை தீர சூழ்ந்து கொண்டன.
அவன் கையை அசைக்க கூட திராணி இன்றி அப்படியே பரிதாபமாக மல்லாந்தான் .

ஒரே நேரத்தில் பல நாய்கள் அவனை நெருங்கி ஒரே நேரத்தில் பாய்ந்தன. முகில் கண்ணை மூடும் கடைசி நொடி அந்த நாய்களின் கொடூர முகத்தைதானா பார்க்க வேண்டும் என்று வருந்திய படி கண்களை  மூடினான். அவைகள் அதிரடியாக அவன் மேல் பாய்ந்து கழுத்து எலும்பை குறி வைத்து கடித்தன.

"பட்டாக்..."

      ✴             ✴               ✴              ✴

முகில் தன்னை சுற்றி இருள் வெள்ளம் சூழ்ந்ததை உணர்ந்தான். மெல்ல கண்ணை திறந்து பார்த்தான். வெறி நாய்கள் தன்னை கொன்று விட்டதா என்று அச்ச பட்டான்.
முகிலை சுற்றி இருள் இருள் இருளை தவிர வேறு எதுவும் இல்லை.. முகில்
பேச முயற்சித்தால் வார்த்தை வர வில்லை.

என்ன ஆச்சு..??
இதான் மூளை சாவா . உணர்வுகள் நிரம்பிய முடிவில்லாத இருள்.. இதானா அது..

"You will be like a vegetable .. " டேனியலின் பயமுறுத்தும் வார்த்தைகள் முகிலின் காதுக்குள் ஒலித்தன.

முகில் இருட்டில் மெல்ல கையை அசைத்தான். கையில் ஏதோ கொச கொசவென்று தட்டுப்பட்டது. என்ன அது ??
மெல்ல அதை தொட்டு தடிவினான். அட ஓயர்கள்...
தண்டவாளத்தில் ஏது ஓயர்ககள்.. ஒருவேளை இது ஒரு லெவல் ஆ..
சடாரென மூளையில் ஒரு விளக்கு எரிந்தது. முகிலின் உள்ளுணர்வோ அல்லது ஆறாம் அறிவோ அவனை எச்சரித்தது.
இது call con அல்ல இது நிஜ உலகம்..

எப்படி game ஐ விட்டு வெளியேறினான் ? என்று குழம்பினான் முகில்
சட்டென்று எல்லாம் அவனுக்கு புரிந்தது..

இந்த இருளின் அர்த்தம் புரிந்தது..

"பவர் கட் "

ஆம் டேனியலின் ஹெல்மட் இயங்க தேவையான பவர் இல்லாமல் சிஸ்டம் ஆப் ஆகி இருக்கிறது. காட்டுக்குள் அவசர அவசரமாக மின் வசதி செய்து டெம்பர்வரி லேப் பண்ணதாக டேனியலே சொல்லி இருக்கிறான். அப்போது supply backup ஏற்பாடு பண்ண தவறி இருக்கிறான். பெரிய அறிவாளிகள் செய்யும் சின்ன தவறு பெரிய விளைவை கொடுக்கும்.
முகில் தான் ரயிலில் படித்த செய்தி தாளை நினைத்து கொண்டான். அதில் இந்த வாரம் முழுக்க கரண்ட் கட் இருக்கும் என்ற தகவல் நினைவுக்கு வந்தது. என்ன தான் அது 'கால்கன்' உலகமாக இருந்தாலும் அதற்கு ரெபரன்ஸ்.. நிஜ உலகில் இருந்து தான் டேனியல் எடுத்தான். அந்த கரண்ட் செய்தி ஒரு நிஜ உலக செய்தி.

முகில் அவசரமாக செயல் பட்டான். கையை தூக்கி தனது தலையில் மாட்டி இருந்த அந்த கருமத்தை கழட்டி வீசினான்.

ஹா.....

நிம்மதி பெருமூச்சு ஒரு ரயிலின் காற்றை போல வெளிப்பட்டது...

நரகத்தை தொட்டு முத்தமிட்டு விட்டு வந்து இருக்கிறான் சும்மா இல்லை.

இருட்டில் ஒரு கணம் அசையாமல் நின்றான்..

டேனியல் தனக்கு தன்னையே  ஒளிபரப்பி காட்டிய போது அதில் தெரிந்து இருந்த இந்த அறையின் வடிவத்தை மன கண்ணில் ஓட்டி பார்த்தான் முகில்.
ஆம் தனக்கு நேர் பின் புறம் தான் கதவு இருந்தது.

முகில் தட்டு தடுமாறி நடந்து சென்று கதவை தடவி திறந்தான்.

சுள்லென்று வெய்யில் உள்ளே நுழைந்தது. வெளி உலகில் இப்போ மதிய நேரம் போல.
அதீத நம்பிக்கையில் டேனியல் கதவை கூட தாழ் போடாமல் சென்று இருந்தான்.

உள்ளுணர்வு முகில் ஐ ஓடு என எச்சரித்தது.. ஆனால் அவன் மனம் அதை மறுதலித்தது...

அவன் ஒரு தீர்மானத்தோடு மீண்டும் அறைக்குள் சென்றான். அவன் நுழைந்த உடன் சடாரென கரண்ட் வந்தது. அந்த ஹெல்மட் ஒளிர்ந்து. அதில் இருந்த குட்டி டிஸ்பிளே வில்.. "Subject not found " என்று மின்னி மின்னி மறைந்தது.

அவன் வெறி தனமாக பாய்ந்து அதை பிடுங்கி தூக்கி போட்டு உடைத்து......
 அங்கே இருந்த மானிட்டரை தள்ளி.... உடைத்து...மொத்த ரூமையும் சூறையாடி.........

.....இப்படி தான் செய்ய நினைத்தான்
 ஆனால் முகில் அங்கே எதையும் தொட கூட வில்லை.
அவன் மூளையில் இப்போது வேறு திட்டம் இருந்தது.

"அதை" தேடியது..அது இங்க தான்  இருக்கும்..
எங்கே.. ட்ராவில் தேடினான் இல்லை.. செல்பில் இல்லை..எங்கே ?'அது' நிச்சயம் இங்கே தான் இருக்க வேண்டும் நிச்சயம் 'அதை 'டேனியல் தனது கற்பனையில் இருந்து உண்டு பண்ணி இருக்க மாட்டான்.
அதோ மேஜை ஓரத்தில் 'அது 'இருந்தது.
ஆப்பிள் நறுக்கி விட்டு வைக்க பட்டு இருந்தது.

"பூ போட்ட கத்தி "

அதை கையில் எடுத்தான் கதவை சாத்தினான்.. ஒரு மலை பாம்பை விட அதிக பொறுமையோடு தனது இரைக்காக காத்து இருந்தான்.

நீண்ட காத்திருப்பிற்கு பின் அந்த காலடி சப்தம் கேட்டது.
டேனியல் அறைக்குள் நுழைந்தான்.
முகில் பசித்த புலி போல அவன் மேல் பாய்ந்தான். கத்தி அவன் தோல் பட்டையை பதம் பார்க்க அவனை வலிமையாக தாக்கி வீழ்த்தி........

       ✳              ✳               ✳              ✳

டேனியல் கண்ணை முழித்த போது காலில் ஜல்லி கற்கள் குத்தியத்தை தான் முதலில் உணர்ந்தான்.
எங்கே இருக்கிறோம் என்பதை அண்ணாந்து பார்த்த போது  தண்டவால நடுவில் முட்டி போட்டு அமர்ந்து இருப்பது புரிந்தது.

"மாஸ்டர் அவன் கண்ணை முழிச்சிட்டான் மாஸ்டர் "

டேனியல் அதிரிச்சியாக நிமிர்ந்து பார்த்தான் அங்கே அந்த மொட்டையில் ஒருவன் நின்று இருந்தான் . அப்போது தான் அவன் மாஸ்டர் என்று அழைத்தது முகிலை  என்பதை டேனியல் கவனித்தான்.

"வாட் நீ மாஸ்டரா " என்றான் அதிர்ச்சியில் உறைந்து போய்.

"எஸ் இப்போ நான் தான் மாஸ்டர்... game க்கு உள்ள இருக்கிறவன் slave.  வெளியே இருக்கிறவன் மாஸ்டர் ..இது நீ பண்ண டிசைன் தானே...
அப்புறமும் பாரு..செமையா பண்ணி இருக்க இதை.. ரொம்ப ஈஸியா இருக்கு விளையாட..just main holder ஐ உனக்கு போட்டு விட்டு axillary holder ஐ நான் தலையில் போட்டு கொள்ள வேண்டும் அதன் பின் நான் சிந்திப்பது தான் இங்கே நடக்கும்.. ஆனால் உணக்கோ புரோகிராம் பண்ணது மட்டும் தான் நடக்கும்.. "

என்றான் முகில்..

டேனியல் ரத்தம் உறைந்தவனாய் முகிலை பார்த்தான்..

"இது...இது... இது...ஒரு endless game...ஆச்சே.. அய்யோ கடவுளே இதில் சிக்கினால்.... Its a suicide game.. இதிலிருந்து யாரும் மீள முடியாது.
சாகும் வரை ஓடி கொண்டு இருக்க வேண்டும்..இங்கே மரணித்தால் அங்கே brain death ஆகி....."
அவன் விழிகள் பயத்தில் வெளிறி போய் இருக்க முகில் சிரித்தான்.

ஹா ஹா மை டியர் டேனியல்.. நான் நீ உன்னோடைய game ஐ கொஞ்சம் வித்தியாசமா விளையாட போறேன். உன்னை மாதிரி சைக்கோ வுக்கு எல்லாம் இந்த மாதிரி சைக்காலஜி கேம் தான் பிடிக்கும் இல்ல... அதான்... நீ கற்பனை கூட பண்ண முடியாத ஒரு விளையாட்டை விளையாட இருக்கேன்.
விளையாடி முடிச்சிட்டு வா.. கேம் எப்படி இருக்கு னு சொல்லு...போ..இப்ப போ... அந்த ரயிலுக்கு போ... ஹெவன் எஸ்பிரஸ் க்கு போ."

சொல்லி விட்டு திரும்பி பார்த்து கட்டளை இட்டான் முகில்.

"Lets start the game . "

  ✳              ✳               ✳              ✳

இடம் சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷன்..

ரயிலை பிடிக்க ரயிலை விட வேகமாக கலைத்து விட்ட கரையான் கூட்டம் போல ஓடி கொண்டு இருக்கும் மக்கள் இடையே அதோ  அந்த காபி ஷாப்பில் 2 காபி வாங்கி கொண்டு இருக்கும் அவன் .. அவன் அல்ல முகில்.. அந்த காபியை 5 நிமிட எதிர்காலத்தில் சொந்தமாக்க போகும் தான் தான் முகில் .. ...

என்று .....

ஆழமாக நம்பினான்....

"#-  டேனியல்  -#"


      ✳            ✳                ✳            ✳

அறை சுழல்வது நின்றது.

"என்ன டேனியல் குழப்பமா இருக்கா " என்று என்னை பார்த்து கேட்டான் முகில்.

நான் டேனியல் இல்ல முகில் என்று சொல்ல நினைத்த போது ...
சுவரில் ஓரமாக வைக்க பட்டு இருந்த ஆள் உயரம் கொண்ட ..ரத்த சிகப்பில் திரை கொண்டு மூட பட்ட அதை சடாரென்று விளக்கினான் முகில் .
அது ஒரு ஆள் உயர கண்ணாடி.

அதில் நான் முகம் பார்த்த போது அதர்ச்சியானேன்.

அங்கே தெரிந்தது டேனியல் முகம்.

"உண்மையில் இது கூட உண்மையான நீ இல்ல நிஜ ரியாலிட்டியில் தலையில் ஹெல்மட் மாட்டி படுத்து இருக்க நீ .இங்கே உனக்கு புரிய வைக்க தான் இந்த கண்ணாடி ஏற்பாடும் அப்புறம் ரெகார்டாட் காட்சிகளும். கொஞ்சம் கொஞ்சமா உன் கேம் ல எப்படி ஈடுபடனும் .. எப்படி சிந்தனையால் காட்சிகளை இயக்கனும் னு கத்துக்கிட்டேன் பாரு " என்றான் முகில்.

"ரொம்ப குழம்பி போய் இருப்ப இப்ப தெளிவா ..கிரிஸ்டல் கிளியரா சொல்றேன் கேட்டுக்கோ டேனியல்.
நடந்தது இதுதான்....

டேனியல் ஆகிய நீ என்னை உன் கேமில் சிக்க வைத்து ரசித்தாய்.
 உன்னோடைய கொடூர கேம் விட்டு பவர் கட் புன்னியத்தில் நான் தப்பி வெளியே வந்தேன்.  வெளியே வந்தபோது நல்ல வேலை என்னை கன்காணிக்க நீ அங்கு இல்ல.  அந்த வால்டர் டெய்லர் கூட மீட்டிங் னு சொல்லிட்டு போயிட்ட. நீ மீண்டும் இங்க வந்த போது.. நான் உன்னை வீழ்த்தி உன்னை உன் கேம் குள்ளேயே தூக்கி போட்டேன். உன் கூட ஒரு விசித்திர கேம் விளையாட நினைத்தேன்.

நான் ரயிலில் பயணித்து.. விசித்திரங்கள் சந்தித்து.. ஆற்றில் குதித்து.. காட்டுவாசிகள் கடந்து... மீண்டும் ரயில் பிடித்து ஸ்டேஷனில் உன்னை சந்திக்கும் வரை நடந்த கேம் ஐ நீ save பண்ணி வச்சி இருக்கிறதை பார்த்தேன்.
' உன் கேம் ஹிஸ்டரியை பதிவு பண்ணி சூப்பர் இம்போஸ் பண்ணி வேற ஒருத்தனை உன்னை போல் ஆட வைக்க முடியும் '
என்ற உனது வார்த்தைகள் நினைவில் வந்தது. அதை உனக்கே செய்தேன்.
நீ டேனியல் அல்ல முகில் னு உன்னை நம்ப வைத்து சூப்பர் இம்போஸ் பண்ணேன்.

உனக்கே தெரியும் சூப்பர் இம்போஸ் மோட் ல கேம் இருக்கும் போது பிளேயர் சொந்தமாக எந்த முடிவும் எடுக்க முடியாது .ஏற்கனவே விளையாடிய விளையாட்டை தான் ஒவொரு கட்டத்திலும் அந்த பிளேயர் உணர்ந்த அதே உணர்வுகளோடு விளையாட முடியும். Refresh ஆகி சொந்த நினைவு திரும்பும் வரை பிளேயர்ஸ் இம்போஸ் பண்ண சிந்தனையை தான் தனது சிந்தனை என நம்புவார்கள்.

இப்படி தான் நான் விளையாடிய மொத்த விளையாட்டும் உன்னை விளையாட வைத்தேன். மானசா மேல காதல்.. ஆற்றில் குதிக்கும் முடிவு... எல்லாமே உனது சிந்தனை னு நீ நினைச்சி விளையாட வச்சேன். ஆற்றில் ..காட்டில்.. ஃபைட்டில்... நான் உணர்ந்த வலிகள் உன்னையும் உணர வைத்தேன். ரயிலில் திகிலை சந்தித்து பயணித்து கொண்டிருப்பது முகில் என்றும் அது நீ தான் என்றும் டேனியலாகிய உன்னை நம்ப வைத்தேன்.

யாம் பெற்ற இன்பம் பெறுக நீ டேனியல். " என்று சொல்லி நிறுத்தினான்.

நான் மூச்சு விட மறந்து கிடந்தேன். என் நினைவுகளை refresh பண்ணி இம்போஸ் பண்ண பட்ட நினைவுகளை நீக்கி பழைய நினைவுகளை கொண்டு வருகிறான். அதை தான் நான் அறை சுற்றுவதாக உணர்கிறேன் என்று புரிந்தது. இவ்வளவு நேரம் தன்னிலை ஒருமையில் கதை சொல்லி கொண்டிருக்கும் நான் முகில் அல்ல டேனியல் என்று புரிந்தது.

முகில் மீண்டும் பேசினான்  இம்முறை வார்த்தையில் தீ யின் வெப்பம் இருந்தது.

"விஞ்ஞானம் என்ற வார்த்தைக்கு உனக்கு அர்த்தம் தெரியுமாடா முட்டாள் . நீ எல்லாம் ஒரு அறிவியல் தொழில் நுட்ப விரும்பி தூ....

இயற்கை மனிதனுக்கு கொடுத்த மிக பெரிய வரம் டா அறிவு. அந்த அறிவு பெற்ற பிள்ளைடா அறிவியல்.  இயற்கை தனது ரகசியத்தை தனது பிள்ளைகளுக்கு வெளி படுத்தி மகிழ்ச்சி அடைய இயற்கை தேர்ந்தெடுத்த சாதனம் டா விஞ்ஞானம். உன்னை மாதிரி சைக்கோ கைல சிக்கி தான் டா.. இன்னைக்கு அறிவியல் உலக வர்த்தகம்.. உலக வல்லரசு.. உலக பேரழிவு சக்தி ..தீவிரவாதி..பிஸினஸ் மருத்துவம்.. மரபணு மாற்று விவசாயம் னு யார் யார் கையிலோ சிக்கி .. நாறிக்கிட்டு இருக்கு... அறிவியல்னாலே மக்கள் விரோத ஆற்றல் னு பொது மக்கள் நம்ப ஆரம்பிச்சுட்டாங்க...

அறிவியலை ஆக்க பூர்வமா மனித குலத்துக்கு பயன் படுத்த தெரியாத நீ எல்லாம் இந்த உலகத்துக்கு திரும்பி வரவே கூடாது... உன்னை மாதிரி ஆளுங்களால் இயற்கையையும் விரும்ப முடியாது அறிவியலையும் நேசிக்க முடியாது.
நீ கண்டு பிடித்த இந்த கொடூர உலகத்துலயே வாழ்ந்து அங்கேயே சாவு..இதான் உனக்கு முடிவு... Lets start the game again.."

    ✳              ✳                ✳               ✳

இடம் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்.

காபி கடையில் காபி பிடித்து கொண்டு இருக்கும் அவன் முகில் அல்ல
அதை இன்னும் 5 நிமிடத்தில் குடிக்க போகும் ... தன்னை முகில் என்று நம்பும்..இவனும் முகில் அல்ல.

அந்த இடத்துக்கு சம்பந்தம் இல்லாத டைமன்ஷனில் ...நிஜ உலகில்....காபி சாப்பிட்டு கொண்டு...
டிஸ்பிளே வில் இந்த கேமை பார்த்து கொண்டு இருபவன் தான் ....

முகில்..

தடக் தடக் முற்றும்.

  🚋      🚉      🚞     🚊      🚄     🚅     🚌

பின் கதை :

போன் மணி பெண்மணி போல சிணுங்க... செல்லை செல்லமாய் எடுத்து காதுக்கு கொடுத்தார் வால்டர் டெய்லர்...
"டேனியல் நம்பரில் இருந்து போன் "

"எங்க டேனியல்...  ?ஓ அந்த காட்டிலே இருக்கிற லேப் க்கா.  ஓகே.    ஓகே.. வரேன்.
எப்போ வரணும்... ஓ சரி வரேன். ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு ? . "

'என்ன இன்றைக்கு காலைலயே வர சொல்லி இருக்கான் டேனியல் '

யோசித்த படியே காரை கிளப்பி வானாந்திரத்தை நோக்கி ஓட்டி சென்றான் டெய்லர்..

அங்கே...இவன் வருகைக்காக பசித்த புலி போல காத்து கொண்டு இருந்தான்

முகில் .

Comments

  1. Really superb.....

    you can be a science fiction novel writer.

    ReplyDelete
  2. Wow. Really amazing imagination. Wonderful play

    ReplyDelete
  3. அண்ணா வாய்ப்பே இல்ல மிகவும் அருமை ஓரு திரைபடத்துக்கான திரைக்கதையுடன் ரொம்ப ரொம்ப நல்லாருக்கு

    ReplyDelete
  4. அற்புதமான கதை. விவரிப்பில் சுஜாதா ஞாபகம் வருகின்றது. இன்னும் விரிவாக எழுதுயிருந்தால் ஒரு தேர்ந்த ஸ்யின்ஸ் பிக்‌ஷன் நாவலே தயாராக இருந்திருக்கும். வாழ்த்துகள்!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"