"துப்பறியும் கருப்பு "



"துப்பறியும் கருப்பு "

("ஒரு கொலை, ஒரு தற்கொலை
ஒரு காதல்")

(க்ரைம் குறுந்தொடர் )

ரா.பிரபு

'இன்ஸ்பெக்டர் கருப்பு 'தனது தடதடக்கும் புல்லட்டை அந்த காலேஜ் காம்பவுண்ட் ஒட்டி நிறுத்தி ஸ்டான்ட் போட்ட போது மணி இரவு 10.30 இருக்கும். சில்வண்டுகள் சப்தமிட ஆரம்பித்து இருந்த நேரம்.

இன்ஸ்பெக்டர் கருப்பு பார்க்க ஆணழகன் போட்டிக்கு போகும் வழியில் யூனிபாரம் மாட்டி வந்தவர் போல இருந்தார்.
நெஞ்சில் புட்பால் மேட்ச் நடத்தலாம் போல ஏக அகலம் . அதில் "கருப்பசாமி " என்ற பேட்ச் . உடல் கட்டில் சல்மான் கான்க்கு டஃப்  கொடுப்பவர் போல இருந்தார். அடர்த்தியான மீசை கையில் காப்பு.  கத்தி போன்ற கண்கள் . பார்வையில் வசீகரம் கம்பீரம்.. என பார்க்க முறுக்கு கம்பியை நினைவு படுத்துபவர். கண்ணில் மட்டும் கூர்மை தாண்டி ஒரு சிநேகம் தெரியும்.
அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் உள்ளே ஒரு குழந்தை இருப்பது தெரியும். ஆனால் லோக்கல் ரவுடிகளுக்கு தான்.. கருப்புகுள் இருக்கும் அந்த கருணை அற்ற கொடிய அரக்கனை பற்றி தெரியும்.

உளூர் ரவுடிகள் நடந்து போகும் போது நீங்கள் கருப்பு என்று சத்தமாக கூறினால் அவர்கள் இதய துடிப்பு ஒரு வினாடி நின்று துடிப்பதை காணலாம்.
ரவுடிகள் இடையே மட்டும் இன்றி டிபார்மென்டிலும் 'டெரர் 'பெயர் கருப்பு.
கருப்புவின் அனுபவ கதைகளில்.. ஆக்ஷன் அடிதடி..கதைகள் மற்றும்.. துப்பறியும் கதைகள் இரண்டும் உண்டு என்றாலும் இந்த கதை ஆக்ஷன் கதை அல்ல துப்பறியும் கதை.

காம்பவுண்ட் ஒட்டி இருந்த பழைய பில்டிங் சுற்றி அவசரமாக ஒரு சொற்ப மக்கள் கூட்டம் சூழந்து இருந்தது பார்க்க முடிந்தது. அதில் பெரும்பாலும் மாணவர்கள் என்று பார்த்தாலே புரிந்தது.
அவர்களிடம் ஏதோ பேசி கொண்டு இருந்த சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் இவரை பார்த்ததும் அருகே ஓடி வந்து..
"சார் " என்று வணக்கம் வைத்தார்.

"இப்ப காலேஜ் லீவு போயிட்டு இருக்கு இல்ல..யார் போன் பன்னது கண்ணன் "

"ஆமாம் சார்.. அந்த பில்டிங் ல தான் சார் சம்பவம்...இதோ இந்த ஸ்டூடன்ட்ங்க தான் போன் பண்ணி இருக்காங்க. அப்புறம் அந்த பில்டிங் இவங்க நிர்வாகம் கைவிட்ட முன்னால் லைப்ரரியாம். உள்ள மராமத்து வேலை போயிட்டு இருக்கிறதால மூடி இருக்காம் ரொம்ப நாளா..." கண்ணன் சொல்லி கொண்டே இருக்கும் போது அந்த மாணவர்கள் கும்பல் நெருங்கி இருந்தார்கள். அனைவரும் முகத்தில் பதட்டம் பூசி இருந்தார்கள்.

"சார் இன்னும் அவன்...அவன்... விக்னேஷ்....கொலைகாரன்...அவன் உள்ள தான் இருக்கான் "
என்றார்கள் கோரசாக ...

"அய்யோ ஆதியை...அவன் அவன்..கொன்னுட்டான். சார்..ஏன் இப்படி பண்ணான் புரிலை.. ரொம்ப அமைதியானவன் சார் விக்னேஷ்...அவன் ஏன் இப்படி...."

கருப்பு இடை மறித்து கையமர்த்தினார்.

"ஒரு நிமிடம் எல்லோரும் ஒரே நேரத்துல பேசாம ஒருத்தன் யாராவது தெளிவா என்ன நடந்தது னு சொல்லுங்க ப்ளீஸ்.." என்றார்.

ஒருவன் கூட்டத்தில் கையை தூக்கினான்

'ஸ்டூடன்ட் புத்தி போகுதா பாரு ' என்று நினைத்து கொண்டு "சொல்லுப்பா" என்றார்.

"சார் என் பெயர் விக்னேஷ் சார் "

"வாட் ..கொலைகாரன் பெயர் விக்னேஷ் னு சொன்ன..."

"சார் அவன் S. விக்னேஷ் சார்..என் பெயரும் விக்னேஷ் தான் ..M. விக்னேஷ் "

"சரி சொல்லு M. விக்னேஷ் ! என்ன நடந்தது. "

"சார் மணி ஒரு...10 இருக்கும் னு நினைக்கிறேன்..நான் வீட்ல கிரிக்கெட் பார்த்துட்டு இருந்தேன்...அப்போ......."

அவன் சொல்ல தொடங்க காட்சி விரிந்தது.

 ☸ M. விக்னேஷ்.. தனது வீட்டில் தனி அறையில் கிரிக்கெட் பார்த்து கொண்டு மொபைல் நோண்டி கொண்டு இருக்கும் போது அந்த fb லைவ்கான notification காட்டியது..
"Vicky Vicky "எனும் id 'அட இது நம்ம S. விக்னேஷ் id ஆச்சே நார்மலா fb யே வரமாட்டான் இன்னைக்கு என்ன லைவ் போட்டுட்டு இருக்கான்.'

M. விக்னேஷ் மெலிதாய் ஆச்சரியப்பட்டுக் கொண்டே நோட்டிபிகேஷன் ஐ தொட்டு டிஸ்ப்ளேவை பெரிதாக்கினான்.
'என்ன இடம் இது  ஏதோ பாழடைந்த பழைய பில்டிங் போல் இருக்கிறது அரைகுறை வெளிச்சமாக லைட் எரிந்துகொண்டு அட இதை எங்கேயோ பார்த்தது போல் இருக்கே இது இது நமது பழைய library கட்டிடம் ஆச்சே.. அங்க இந்த பையன் என்ன பண்றான் ? '

திரையில் விக்னேஷ் முகம் வியர்த்து போய் இருந்தது பதட்டமாக பேசி கொண்டு இருந்தான்.

"ஹெலோ friends.. ஓரளவு எல்லோரும் வந்துடீங்க இல்ல...ஹ்ம்ம்.. என்னடா லைவ் போட்டு இருக்கேன்..னு.. ஆச்சர்யப்படறீங்களா... இப்ப நான் சொல்ல போறது இன்னும் ஆச்சர்யமா இருக்கும். நான் வந்து ஒரு கொலை பண்ண போறேன். எஸ் மர்டர்.. குத்தி கொல்ல போறேன். " அவன் கையில் அந்த கத்தி மின்னியது..கொஞ்சம் துரு பிடித்தார் போல மங்கிய கத்தி..

"என்னடா விளையாட்டு 'மயி.....' இது " என்று cmnt போட்டான் M. விக்னேஷ்..

திரையில் வரிசையாக...

"Is this a jock"
"R u crazy..."
" De lusu... Moodina library la yenna daa pandra.."
" Machaan mardaraa naan company ku varatta "
"Yenadaa. Full mattayaa.."
"Malaiki  kooda naan library othunga maaten..nee marder ku odhungi irukka vaalthukal..."

போன்ற cmnt களை வெவேறு நண்பர்கள் தட்டி கொண்டு இருந்தார்கள்.

திரையில் விக்னேஷ் தொடர்ந்தான்...

"நான் சொல்றது ஜோக் இல்ல friends... இப்போ இந்த வினாடி கொலை பண்ண போறேன்... ஸ்வேதா மேல சத்தியமா கொலை பண்ண போறேன். யாரைன்னு கேட்கறீங்களா இதோ இவனை..".

அவன் கேமரா ஆங்கிளை திருப்ப கீழே ஒருவன் கவிழ்ந்த படி படுத்து இருந்தான். விக்னேஷ் ஒரு கையில் கேமரா அடஜஸ்ட் பண்ணி பிடித்து கொண்டு இன்னோரு கையால் அவன் தலை முடியை பிடித்து நிமிர்த்தினான்.

"நாய் மயக்கத்தில் இருக்கான் இப்ப தான் தலைல அடிச்சு போட்டேன்.."

M.விக்னேஷ் அதிர்ந்தான்.
எண்ணனடா நடக்குது இங்க...இவன் ஆதி இல்ல..

"நாய்க்கு என் ஆளு தான் வேணுமாம் ஸ்வேதா வேணுமாம்.. நாங்க 2 பேரும் லவ் பன்றோம் னு சொல்லியும் கேட்கல.. நீ பேசி கரெக்ட் பண்ண மாதிரி உன் லவ்வரை பேசி கரெக்ட் பண்றேன் பாக்கரியா .என் பைக்கை பாத்தே உன்னை விட்டு என் கிட்ட ஓடி வற போரா பாரு 'னு அசிங்கமா பேசறான். டெயிலி ஸ்வேதாக்கு லவ் டார்ச்சர் கொடுத்து அழ வச்சிட்டு இருக்கிறவனை எப்படி நான் சும்மா விட முடியும்..?? அரசியல் செல்வாக்கு இருக்காம்.. எங்களை ஒன்னு சேர விட மாட்டானாம்.
அதான்..... இவனை போட்டு தள்ளிட முடிவு பண்ணிட்டேன்."

சொல்லி விட்டு வேகமாக செயல்பட்டான். படுத்து இருந்த ஆதி வயிற்றில் சதக்கென்று ஓங்கி குத்தினான். ஆதி எந்த ரியாக்சனும் இல்லாமல் வெட்ட பட்ட மரம் போல சாய்ந்தான்.

"அவ்ளோ தான்...ஹா ஹா.. நீங்க எல்லாம் உங்க வேலையை பாக்க போலாம்... அதற்கு முன் யாராவது போலீஸ் க்கு போன் பண்ணிடுங்க மறக்காம.. நான் இங்கேயே வெயிட் பண்றேன். ... சார்...போலீஸ் சார்... வாங்க சீக்கிரம் வாங்க... இங்க ஓல்ட்  லைப்ரரி ல தான் இருக்கேன். கமான் சீக்கிரம் வந்து கைது பண்ணுங்க... ஐ ஆம் வெய்ட்டிங்....ஸ்வேதா சாரி ஸ்வேதா என்னை மனிச்சிடு.. அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் உனக்கு நான் தான் புருஷன்.. என் கடைசி ஆசை நீ வேர நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும்.. வாங்க ...போலீஸ்...சீக்கிரம் வாங்க..."

M.விக்னேஷ் தீ பிடித்தவன் போல எழுந்தான்..என்னடா கொடுமை இது.. அதிர்ந்து கூட பேசாத விக்னேசா இது...? நிஜமா கொன்னுட்டானா..  ஆதியை...
விக்னேஷ் ஸ்வேதா லவ் மேட்டர் காலேஜ் பூரா தெரிந்த கதை தான்..ஆனா ஆதிக்கு என்ன சம்பந்தம்.. ஆதி ஸ்வேதாவை லவ் பண்ணினானா.. அப்படி ஏதும் பன்னதா தெரிலையே..அதும் இப்படி மிரட்டும் அளவு.. நிஜமா இப்ப ஆதி செத்துடானா....'?

அவசரமாக போன் எடுக்க பார்க்க அது தானாக ஒலித்தது...
எடுத்த போது எதிர்முனையில் வேறு நண்பன்
"டே மச்சான் fb லைவ் பாத்தியாடா " என்று இங்கே கேட்கும் அளவு சப்தமாக கத்தினான்.

அடுத்த சில வினாடிகளில்...விக்னேஷ்.. வீட்டை விட்டு பறந்தான்...

 ☸ 'இதான் சார் நடந்தது.. 'சொல்லி விட்டு  m. விக்னேஷ்  கருப்பை பார்த்தான்.

சார் அப்புறம் நண்பர்கள் எல்லோரும் ஆளாளுக்கு போன் பண்ணி இங்க வந்து சேர்ந்தோம் நான் தான் போலீஸ் க்கு போன் பண்ணது..விக்னேஷ் கொலைகாரன் இன்னும் உள்ள தான் இருக்கான்..உள்ளார பூட்டி வச்சி உட்கார்ந்து இருக்கான்.

"உங்கள்ல ஸ்வேதா யாரு " என்றார் கருப்பு கூட்டத்தில் பெண்கள் பக்கம் திரும்பி.

"சார் அவ போன் கொஞ்ச நாளா ரிப்பேர் சார்..சர்விஸ் க்கு கொடுத்து இருக்கிறதா சொன்னா...அவளுக்கு இன்னும் தகவல் சொல்ல முடில... வொர்க்கிங் வுமன் ஹாஸ்டல்ல தங்கி இருக்கா.. காலேஜ் ஹாஸ்டல் வசதியா இல்லைனு.."

அதற்குள் ஒருவன் நெருங்கி..கையில் போனை காட்டினான்..

"சார் அந்த வீடியோ..."

கருப்பு அந்த வீடியோவை முழுதாக பார்த்தார்... பின்

"தெளிவா லைவ் ல கொலை பண்ணி இருக்கான்..போலீஸ் க்கு வெயிட்டிங் னு சொல்றான்.. அப்புறம் ஏன் கதவை சாத்தி வச்சி இருக்கான்.." கருப்பு கொஞ்சம் யோசித்தவராய்..பின்னால் சப் இன்ஸ்பெக்டர் இடம் திரும்பி....

"கண்ணன்  உடனடியா அந்த கதவை பிரேக் பண்ணுங்க...ஏதோ ஒன்னு சரி இல்லை..ஹெல்ப் க்கு பசங்களை கூப்பிட்டுக்கோங்க...ஜாக்கிரதை பின்னாடி ஒரு கொலை காரன் கத்தி வச்சிட்டு இருக்கான்னு நியாபகம் வச்சி பண்ணுங்க..." என்றார்..

உடனடியாக அந்த கும்பல் பரபரப்பாக செயலில் இறங்கியது. வெளியே இருந்த ஒரு பென்சை காட்டி

"இதை யூஸ் பண்ணுங்க... " என்றார் கருப்பு..

கும்பல் அந்த பெஞ்சை ஒன்றாக சேர்த்து பிடித்து தூக்கி வேகமாக கதவை மோதினார்கள். தொடர்ந்து 5 நிமிடம் அடி வாங்கிய பின் கதவு கொஞ்சம் பலகீனம் காட்டியது..
"கொஞ்சம் நகருங்க " என்று சொன்ன கருப்பு கதவை தனது தூண் போன்ற காலால் ஓங்கி உதைத்தார்... சரியான பவர் கிக் அது.. கதவு பறந்து போய் விழ... எச்சரிக்கையாக கருப்பு முதல் ஆளாக உள்ளே நுழைந்தார்.

முதலில் அவருக்கு தெரிந்த காட்சி ரத்த வெள்ளத்தில் ஆதி விழுந்து கிடந்தது தான். அப்புறம் தான் அதை கவனித்தார். கொஞ்சம் தூரத்தில் ஆதியை தாண்டி...

கத்தியோடு..விக்னேஷை அங்கே இருப்பான் என்று.. எதிர் பார்த்த கருப்புக்கு... அங்கே அவர்கண்ட அந்த காட்சி திடுகிடலை கொடுத்தது..

"என்னயா இது..."


குழப்பம் தொடரும்.........🗡


    🗡        🗡        🗡        🗡     🗡

அத்தியாயம் 2

கத்தியோடு..விக்னேஷை அங்கே இருப்பான் என்று எதிர் பார்த்த கருப்புக்கு... அங்கே அவர்கண்ட அந்த காட்சி சின்ன திடுகிடலை கொடுத்தது.

"என்னயா இது..." என்றார் கருப்பு..

அங்கே அவர் கண்ட காட்சி...

கீழே ரத்த வெள்ளத்தில் ஆதி விழுந்து கிடக்க அவனை தாண்டி கொஞ்ச தூரத்தில் அந்த chair உருண்டு கிடக்க அதற்கு நேர் மேலே...விக்னேஷ்..தூக்கில் தொங்கி கொண்டு இருந்தான்..நாக்கு தொங்கி..கண் வெளியே வந்து..கோரமாக இருந்தான்.

       ✳         ✳          ✳          ✳        ✳

அந்த வளாகத்தில் டெம்பர்வரியாக வெளிச்ச வசதி செய்ய பட்டு இருக்க .அங்கே போட பட்ட இருக்கையில் உட்கார்ந்து இருந்த கருப்பு தள்ளு வண்டி இடம் வாங்கிய டீயை உறிஞ்சி கொண்டு இருந்தார். விக்னேஷின் பிணம் இறக்க பட்டு ஸ்ட்ரச்சரில் ஏற்ற பட்டு கொண்டு இருந்தது. மாணவர்கள் கிலி பிடித்தார் போல இருந்தார்கள். ஆங்காங்கே கும்பல் கும்பலாக சேர்ந்து பேசி கொண்டார்கள்.

"உன்னை விட்டா யாரும் எனக்கில்லை" டோன் அடிக்க அவசரமாக போன் எடுத்து "சொல்லு நிலா "என்றார்..
லைனில் மனைவி வெண்ணிலா.

(இந்த டோன் ஒரு முரட்டு ஆபிசருக்கு பொருந்தாமல் இருந்து அவ்வபோது..கொஞ்சம் சங்கடம் கொடுக்கும் ஒன்று என்றாலும் மனைவி ஆசை பட்டு வைத்து கொடுத்தது என்பதால் அதை மாற்ற மனமில்லாமல் விட்டு இருந்தார். மனைவி அழைத்தால் மட்டுமே இந்த டோன் வரும் படி செலக்டிவ் ரிங் செட்டிங் அது..)

"ஹெலோ மிஸ்டர் 'பிளாக் 'சார்.. என்ன வீட்டுக்கு வராப்ள இல்லையா இன்னைக்கு.... ?? "

"இல்லைமா.. ஒரு கேஸ் ஒன்னு.. ஒரு கொலை ஒரு தற்கொலை...."

"சுத்தம் டபுள் போனசா... சரியா போச்சு போங்க.. இன்னைக்கு வந்த மாதிரி தான்.. நான் தூங்க போறேன்..நீங்க மிஸ்டர் கண்ணனை கட்டி பிடிச்சுக்கிட்டு ஸ்டேஷன் ல தூங்குங்க... "

அந்த இருட்டு நேரத்தில் பேசுவது கொஞ்ச வெளியே கேட்கும் அபாயம் இருபதை கருப்பு உணர்ந்தார். பக்கத்தில் கண்ணன் வேறு தன்னை உற்று பார்த்து கொண்டு இருந்ததை பார்த்ததும்.

"சரி சரி.. நான் கூப்பிடறேன் டி.. வை .."என்றார்.

"ஹும்..எப்படி கூப்பிடுவீங்க பாருங்க..."
என்று விட்டு சடாரென கட் செய்தாள் வெண்ணிலா.

கருப்பு அந்த fb வீடியோவை.. 8 ஆவது தடவை ஓட்டினார்

கண்ணன் மெல்ல நெருங்கி... "சார்..வெரி ஓபன் அண்ட் க்ளோஸ்..கேஸ் சார்...லவ் மேட்டர் பகை.. ஒருத்தனை கொன்னுட்டு ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கிட்டான்.... சீக்கிறம் பார்மாலிட்டி முடிச்சிடலாம்.." என்றார்.

கருப்பு மெல்ல ஒரு புன்னகை செய்து விட்டு.".ஒரு நிமிஷம் கிட்ட வாங்க கண்ணன் இந்த வீடியோ பாருங்க " என்றார்.

"மயங்கி இருக்கும் ஆதி கத்தியால் குத்தபட்ட போது கொடுக்கும் ரியாக்சனை கவனித்தீர்களா.... "

"இ..இல்லையே சார்.. என்ன ஆச்சு..சார்.."

"யாராவது கொலையை இப்படி லைவ் பண்ணுவங்களா கண்ணன் ?"

"இல்ல சார் நார்மலா இப்படி யாரும் பண்ண மாட்டார்கள் "

"ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் உள்ள இருந்து சாத்த பட்ட இந்த லைப்ரரி ல இருந்து 3 ஆவது நபர் யாராவது வெளியேற சான்ஸ் இருக்கா "

"அதெப்படி சார் முடியும் நாம தானே கதவை உடைத்து ஓபன் பண்ணோம்.."

"வாங்க போலீஸ் வந்து கைது பண்ணுங்க னு சொன்ன விக்னேஷ்..அங்க மராமத்துக்கு பயன்படுத்த பட்டு போட பட்ட கயிறை வைத்து தூக்கில் தொங்கிட்டானே...ஏன் னு ஏதும் ஐடியா இருக்கா கண்ணன்.." ??

"அதான் தெரில சார்.. ஏன் சார்...??
சார்.. இந்த கேஸ் ல ஏதும் வில்லங்கம் இருக்கா சார்..." ?

"கண்ணன் இந்த கேஸ் ல சின்ன உறுத்தல் இருக்கு எனக்கு....
என்றார். "கருப்பு .

       ✳         ✳          ✳          ✳        ✳

வாக்கி டாக்கி கரகரப்புக்கு இடையே..
பிஸியான போலீஸ் ஸ்டேஷன்.
கருப்பு தனது இருக்கையில் உட்கார்ந்து இருக்க அவருக்கு எதிரே அந்த வயதானவர்கள் இருந்தார்கள். மிகவும் சோர்ந்து போய் இருந்தார்கள் அழுதழுது களைத்துப் போய் இருந்தார்கள்.

" தைரியமா இருங்க... இங்க உட்காருங்க மொதல்ல.." என்றார்.. அவர் இதோடு 5 ஆவது முறையாக உட்கார சொல்லி இருந்தார் அவர்கள் உட்கார வில்லை.

" படித்த பெரிய ஆளா வரணும்னு தான் சார் கஷ்டப்பட்டு காலேஜ் அனுப்புறோம் இப்படி காதல் கண்றாவி னு என் பையன் ஒரு கொலை பண்ணுவான்னு.. பண்ணிட்டு தற்கொலை பண்ணிக்குவான்னு நினைத்து கூட பார்க்கல சார்... யார் கிட்டயும் அதிர்ந்தே பேசாத ஆள் சார் விக்னேஷ்..அவன் இப்படி பண்ணுவான்னு இப்ப கூட நம்ப முடில சார்...." என்றார் அந்த தந்தை

" காலையிலிருந்து ஏதாவது சாப்பிட்டீங்களா ?முதல்ல சாப்பிடுங்க கான்ஸ்டிபில்... இங்க வா..இவங்களை கூட்டி  போய் சாப்பாடு வாங்கி கொடு.."

"வேணாங்கய்யா... " என்று அவர்கள் பலவீனமாக மறுக்க கான்ஸ்டபிள் ''வாங்க '' என்று அழைத்து சென்றனர்.

அவர்கள் சென்ற பின் கருப்பு,

" கண்ணன் ஒரு  நிமிஷம் இங்க வாங்க " என்றார்...
கண்ணன் "சார் " என்று வந்து நிற்க..

ட்ராயரில் உள்ளே ஒரு பிளாஸ்டிக் கவர் இல்  வைக்க பட்ட  கத்தியை காட்டினார்.

"மர்டர் க்கு யூஸ் பண்ண கத்தி....பார்க்க எப்படி இருக்கு..."? என்றார்..

"எப்படினா.... என்ன சொல்ல சார்.. ரத்த கரையா இருக்கு..."

"கத்தி புதுசா பழசா கண்ணன் "

கண்ணன் ஒரு முறை மீண்டும் கத்தியைப் பார்த்து விட்டு "புதுசு தான் சார்" என்றார்.

கருப்பு தனது மொபைலில் அந்த வீடியோவை ஓட விட்டார்.

"இங்க பாருங்க...இங்க இந்த இடம்.. ஆதியை குத்த போகும் முன் விக்னேஷ் கையில் வைத்திருக்கும் இந்தக் கத்தியை பாருங்கள் கொஞ்சம் பழசான மாதிரி இல்ல ?

"அட ஆமாம் சார்.. எப்படி சார் இது கத்தி மாறிடிச்சின்னு சொல்றிங்களா....? "

"இல்ல அப்படி இல்லை... சரி அந்த students களை வர சொல்லியிருந்தேனே எங்கே ? "

" இதோ வெளியே தான் சார் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க வர சொல்லட்டுமா சார் " கண்ணன் கேட்க..

"வர சொல்லுங்க ப்ளீஸ் "என்றார் கருப்பு.

அவர்கள் உள்ளே நுழைந்து கருப்பை சூழ்ந்து கொள்ள...

"ஸ்வேதாவுக்கு தகவல் சொல்லியாச்சா... "

"அவ போன் கொஞ்ச நாளா பிராப்ளம்...என்பதால்..அவ தங்கி இருகிற. பார்த்த சாரதி தெரு.. '.தெரசா வோர்க்கிங் விமன் ஹாஸ்டல்' க்கு  நேரா போய் சொல்ல ஆள் போயிருக்கு சார் " என்றார்கள்

"கண்ணன்.. அந்த தெரசா வோர்க்கிங் விமன் ஹாஸ்டல் எங்க இருக்கு னு கேட்டு அட்ரஸ் நோட் பண்ணிகொங்க."

"அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றது உங்களுக்கு எவ்வளவு நாளா தெரியும்.."
என்று ஆரம்பித்து அடுத்த 20 நிமிடம் விசாரணை நடத்தி..அவர்களை அனுப்பி வைத்தார்..

பிறகு ,

"கண்ணன்.. இந்த நம்பரை பாருங்க " என்றார்.

"இது என்ன நம்பர் சார் ?" அவர் காட்டிய காகிதத்தில் ஒரு போன் நம்பர் எழுத பட்டு இருந்தது.

"விக்னேஷ்.. நாம் பார்த்தது போல கொலை தற்கொலை பண்ணவன் என்பதை தாண்டி நம்மிடம் எதையோ மறைக்கிறவன் என்பதை உறுதி படுத்தும் ஆதாரம். இது விக்னேஷ் கிட்ட இருந்து கைப்பற்ற பட்ட போன்.. இதுல லாஸ்ட்டா கால் பண்ண பட்ட நம்பர் இது.  ஆனால் அவன் போனில் டயல் லிஸ்ட் இல் இந்த நம்பர் இல்லை. டெலிட் பண்ணி இருக்கான். நான் சைபர் க்ரைம் ல கேட்டு இவன் தொடர்பு கொண்ட நம்பர் வாங்கி இருக்கேன்."

என்று சொன்னவர்..

"இந்த நம்பருக்கு ஒரு கால் பண்ணுங்க " என்றார்.

கண்ணன் போன் எடுத்து நம்பரை தட்டி லவுட் ஸ்பீக்கரில் போட..ரிங் போய் ஒரு பெண் குரல் "ஹலோ "என்றது.

"நாங்க போலீஸ் ல இருந்து பேசறோம் நீங்க எந்த ஏரியா உங்க பெயர் என்னனு  தெரிஞ்சிக்கலாமா.."

"என்னது போ...போலீஸா....போலீஸ் எதுக்கு எனக்கு போன் பண்னுது ... எனக்கு ஊர் திருச்சி..இப்ப இங்க 'தெரசா வுமன் ஹாஸ்டல் 'ல தங்கி இருக்கேன்..." என்றாள்.

கருப்பும் கண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.

"உங்க பெயர் ஸ்வேதாவா " கேட்டார் கண்ணன்

"ஸ்வேதா வா.. இல்லையே என் பெயர் மீனாட்சி... "என்றவள் கொஞ்சம் இடைவெளி விட்டு
"என் ரூம் மெட் பெயர் தான் ஸ்வேதா " என்றாள்.

"சரிங்க.. தகவலுக்கு நன்றி." என்று கட்செய்தார்.

"சார் ஸ்வேதா போன் பிராப்ளம் னு அவங்க ரூம் மெட் க்கு கால் பண்ணி  ஸ்வேதா கிட்ட பேச முயற்சி பண்ணி இருகாணா சார் விக்னேஷ் ? " என்று கேட்க.

" ஸ்வேதா ரூம் மேட் நம்பர் எல்லாம் விக்னேஷ் கிட்ட இருக்குமா கண்ணன் ? சரி ஏன் கால் ஹிஸ்டரி டெலிட் பண்ணனும் கண்ணன் ?" என்று பதிலுக்கு கேட்டார் கருப்பு.

"கண்ணன் ...தெரசா ஹாஸ்டல் அட்ரஸ் வாங்கிடீங்க இல்ல..ஒரு எட்டு அங்க வரை போயிட்டு வந்துடலாம்." என்றார்.

அப்போது போன் அடிக்க எடுத்து

''வணக்கம் நான் கருப்பு " என்றார்.

பேசிவிட்டு வைத்து விட்டு..

"ஹாஸ்டல் போறதுக்கு முன்னாடி வேற இடம் போக வேண்டி இருக்கு வாங்க கண்ணன் "  என்றார்.

        ✳       ✳        ✳        ✳        ✳

"வணக்கம் நான் டாக்டர் கருணா "
என்று சொன்னனவர்.. தலையில் கிரவுண்ட் விழ தொடங்கியவராய்.. பாதி கழன்ட கண்ணாடி அணிந்தவராய்....ஒரு தொள தொளா கோட் அணிந்தவராய்... இருந்தார்.

"வணக்கம் டாக்டர் ..சொல்லுங்க என்ன தகவல் ? போஸ்ட் மாடர்ம் ரிப்போர்ட் பற்றி ஏதோ நேர்ல சொல்லணும் னு சொன்னிங்களே என்ன அது ??"

"எஸ் ஹியர் இட் ஈஸ்.... என்ன தகவல் னா...மிஸ்டர் கருப்பு...நீங்க சொன்ன போலீஸ் தியரிக்கும்..போஸ்ட் மாடர்ம் ரிபோர்டுக்கும் மேட்ச் ஆகலை..மிஸ்டர் கருப்பு தியரி இடிக்குது..."

"கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுங்க டாக்டர்..."

அந்த டாக்டர் ஏதோ மாணவர்களுக்கு பாடம் எடுக்க போகும் ஒரு புரபசரின் தோரனையோடு சொல்ல தொடங்கினார்.

"2 தகவல் சொல்லணும் மிஸ்டர் கருப்பு....
ஒன்று..உங்க ரிப்போர்ட் படி..இரவு 10 மணிக்கு ஆதியை லைவில் கொலை செய்து விட்டு விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டான். ரைட் ? அதாவது இரண்டு சம்பமும் ஒரே நேரத்தில் அதாவது அதிகபட்சம் அரைமணி நேரம் இடைவெளியில் நடந்தது..ரைட் ?? ஆனா எங்க ரிப்போர்ட் படி... ஆதியை அவன் 10 மணிக்கு கொல்லல... கிட்ட தட்ட மாலை 7 மணிக்கே கொன்னு இருக்கான்...எஸ்...ஆதி உயிர் பிரிந்த நேரம்..குறைந்தது... தற்கொலை நடந்த நேரத்துக்கு கிட்ட தட்ட 3 மனி நேரம் முன்பு. அவன் லைவில் கொலை செய்ததாய் சொன்னது பொய். இது முதல் தகவல்.
அப்புறம் தகவல் இரண்டு.. ஆதி தலையில் அடித்து மயக்கம் ஆக்கி இருப்பதாய் சொல்லி இருக்கிங்க..அதுவும் பொய்..ஆதி தலையில் எந்த அடி பட்ட தடையமும் இல்லை. " என்றார் தீர்க்கமாய் டாக்டர்.

கருப்பை குழப்ப மேகம் சூழ்ந்தது ..

"என்னது 7 மணிக்கே கொன்னுட்டானா....அப்படினா...3 மணி நேரம் அந்த டெட் பாடியை வைத்து அந்த பழைய பில்டிங் இல் என்ன பண்ணிட்டு இருந்தான் விக்னேஷ்..?? ஏன் இந்த லைவ் நாடகம்...?? "

குழப்பம் தொடரும்...... 🗡



          🗡        🗡        🗡        🗡     🗡

அத்தியாயம் 3

இன்ஸ்பெக்டர் கருப்பும் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணனும் அந்த பார்த்தசாரதி தெருவுக்குள் புல்லட்டில் நுழைந்து குறிப்பிட்ட இடத்தில் ஓரமாக நிறுத்தினார்கள். இருவரும் போலிஸ் உடை துறந்து சாமான்ய உடையில் இருந்தார்கள்.

"யார் கிட்டனா அட்ரஸ் கேளுங்க கண்ணன்."

கண்ணன் புல்லட் விட்டு இறங்கினார்.
பக்கத்தில் அண்ணாந்து பார்த்தபோது "ரவி மொபைல் சேல்ஸ் சர்வீஸ் " என்று போர்டு வைக்கப்பட்ட கடையில் ஒல்லியான தேகத்தோடும் கலைந்த தலையோடு அழுக்காய் ஒருவன் உட்கார்ந்துகொண்டு மொபைலை கழட்டி நோண்டி கொண்டிருந்தான்.

கண்ணன் அவனை நெருங்கி...

தம்பி இங்க தெரசா ஹாஸ்டல் எங்கப்பா இருக்கு என கேட்க...அவன் தூரத்தில் கைகாட்டி இடத்தை சொன்னான்.

அவன் கை காட்டிய இடத்தில் சென்று புல்லட்டை நிறுத்தியவர்கள்'' தெரசா வொர்க்கிங் வுமன் ஹாஸ்டல் " என்ற போர்டை பார்த்தார்கள்.. அங்கே ரிசப்ஷனில் உட்கார்ந்து இருந்தவரிடம் தன்னை அறிமுக படுத்தி கொண்டு ..விஷயத்தை சொல்ல..
சார் ரூம் நம்பர் 18 சார்..first floor என்றார் ரிசப்ஷன்.

முதல் மாடியில் அந்த ரூமை நெருங்கி கதவை தட்ட நீண்ட நேரம் கழித்து கதவைத் திறந்த பெண் அழுது கன்னம் வீங்கி காணப்பட்டாள். உடையில் சிரத்தை இல்லாமல் சோர்வாய் காண பட்டாள்.

இருவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது் மேலும் அழுதாள்.
அவர்கள் பொறுமையாக காத்திருந்து.. விசாரித்த போது...அவள் கொஞ்சம் அழுது அடங்கி முடித்த பின்..

"If u dont mind ஒரு பேப்பரும் பேனாவும் கிடைக்குமா...வழக்கமா குறிப்பு நோட்டு வச்சி இருப்பேன்..இன்னைக்கு அன் யூனிஃபார்மில் வந்ததால் எடுத்து வரல.." என்று கேட்க.. ஸ்வேதா ஒரு பேப்பர் பேனா கொண்டு வந்து கொடுத்தாள்.
சிறிது நேர விசாரனை க்கு பின் அவள் சொன்ன விஷயம்.. ஆச்சரியமாக இருந்தது.

"சார்...உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்... எனக்கு இந்த நியூஸ் கேள்வி பட்டு அப்படியே இடிஞ்சி போய் உட்கார்ந்துட்டேன்..என்ன பண்றதுனே புரில... ஆனா..இதுக்கு இடையில..அந்த குழப்பம் ஒன்னு தான்..என்னனு எனக்கு புரில....ஆச்சர்யமா இருக்கு சார்.."

"என்ன சொல்றிங்க ..என்ன குழப்பம்.."

"நானும் விக்னேசும் லவ் பண்ணது..உண்மை தான் சார்.. ஆனா.. ஆதி என்னை லவ் பண்ணதாவும் லவ் டார்ச்சர் கொடுத்ததாகவும் விக்னேஷ் சொன்னது சுத்த பொய்... ஆதி என் கிட்ட டீசன்னடா தான் பேசி இருக்கான்..தப்பா ஒரு போதும் பேசினது இல்லை.."

"வாட்.. என்னம்மா சொல்ற விக்னேஷ் லைவில்  ஆதாரப்பூர்வமாக தானே..சொன்ன விஷயம் ஆச்சே இது "

" அதான் சார் எனக்கு மிகப் பெரிய குழப்பமாக இருக்கிறது. எதுக்கு அப்படி சொன்னான்னு புரியல...ரொம்ப சாப்ட் டைப் சார்..விக்னேஷ்.. யார் கிட்டயும் கோபமா கூட பேச மாட்டான். ஏன் இப்படி ஒரு பொய் .. ஏன் இந்த கொலை புரிலை சார்.."

"மிஸ் ஸ்வேதா அந்த கொலையிலும் சரி..தற்கொலையிலும் சரி வேற ஏதோ..காரணம் இருக்கு...சரி அப்போ நிஜமா ஆதி உங்களை லவ் பண்ணவே இல்லையா...??

"சத்தியமா இல்லை சார்.. என்னை லவ் பண்ண இரண்டே பேர் விக்னேஷ் தான் "
கருப்பு குழப்பமாய் "என்னது இரண்டு பெயரா..?" என்று கேட்க..

"ஆமாம் சார்..எங்க கிளாஸ் ல 2 விக்னேஷ் இருக்காங்க.. M.விக்னேஷ், S.விக்னேஷ்.. இரண்டு பேருமே என்னை காதலித்தார்கள். ஆனால் எனக்கு S.விக்னேஷின்..அமைதி சுபாவம் ரொம்ப பிடிச்சி இருந்தது..அவனுக்கு ok சொன்னேன்."

"மிஸ் ஸ்வேதா உங்க கிட்ட இன்னோரு உண்மை சொல்லணும்.. விக்னேஷ் லைவில் கொலை பண்ணதாய் நமக்கு காட்டி இருப்பது..வெறும் நாடகம்..அவன் அவனை கிட்ட தட்ட 7 மணிக்கே கொலை பண்ணிட்டு இருக்கான்..3 மணி நேரம் பாடியை வைத்து என்ன பண்ணான் தெரில...10 மணிக்கு இந்த லைவ் நாடகம் போட்டு இருக்கான்.."

ஸ்வேதா திடுக்கிட்டு...
"என்ன சார் சொல்றிங்க... எதுக்கு சார் இப்படி ஒரு நாடகம்..." என்றாள்.

"அதை தான் நாங்க கண்டு பிடிக்கனும்..
சரி நாங்க வறோம்.." என்று கிளம்பினார்கள்.

கிளம்பும் முன்
"உங்க ரூம் மேட் மீனாட்சி எங்கே " என்றார் கருப்பு "

"மீனாட்சி அவங்க ஊருக்கு போய் இருக்கா...ஆமாம் மீனாட்சி எப்படி சார் தெரியும் அவளுக்கும் இந்த கேசுக்கும் என்ன சார் சம்பந்தம்...?"

"கூடிய சீக்கிரத்தில் தெரிந்து விடும்." என்று சொல்லி விட்டு இருவரும் புறப்பட்டார்கள்.

         ✳       ✳        ✳        ✳        ✳

இன்ஸ்பெக்டர் கருப்பு தனது இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தார்.
போனை எடுத்து குறிப்பிட்ட நம்பருக்கு கால் செய்து விட்டு காத்து இருந்தார்

"எஸ் திஸ் இஸ் டாக்டர்  கருணா " என்றது எதிர் முனை.

" டாக்டர் நான் கருப்பு பேசுறேன் இன்ஸ்பெக்டர் கருப்பு . அந்த கொலை தற்கொலை கேசில் ஒரு சின்ன clarification தேவை விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதில் சந்தேகம் ஏதும் இல்லை தானே ? என்ன கேட்கிறேன் என்றால் அது நிச்சயம் தற்கொலை தானே..? "

"எஸ் மிஸ்டர் கருப்பு.. அது சந்தேகமே இல்லாமல் தற்கொலை தான் ஒரு தற்கொலை செய்துகொண்ட ஒருவனுக்கும் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட ஒருவனுக்கும் வித்தியாசத்தை நாங்கள் எளிதில் கண்டு கொள்வோம்.
 தற்கொலை செய்து கொண்டவன் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டிருக்கும். எச்சில் ஒழுகி இருக்கும்  .நாக்கு கடிக்கப்பட்டு இருக்கும் பதட்டத்தில் சிறுநீர் கழித்து இருப்பார்கள். அழுத்தத்தில் கண்கள் பிதுங்கிக் கொண்டு வெளியே வந்திருக்கும். உயிரோடு இருக்கும் போது கழுத்து இறுக்க  பட்டால்.. கழுத்தில் ரத்த ஓட்டம் நின்று நிறம் மாறி இருக்கும். ஒருவனை கொலை செய்து விட்டு தூக்கில் மாட்டினால் இந்த symptoms எல்லாம் மிஸ் ஆகி இருக்கும்.
நிச்சயமாக விக்னேஷ் தற்கொலை தான்."

"OK..thankyou டாக்டர் சந்தேகம் னா திரும்ப கூப்பிடறேன்..." என்று சொல்லிவிட்டு வைத்தார் கருப்பு.

"கண்ணன் அந்த கொலை செய்ய பட்ட ஆதியின் செல்போன் கேட்டு இருந்தேனே..என்ன ஆச்சு.."

"சார் இதோ இருக்கு " என்று கண்ணன் பவ்வியமாக எடுத்து கொடுக்க...

"திருச்சிக்கு அந்த மீனாட்சி அட்ரஸுக்கு விசாரிக்க ஆள் அனுப்பி வைங்க...மீனாட்சியை பார்த்ததும் எனக்கு தகவல் கொடுங்க.."

என்று சொல்லிவிட்டு அந்த செல்போனை நோண்ட தொடங்கினார்.

அதில் fb பக்கத்தை எடுத்து.. ஆதியின் பதிவுகளை புரட்டிக் கொண்டே வந்தவர் ஒரு இடம் வந்ததும் ஆச்சர்யமாக நிறுத்திவிட்டு.

"கண்ணன் இதை பாருங்க.." என்றார்..

கண்ணனும் குனிந்து பார்த்து "அட" என்றார்....




குழப்பம் அடுத்த பாகத்தில் முற்றும். 🗡


        🗡        🗡        🗡        🗡     🗡

அத்தியாயம் 4

"இங்க பாருங்க கண்ணன் " என்று இன்ஸ்பெக்டர் கருப்பு காட்டிய fb பக்கத்தில் அந்த கடையின் முகப்பு படம் தெரிந்தது.

"ரவி மொபைல்ஸ்...சேல்ஸ் அண்ட் சர்விஸ்..."

"அட இது நாம அன்னைக்கு அட்ரஸ் விசாரித்த கடை ஆச்சே சார்.."

"ஆமாம் அப்படியே இதை பாருங்க..."

அவர் காட்டிய அடுத்த படத்தில் அந்த மொபைல் கடையில் அன்றைக்கு பார்த்த ஒல்லி பையன் ஆதியுடன் ஒன்றாக தோல் மேல் கை போட்டு புகை படம் எடுத்து இருந்தான்.

"எனக்குள் இப்ப ஒரு பிக்சர் கிடைத்து இருக்கு..திரும்பவும் பார்த்தசாரதி தெருவுக்கு கொஞ்சம் போயிட்டு வரலாம் வாங்க கண்ணன் "

        ✳       ✳        ✳        ✳        ✳

பார்த்தசாரதி தெருவில் புல்லட்டை நிறுத்திவிட்டு அந்த கடையை நெருங்கியபோது அழுக்கு சட்டை சாயம் போன ஜீன்ஸ் அணிந்த தலை கலைந்த அவன் "என்ன சார் வேணும் "என்றான்.

"நீதாண்டா வேணும்..." என்று சொன்ன கருப்பு..

"ஸ்வேதா சர்விஸ் க்கு கொடுத்திருக்கிற  மொபைல் வேணும்..." என்றார்.

"என்ன சார் சொல்றிங்க ஒன்னும் புரில... " என்று முழிக்க

"உனக்கு ஆதி தெரியுமா...கொலை செய்ய பட்டான்...இல்ல உன் நண்பன்..ஆதி..."

"இ....இல்லை சார்.. கடைக்கு வருவாரு கஸ்டமர் அவ்ளோ தான் நண்பன் எல்லாம் இல்லை சார்..." என்ற போது கருப்பு எதிர்பாராதவிதமாக அவன் கன்னத்தில் ஓங்கி அடித்தார்.

" இங்க பாரு உன் பேச்சிலேயே கிரிமினல் வாசம் அடிக்குது ஸ்டேஷனுக்கு வா உன்ன அங்க வச்சு விசாரிக்க வேண்டி இருக்கு "

அவனை கொத்தாக தூக்கி சென்றார்.

        ✳       ✳        ✳        ✳        ✳

சம்பவம் நடந்த லைப்ரரி இருந்த தெருவில் குடி இருப்பவர் தான் பஜன் லால் சேட்.
அன்று காலையிலேயே வீட்டு வாசலில் போலீஸ் வந்து நிற்பதை ஆச்சர்யமாக பார்த்து விட்டு....

"அரெய் இன்னாதூ இது...நம்பல் வீட் மின்னாடி  போலீஸ் வந்து நிக்றான் " என்று மனைவியை பார்த்து பய குரலில் கேட்டார்.

"பயப்படாதீங்க சேட்டு உங்க கிட்ட சின்ன உதவி தேவை வேற ஒன்னும் இல்ல " என்றவாறே புல்லட்டை ஸ்டான்ட் போட்டு இறங்கி வந்தார் கருப்பு.

        ✳       ✳        ✳        ✳        ✳

தெரசா. தங்கும் விடுதியின் ரூம் நம்பர் 18 தட்ட பட திறந்த ஸ்வேதா...
"வா..வாங்க சார்..." என்றாள்.

உள்ளே சென்று அமர்ந்த கருப்பும் கண்ணனும்..ஸ்வேதா வை நேராக பார்த்தார்கள்..

"அன்னைக்கு உங்க கிட்ட எழுத வாங்கின பேனாவை கொடுக்காமலே போயிட்டேன் சாரி..." என்று தனது பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்து கொடுத்தார்.

"மிஸ் ஸ்வேதா...அப்படியே தற்கொலை கான காரணத்தையும்....அப்புறம் கூடவே..ஆதியை நிஜமா கொன்னது யாருனும் கண்டு பிடிச்சாச்சி னும் சொல்லிட்டு போலாம்னு வந்தோம் " என்று கருப்பு சொல்ல...

ஸ்வேதா துல்லியமாக அதிர்ந்தாள்...

"சா...சார்..என்ன சொல்றிங்க...நிஜமான கொலைகாரனா...அ...அப்போ.. ஆதியை.. விக்னேஷ் கொல்லல யா..?"

"இல்லை...நிச்சயம் இல்லை...காரணம் ஆதியை கொன்னது நீங்க..."

என்றார் கருப்பு அமைதியாக.

(ஸ்வேதாவை சரியாக சந்தேக பட்ட வாசகர்கள் கை தட்டி கொள்ளலாம்..)

"சார்...நீ...நீங்க..என்ன....சொ....சொல்ல "

"இருங்க விளக்கமா சொல்றேன் எல்லாம் சரியா இருக்கா பாருங்க.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க போன் ரிப்பேர் ஆகிவிட்டது. அதை சரி செய்ய நீங்கள் உங்கள் தெருவில் இருக்கும் ரவி மொபைல் கடையில் கொடுக்கிறீர்கள். அங்கே உங்கள் மெமரி கார்டில் நீங்கள் இதற்கு முன்வைத்து இருந்த இப்போது டெலிட் செய்து விட்டு சில பிரத்தியேக காட்சிகளை ரவி.. ரெகவர் சாப்ட்வேர் உதவி மூலம் எடுக்கிறான்... அதில் பாத்ரூமில் எடுக்க பட்ட அந்தரங்க செல்பி அடக்கம்.
உங்கள் காதலருக்கு அனுப்ப நீங்கள் எடுத்து இருக்கலாம்.
அந்த போட்டோவை வைத்து ரவியும் அவன் நண்பனும் உங்களை மிரட்டுகிறார்கள். ஆதி உங்களை ஆசைக்கு அடி பனியவைக்க.. பழைய லைப்ரரி அழைக்கிறார்.. அங்கே தான் நீங்கள் அவனை குத்தி கொன்றீர்கள்..
பக்கா ஆதாரம் இருக்கு என் கிட்ட "

ஸ்வேதா இமைக்காமல் பார்த்து கொண்டு இருக்க கருப்பு தொடர்ந்தார்.

"போட்டோ மேட்டர் எல்லாம் ரவி ஒத்துகிட்டான்.. அப்புறம்..அன்னைக்கு உங்க கிட்ட பேனா வாங்கி போனது எதற்கு னு நினைக்கிறீங்க...? கத்தியில் 2 வெவேறு கைரேகைகள் இருப்பதாய்.. பாரான்ஸிக் ஆட்கள் கிட்ட இருந்து ரிப்போர்ட் வந்தது எங்களுக்கு. இன்னோரு கைரேகை யாருடையது என்று தேடிக்கொண்டிருந்தேன். உங்களிடம் இருந்து வாங்கிய பேனாவில் இருந்து எடுத்த கைரேகை அந்தக் கத்தியின் இருந்த இன்னொரு ரேகையுடன் கனகச்சிதமாக ஒத்துப் போய் விட்டது.
உங்கள் காலேஜ் தெருவில்.. ஒரு சேட் அடகு கடை இருக்கு பாத்து இருக்கீங்களா.. அங்க ஒரு cc tv கேமரா இருக்கு... தெருவை பார்த்த படி...அதில்
நீங்க லைப்ரரி சென்றது.. வந்தது...போனது...எல்லாமே தெளிவா பதிவாகி.. இருக்கு..நான் சொல்லி கொண்டு வருவது சரியாய் தானே இருக்கு...."

என்று சொல்வதை நிறுத்திவிட்டு கருப்பு அண்ணாந்து பார்க்க.. ஸ்வேதா இடிந்து..போனவளாய்...மடங்கி அழுதாள்.... எப்படி அருகே இருந்து பார்த்த மாதிரி இவ்ளோ தெளிவா சொல்ல முடியும் என்று கருப்பை பார்த்து பிரமித்து இருந்தாள்.

"சார் நான் எல்லாத்தையும் சொலிடறேன் சார்...சொலிடறேன்..." என்று அழுதாள்..

"என்னோடைய மொபைல் ல நான் எப்போவோ டெலிட் பண்ணிட்ட ஒரு போட்டோவை வைத்து ரவியும் ஆதியும் என்னை மிரட்டினார்கள். கொஞ்ச நாளாக அவர்கள் தொல்லை என்னால் தாங்க முடியவில்லை செத்துப் போய் விடலாம் போலிருந்தது.  நீங்க சொன்ன மாதிரி ஆதி என்னை தனியாக பழைய லைப்ரரிக்கு வர சொன்னான். நான் அவன் ஆசைக்கு இணங்குவது போல் நடித்து கையில் கொண்டு சென்று இருந்த கத்தியை அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் வயிற்றில் இறக்கி அவனை கொலை செய்தேன்.
பிறகு செய்வது அறியாது தவித்தேன்.
ரூம் மெட் மீனாட்சி இடம் இருந்து அவசரம் என்று சொல்லி  கடன் வாங்கி வந்திருந்த போனில் இருந்து விக்னேஷை அழைத்தேன்.
அவன் ஊரை தாண்டி வெளியே போய் இருந்தான்.
அவன் வரும் வரை அங்கேயே காத்திருந்தேன் அவன் வந்து பார்த்துவிட்டு பயந்தான் பதட்ட பட்டான்..பிறகு..ஒன்றை சொன்னான்.

"நீ தப்பி போ...நான் பினத்தை மறைத்து விட்டு வருகிறேன் என்றான். "
நான் அந்த இடத்தை விட்டு வந்த பின்..எனக்கு மீண்டும் இந்த நம்பரில் அழைத்தான்..
"பிணத்தை மறைகிறது சாதாரண விஷயம் இல்லை..நிச்சயம் நீ மாட்டிக்குவ..அதனால எனக்கு வேர வழி தெரில... "

என்று சொல்லி வைத்தவன்..அந்த லைவ் நாடகத்தை அரங்கேற்றினான். எனக்கு மீண்டும் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டான்.
நான் கதறினேன்..

"போலீஸ் உன்னை பிடித்து போய் விசாரித்தால் எப்படியும் உண்மை தெரிந்து போகும்.. நானே சரண் அடைந்து விடுகிறேன் என்று அழுதேன். அவன் இல்லை..என் மேல் சத்தியம் நம் காதல் மேல் சத்தியம் நீ யாரிடமும் இதை சொல்ல கூடாது. போலீஸ் என்னை பிடித்து எந்த உண்மையும் வாங்க முடியாது..ஆனால் உன்னை நிச்சயம் போலீஸ் தேடி வரும் அப்படி வரும் போது..அவர்களை திசை திருப்ப நான் இப்போ சொல்லி தர போவதை அப்படியே சொல்லு... னு சொல்லி நான் முன்ன சொன்ன மாதிரி ஆதி என்னிடம் தவறாக பேசியது இல்லை னு சொல்ல சொன்னான் சார்.. என்னை போலீஸ் பிடிக்கவே முடியாது....போலீஸ் வரும் போது.. நான் இந்த உலகில் இருக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு தற்கொலை செய்து கொண்டான் சார்....." என்று அழுதாள்..

குத்த பட்ட கத்தியை துடைத்து..லைவில் புதிதாக குத்துவது போல நடித்தாலும் சரியாக துடைக்க படாத ரத்த கரை வீடியோவில் கத்தியில் துரு போல தெரிந்தது தான்..இந்த கேஸில் முதல் சந்தேக விதை என்பதை நினைத்து கொண்டார் கருப்பு.

"எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை வேணாம் சார்..என்னை கைது பண்ணுங்க ப்ளீஸ்..தூக்குல போடுங்க..."

என்று ஸ்வேதா கதறினாள்..

கருப்பு பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு..

" உங்க காதலுக்காக செய்யாத ஒரு கொலையை பொறுப்பேற்று விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் உன் காதலன். அவன் நோக்கமே நீ நல்லா இருக்கனும் என்பது தான்..நிச்சயம் இது மிக கடினமான சாத்தியம் தான். இந்த வடுவை மறக்க உனக்கு நீண்ட நாள் தேவை படும். ஆனால ஆதி கொல்ல பட வேண்டியவனே... உலகை பொறுத்த வரை ஆதியின் கொலைக்கு விக்னேஷ் காரணமாய் இருக்கலாம்..ஆனால என்னை பொறுத்தவரை. விக்னேஷ் தற்கொலைக்கு தான் ஆதி காரணம்.
இங்கே குற்றவாளி ஆதி தான். ஒரு வகையில் பார்க்க போனால் நீயும் தான்..ஏம்மா எங்க காலத்துல எல்லாம் ஆபாச செல்பி அனுப்பி தானா லவ் பண்ணோம்.? நம்ம அடிபடை கலாச்சாரத்தை மீறாமல் இருந்தாவே இன்னைக்கு பல க்ரைம் குறைந்து போகும்.

போலீசை பொறுத்தவரை இது ஒரு ஓப்பன் அண்ட் ஷட் கேஸ்...
ஒரு கொலை ஒரு தற்கொலை..அதற்கு பின்னணியில் ஒரு காதல்..அவ்வளவு தான் தெரியும். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் விக்னேஷின் தியாகம் யாருக்கும் தெரிய போவது இல்லை. நீங்கள் உங்களை தேற்றி கொள்ள முயற்சி செய்யுங்கள். நாங்கள் வருகிறோம்.." என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

இருவரும் கனத்த இதயத்தோடு வெளியே வந்தார்கள்.

வெளியே வந்த கருப்பு போனை எடுத்து..

"உண்மையான குற்றவாளி ஸ்வேதா தான்..விளக்கமா நேரில் சொல்றேன்..எதிர் பாராத டவிஸ்ட்..எதிர்பாராத காதல் தியாகம்...."

என்று தகவல் அளித்து கொண்டு இருந்தார்.....

கமிஷனருக்கு இல்லை.. தான்..எதையும் மறைக்காமல்..ஷேர் செய்யும் ஆசை மனைவி வெண்ணிலாவுக்கு.

முற்றும்.

     🗡        🗡        🗡        🗡        🗡

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"