கிருமி (குறுங்கதை )

கிருமி
(குறுங்கதை )

ரா.பிரபு.

இன்றைலிருந்து சுமார் 20..30 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் ....

அந்த வீடு கொஞ்சம் பசை உள்ள இடமாக தெரிந்தது. குறிப்பாக சுத்தம் கண்ணில் அறைவதாக இருந்தது. இருக்காதா பின்னே ஆச்சாரமான ஆத்து காரர் வீடு ஆச்சே.
தாழ்வாரத்தில் ஆடும் ஊஞ்சலில் நியூட்டன் விதிக்கு உட்பட்டு ஊசலாடி கொண்டே பேசி கொண்டு இருந்தார் வேங்கடநாதன்.

"திரும்பவும் கேட்கறேன் சுப்பையா... உனக்கு காசு கொடுக்கிறது பத்தி எனக்கு பிரச்னை இல்லை ஆனா நீ சொல்ற காரணம் தான் கொஞ்சம் முட்டாள் தனமா இருக்கு.." சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த வெற்றிலை பெட்டியை எடுத்து திறந்து இரண்டு இலைகளை அசை போட்டார்.

சுப்பையா என்று அழைக்க பட்டவன் வீட்டிற்கு வெளியே கை கட்டி நின்று இருந்தான் . கக்கத்தில் அடடக்க பட்ட துண்டு அவன் பணிவை சொன்னது. உரம் ஏறிய அவன் உடல் அவன் உழைப்பை சொன்னது.
கருங்கல் போன்ற  அவன் கருப்பு வண்ணம் அவன் 'வர்ணத்தை' சொன்னது.
தயங்கிய வார்த்தைகளை கொண்டு பேசினான்.
"அய்யா பையன் டாக்டருக்கு படிக்கணும் னு ஆசை படறான்.... அதான்......."

பட்டாசு பெட்டியில் தீ குச்சி விழுந்தது போல சிரித்தார் வேங்கடம்.
"அடேய் சுப்பு நான் கூட என்னமோ னு நினைச்சேன் டாக்டர் படிப்பே படிக்க வைக்க போறியா... ஹா ஹா.
உன் பசங்கள எல்லாம் படிக்க வச்சி என்ன பண்ண போறேன் னு நினைச்சேன் நீ டாக்டர் கனவுல வேற இருக்க போல பேஸ் பேஸ் என்றார்.  " பேச்சில் வெளிப்பட்டது நக்கலா இல்லை தெனாவட்டா.. இல்லை ஆச்சர்யமா என்று சரியாக சொல்ல முடிய வில்லை.

"சரி சரி நம்ம வய காட்டுல பெரும் பாடு பட்டு உழைச்சி இருக்க அதுக்காக தரேன் "
என்றவர் அந்த பண பெட்டியை கொண்டு வர செய்து அதில் சில கட்டுகளை எடுத்து சுப்பையா பக்கம் நீட்டினார்.
அவன் கையை நீட்ட படு எச்சரிக்கையாக அவன் கைகளில் தொட்டு விடாமல் உயரத்தில் இருந்து பணத்தை நழுவ விட்டார். தொட்டால் தீட்டு ஒட்டி கொள்ளும் அபாயத்தை தவிர்த்தார். அவன் பெற்று கொண்டு நன்றி சொல்லி விட்டு நகர்ந்ததும் . "ஏ ஜானு அந்த இடத்தை ஜலம் விட்டு அலம்பி விடு டி.. தீட்டாயிட போகுது " என்றார்.

✴️ ✴️ ✴️

இன்று..

மருந்துகள் வாசனை சூழ்..அரசு ஆஸ்பிதிரி அது

அந்த வார்டில் வேங்கடம் தனித்து விட பட்டு இருந்தார். கடைசி 3 நாளாய் எந்த நர்ஸும் தன்னை தொட்டு ட்ரீட்மெண்ட் செய்யாததை கவனித்து இருந்தார். மற்ற நோயாளிகளை தொடும் நரஸ்கள் தனக்கு ஊசி கூட போடாததை கவனித்தார்.
எதற்காக தான் தீண்ட படாமல் ஒதுக்க பட்டு இருக்கோம் என்பதை அறியாமல் பெரும் மன வேதனையில் இருந்தார். 3 நாள் பொறுத்தவர் இனி பொறுக்க முடியாதவராய் காரணத்தை அறிய விரும்பி டாக்டர் இருக்கும் கேபின் பக்கம் போய் நேரே கேட்டு விடலாம் என்று கேபினை நெருங்கும் போது தான் அந்த உரையாடல் காதில் விழுந்தது. நர்ஸ்களை கடிந்து கொண்டு இருந்த ஒரு டாக்டர் குரல் அது.

"ஏம்மா அந்த பேஷன்ட் வேங்கடம் கோரானா தொற்று இருக்கா னு இன்னும் காண்பார்ம் கூட பண்ணல அதுக்குள்ள அவரை எல்லோரும் தீண்டாம ஒதுக்கி இருக்கீங்கலாமே. அறிவு இருக்கா உங்களுக்கு நீங்க எல்லாம் எதுக்கு நர்ஸ் வேலைக்கு வந்தீங்க .ஒரு வேளை அவருக்கு கோரானா இருப்பது உறுதி என்றாலும் கூட அவருக்கு கடைசி வரைக்கும் தைரியம் கொடுக்கிறது தான் உங்க வேலை. இப்படி தீண்டாம ஒதுக்கி வைக்கிறது இல்ல."

கொஞ்சம் அதிர்ச்சியாக தனது பெட்டில் வந்து படுத்து கொண்டார் வேங்கடம்.
அரை மணி நேரம் கழித்து ரவுண்ட்ஸ் வந்த போது டாக்டருக்கு நன்றி சொல்லலாம் என்று வாய் எடுத்த போது டாக்டர் முந்தி கொண்டு பேசினார்.

"என்ன ஆச்சர்யம் மிஸ்டர் வேங்கடம்.. உங்கள பற்றி இப்ப தான் பார்த்தேன் நீங்க நம்ப ஊரு காரர். எல்லாத்துக்கும் மேல இன்னைக்கு நான் டாக்டர் ஆகி இருக்கிறது காரனமே நீங்க தான். நான் நம்ம ஊரு சுப்பையா மகன்..உங்க கிட்ட தான் அப்பா வேலை பாத்தார்.. என்னை டாக்டர்கு படிக்க வைக்க நீங்க தான் காசு கொடுத்ததா அப்பா சொல்லி இருக்கார். ஒன்னும் கவலை படாதீங்க... என்ன இருந்தாலும் உங்களை குணம் பண்ண வேண்டியது என் பொறுப்பு."
சொல்லி விட்டு அவர் கைகளை ஆறுதலாக தீண்டினார் டாக்டர்.
அந்த தீண்டல் வேங்கடனுக்கு வாழ்வின் மிக சிறந்த ஸ்பரிசமாக பட்டது.அவருக்குள் பெரும் வரலாற்று மாறுதல் எதையோ அந்த ஸ்பரிசம் உண்டாக்கி கொண்டு இருந்தது.

பல நேரங்களில் மனிதனுக்குள் இருக்கும் மனிதத்தை வெளியே கொண்டு வர கிருமிகள் தேவை படுகின்றன.



Comments

  1. நல்ல கதை.உங்களுடைய அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.நானும் அறிவியலை காதலிக்கிறேன்

    ReplyDelete
  2. இதயத்தை தீண்டி விட்டது.

    ReplyDelete
  3. பதிவு மிக அருமை, நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"