முடிவில் ஆரம்பம்





 "முடிவில் ஆரம்பம் "


(அறிவியல் சிறுகதை )


#ரா_பிரபு


"மார்ஸ்மெல்லோ ELT 11 " என விசித்திர பெயரிட பட்ட அந்த விண்கலம் செவ்வாயின் சிவந்த மண்ணை முத்தமிட்ட போது அதை பூமியின் 2083 ஆம் ஆண்டுக்கான தொழில் நுட்பம் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தது. 

விண்கலத்தில் இருந்த ஐவர் குழுவை 'வெல்கம் டூ மார்ஸ் 'சொல்லி நியான் போர்டுகள் வரவேற்றன. மிஷன் தலைவர் 'கால் எட்வர்ட்' சிரித்த முகத்துடன் மார்ஸின் சிவந்த மண்ணில் காலை வைத்தார். 

செவ்வாய் செல்லும் முதல் மனிதர்கள் இவர்கள் அல்ல .சொல்ல போனால் ஆய்வு ரீதியாக செல்ல போகும் கடைசி மனிதர்கள் இவர்கள். இவர்கள் கொடுக்க போகும் ரிப்போர்ட் இறுதியானது . அந்த ரிப்போர்ட் பூமியின் அந்த பெரும் வரலாற்று நிகழ்வை நடத்த இருக்கிறது. ஒட்டு மொத்த மனிதகுலத்தை மார்ஸ் க்கு குடி மாற்ற போகும் நிகழ்வின் பச்சை கொடி தான் இவர்கள் கொடுக்க போகும் அந்த இறுதி ரிப்போர்ட். 


அடுத்த வந்த சில நாட்களுக்கு  அவர்கள் தொடர்ந்து செவ்வாயை கழுகு பார்வையிட்டார்கள். பூமியின் சில பணக்கார நிறுவனங்கள் செவ்வாயின் பரப்பில் ஆங்காங்கே  நிறுவி இருந்த பிரமாண்ட green house factory களை அவைகள் உற்பத்தி பண்ணும் க்ளோரோ புளோரோ கார்பன் மற்றும் மீத்தேன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடை அதன் தரத்தை பார்வையிடார்கள். அது சூரியனின் கதிர்வீச்சை சிறை பிடித்து செவ்வாயின் வலிமண்டலத்தை பூமி போல் காபி பண்ணனும் முயற்சியை பார்த்து திருப்தி கொண்டார்கள். பூமியின் வளிமண்டலத்தில் அடர்த்தியில் 100 மடங்கு குறைவாக கொண்டது செவ்வாய். அதிக பட்ச முயற்சி செய்தாலும் அதை 7 சதம் உயர்த்த முடியும் என்றே ஒரு 50 ஆண்டுகள் முன் வரை நம்பி வந்தார்கள் ஆனால் இப்போது 60 சதம் வளிமண்டல அடரத்தி உயர்த்த பட்ட செவ்வாய் அவர்களுக்கு திருப்தி அளித்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.


கால் எட்வர்ட் தன் டீமை நோக்கி "

பூமியை வாழ தகுதி அற்றதாக ஆக்கிய அதே 'பச்சை வீட்டு 'விளைவு இன்று செவ்வாயை வாழ தகுதி உள்ளவையாக மாற்றி கொண்டு இருப்பது என்ன ஒரு நகை முரண் இல்ல " என்று சொல்லி புன்னகைத்தார்.


அவர்கள் அடுத்த கட்டமாக மனிதர்கள் குடி இருக்க போகும் பகுதியின் பிரமாண்ட 'டூம்'கள் பொறுத்த பட்ட காலணிகளை பார்வை இட்டு அதிலும் மிக திருப்தி கொண்டார்கள். வளிமண்டலத்தில் இயற்கையாக கிடைத்த கார்பன்டை ஆக்ஸைடை ராட்சத இயந்திரங்கள் ஆக்சிஜனாக மாற்றி டூமுக்குள் அருவி பொழிந்து கொண்டு இருந்தது. "அதாவது பாருங்க நாம இங்க வருவோம் னு தெரிந்து தான் இயற்கை இந்த கிரகத்தின் நாள் ' ஐ 24 மணி நேரமாக பூமி போல் வைத்து இருக்கிறது. என்ன ஒரு 40 நிமிடம் அதிகம் அவ்ளோ தான் அது ஒன்னும் பெரிய மாற்றமாக நமக்கு தெரிய போவது இல்லை. செவ்வாய் க்கு இனி நாம் பூமி என்றே பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். " அந்த குழு லேசாக சிரித்து கொண்டது.


15 நாள் கடந்த பின் ஒரு நாள் இரவு' கால் எட்வார்ட் ' தனது கணினியை உயிர்ப்பித்து தனது இறுதி அறிக்கையை தயார் செய்ய தொடங்கினார் "பூமி வாசிகளே கிளம்ப தயாராக இருங்கள் "


🔷    🔷     🔷


பூமி...


காணும் இடம் எல்லாம் செவ்வாய் செல்லும் ஆயத்ததில் கொஞ்சம் வழக்கத்தை விட சுறுசுறுப்பாக  இருந்தது பூமி. உலக விஞானிகள் முழு நேர வேலையாக ஆயத்த பணிக்கு செலவிட்டு கொண்டு இருந்தார்கள். அரசாங்க அதிகாரிகள் தங்கள் மக்களின் கணக்கு வழக்குகளை சரி செய்து கொண்டு இருந்தது. நாட்டிலில் முக்கிய இடங்களில் பள்ளியில் அந்த குறிப்பிட்ட விண்கல மாதிரிகள் வைக்க பட்டு இருந்தன. அதன் உண்மை வடிவங்கள் அரசாங்க பாதுகாப்பில் மிக பிரமாண்டமாக பல ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் உருவாக்க பட்டு வரிசையாக வைக்க பட்டு இருந்தது. ஒட்டு மொத்த மனிதர்களை செவ்வாய்க்கு 'உலககடத்தும் ' திட்டம் ஒன்றும் சாதாரண விஷயம் இல்லையே. 


"இன்னும் ஒரு வருஷம் கழிச்சி அப்போ பூமி ல யாருமே இருக்க மாட்டார்களா பா " ஆர்வமான குழந்தை ஒன்று சாலையில் பைக்கில் தன் தந்தையிடம் வினவி கொண்டு இருந்தது. எதிரே காம்பவுண்ட் தாண்டி உள்ளே நின்றிருந்த பிரமாண்ட வின் காலத்தை பார்த்து கொண்டே அப்பா பதில் சொல்லி கொண்டு இருந்தார். " இன்னும் 7 மாசத்துக்கு அதோ அந்த பெரிய வண்டி தான் நம்ம வீடு 7 மாத பயணத்துக்கு அப்புறம் நாம நம்ம புதிய உலகத்துல இருக்கலாம் " 


🔷 🔷 🔷


பூமியின் உச்சி குடுமியான இமாலையா பகுதி..


அந்த  minus 13 டிகிரி சுற்று சூழல் திடீரென வட்ட வடிவில் வெப்பம் கூட தொடங்கியது அந்த வெளிச்ச பந்து பிரமாண்டம் காட்டி சுழன்றது .அது நின்ற போது காண கிடைத்த காட்சியை கண்டு வாய் பிளக்க அங்கே மனிதர்கள் யாரும் இல்லை ஒரே ஒரு பனி சிறுத்தை தலையை உயர்த்தி பார்த்து சுற்று சூழலில் உண்டான அந்த திடீர் மாற்றத்தை கண்டு வியப்பாக கர்ரர்ர்ர் என உறுமி விட்டு இடத்தை காலி செய்தது. அந்த சுழல் வட்டம் நின்ற போது அது ஒரு பிரமாண்ட களம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அதிலிலிருந்த இறங்கிய "அவர்கள் " 13 அடி உயரம் கொண்டவர்களாக இருந்தார்கள்.தலை சுற்றி 360 டிகிரிக்கு 20 ..30 சின்ன சின்ன கண்கள் இருந்தன. அதில் தலைவன் போல இருந்தவன் தனது 4 ஆவது கையில் எதையோ எடுத்து பணியில் நட்டு வைக்க அது திடீரென உயரம் கொண்டு வான் முட்டி நிற்கும் ஒரு கொடி கம்பம் போல நீண்டு கொண்டது அதன் உச்சி மண்டையின் பம்பர அமைப்பு மின்னி ஒரு நீல நிற ஒளியை பரவ விட்டு ஸ்கேன் செய்ய அது அப்படியே பயணித்து பயணித்து மொத்த பூமியை ஒரு வட்டம் அடித்து மீண்டும் கருவியை அடைந்து பீப் என்றது. அந்த 180 பற்கள் கொண்ட உயிரினங்கள் ஒரு மாதிரி சந்தோஷ சப்தம் இட்டு கூச்சல் இட்ட ஓலம் அந்த அத்துவான பணி காற்றில் கரைந்து போனது.


🔷 🔷 🔷


"பூமி வாசிகளே கிளம்ப தயாராக இருங்கள் நமது புதிய உலகம் தயாராக உள்ளது .நாம் வாழ அனைத்து தகுதியும் இதற்கு உண்டு என்பதை எனது இறுதி ஆய்வு மூலம் நாம் தெரிந்து கொண்டோம். நிச்சயம் நமக்கான மிக சிறந்த வீடாக இது இருக்கும்....... " செவ்வாயின் ஒரு காஸ்ட்லி குடிசையின் உள்ளே கால் எட்வர்ட் 

தனது அறிக்கையை பூமிக்கு அனுப்பி கொண்டு இருக்க..............


🔷 🔷 🔷  


அந்த விசித்திர ராட்சதர்கள் இமாலையாவின் சிகரத்தில் இருந்து அவர்கள் வந்த கிரகமான அந்த (நமக்கு )பெயர் தெரியாத ஊருக்கு தனது அட்வான்ஸ் கருவி கொண்டு எதையோ தகவல் அனுப்பி கொண்டு இருந்தன. அதை மொழி பெயர்தால் இப்படி இருந்தது...


" கிளம்ப தயாராக இருங்கள் நமது புதிய உலகம் தயாராக உள்ளது .நாம் வாழ அனைத்து தகுதியும் இதற்கு உண்டு என்பதை நான் உறுதி செய்து விட்டேன். ஒரே ஒரு பயோ பாம் போதும் இன்னும் சில மணிநேரங்களில் இந்த பூமி கிரகத்தின் அனைத்து உயிரினங்களும் கரைந்து கார்பன்டை ஆக்சைடாக மாறி போகும் நீங்கள் கிளம்பி வாருங்கள் நாங்கள் தயார் செய்து வைக்கிறோம்.... நிச்சயம் நமக்கான மிக சிறந்த வீடாக இது இருக்கும். 



முற்றும் °


Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"