"ஆவியின் புகை படம் "


"ஆவியின் புகைபடம் "
(சிறுகதை )

ரா.பிரபு

"என்ன சார் பயமா இருக்கா ?"

விக்டர் முகத்தில் சிறு புன்னகை உடன் கேட்டான்..
சதீஸ் அவனை பதிலுக்கு சிரிப்பு இல்லாமல் பார்த்தான்.
ஊரை விட்டு ஆள் நடமாட்டம் விட்டு பல கிலோமீட்டர் தள்ளி.. இந்த இரவு நேரத்தில் .. இந்த சுடுகாட்டு பகுதியில்.. தனிமையில்... இருப்பவனை பார்த்து கேக்கிற கேள்வியா இது..

"இன்னும் எவ்ளோ தூரம் போகணும் விக்டர் " ??

குளிர் காலம் என்பதால் பணி மூட்டம் "ஹா " என ஊதிய கண்ணாடி போல மங்கலாக காட்சியை மறைத்து இருந்தது.. அந்த காட்சிக்கு ஊடாக மெலிதாக ஒரு காம்பவுண்ட் சுவர் தெரிந்தது.

"அதான் சார் சுடுகாடு காம்பவுண்ட் . கேட் இப்ப மூடி இருக்கும் . நாம சுவர் ஏறி தான் போகணும் " 

சதீஸ் கொஞ்சம் பதட்டமானவன் போல தெரிந்தான் . அதை சரி செய்ய தான்  ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தது போல் தெரிந்தது அந்த சுடுகாட்டில் அது கொள்ளி வாய் பிசாசு போல ஒற்றை கண்னை சிமிட்டி சிகப்பாக எரிந்தது..

" அதுங்க எப்ப வரும் ??" 

"சார் நாம ஒன்னும் உயிரோடு இருக்கிறவனை படம் பிடிக்க வரல எப்ப வருவான் னு டைம் க்கு சொல்றதுக்கு ஆவியை படம் பிடிக்க வந்து இருக்கோம் "

"விக்டர் நீ இதுக்கு முன்னாடி எத்தனை ஆவிகளை படம் பிடித்து இருப்ப.. எப்படி இந்த ஆவிகளை படம் பிடிக்கிற ஐடியா வந்தது..."??

"அதுவா சார் " என்று ஆரம்பித்தான் 'மனுஷனுக்கு பயத்துல வேட்டி அவுறுற நேரத்துல பேட்டி கேக்குதே..' என்று நினைத்து கொண்டான்.

"இறந்து போனவங்களை படம் பிடிக்கிறது தான் சார் என் வேலை.. அப்புறம் போலீஸ் ல கூட்டி போவாங்க. ஆக்சிடெண்ட் கேஸு... சூசைடு... மர்டரு.. னு நிறைய பிணத்தை போட்டோ எடுத்து இருக்கேன்.. பல நாள் சாவு நடந்த இடத்துல தங்கி இருக்கேன்.. அப்படி மலைல விழுந்து இறந்த கேஸை போட்டோ எடுக்க போய் நைட் தங்கி இருந்த போது தான் அங்க முதல் முறையா ஆவியை போட்டோ எடுத்தேன்.. அங்க இறந்து போன ஆள் ஆவி. 
அதை அவங்க வீட்டு காரங்களுக்கு பிரிண்ட் போட்டு கொடுத்தேன் காசு ஏதும் வாங்கல.. அந்த வீட்டு ல எல்லோரும் ஆச்சர்யமா பார்த்தாங்க.. அந்த ஆளுடைய மனைவி சந்தோஷமா வாங்கிக்கிட்டா... 
அடடா மக்கள் இதை விரும்புராங்க  னு அதுக்கப்புறம் சாவு நடக்கிற இடத்துல தேடித்தேடி போட்டோ எடுத்தேன். அதை வைத்து நிறைய காசு பண்ணினேன்..
அப்புறம் நிறைய பேர் என்னை தேடி வர ஆரம்பிச்சாங்க . இறந்து போன என் காதலியின் ஆவியை படம்பிடித்து தாருங்கள்.. என்று சிலர் வருவார்கள்.  சிலர் இறந்து போன என் மகனை படம் பிடியுங்கள் என்று வருவார்கள்."

சொல்லி நிறுத்தி விட்டு சதீஷை நிமிர்ந்து பார்த்தான் பின் சொல்ல
 தொடங்கினான்.

 "இது ஒன்றும் சாதாரண விஷயமில்லை சார் ..பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் அப்படி காத்திருந்தாலும் சில நேரம் ஆவிகள் சிக்காமலும் போகும்..
எல்லோருமே தங்களுக்கு தெரிந்தவர்களோ அல்லது சொந்தக்காரர்கள் ஆவியையோ தான் கேட்டு வருவார்கள் ஆனால் நீங்கள் மட்டும்தான் ஏதோ ஒரு ஆவியின் படத்தை பிடித்துக் கொடுங்கள் போதும்  என்று சொன்னிர்கள்..மேலும்...' ஒரு கண்டிஷன் நானும் கூட வந்து பார்ப்பேன் ' என்று  சொன்ன முதல் ஆளும் நீங்கள் தான் . யாரும் ஆவியை படம் பிடிக்க தைரியமாக என்னுடன் வந்ததில்லை. " 

சொல்லி விட்டு விக்டர் தனது கேமராவை உரையிலிருந்து எடுத்து சுத்தப்படுத்த தொடங்கினான்.. 
பேசிக்கொண்டே இருவரும் சுடுகாட்டுச் சுவரை நெருங்கி இருந்தார்கள்..

" விக்டர் இந்த சுடுகாட்டு பேக்ரவுண்ட்ல அப்படியே என்ன ஒரு போட்டோ எடேன் நாளைக்கு fb ல போட்டா லைக் பிச்சிக்கும் . இப்படி சுடுகாட்டு பேக்ரவுண்ட்ல போட்டோ எடுக்கணும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை" என்றான்.

" சார் என்னையும் சேர்த்து போடுங்க ஒரு செல்பி மாதிரி எடுக்கறேன் " என்று சொல்லி விட்டு கேமராவை திருப்பிவைத்து சதீஸ் அருகில் நின்று இருவரையும் புகை படம் எடுத்தான்.
டிஜிட்டல் திரையில் அதை சரி பார்த்தான்.. இருவர் முகமும் சுடுகாடு பின்னணியில் மிரட்டலாக இருந்தது.

சரி வாங்க உள்ள போவோம்..

இருவரும் காம்பவுண்டை தான்டி உள்ளே எட்டி குதித்தார்கள்.. உள்ளே அமானுஷ்யம் அள்ளி தின்றது.. ஆங்காங்கே மௌன படுக்கையாக சமாதிகள் வீற்றிருக்க அதன் மேல் பிணங்கள் மல்லாக்க படுத்து இருப்பது போல ஒரு பிரமை உண்டாகி மறைந்தது விக்டருக்கு. எத்தனை முறை ஆவிகளை படம் பிடித்து இருந்தாலும் இந்த உதறல் மட்டும் போக மாட்டேன் என்கிறது..எப்போ எந்த ஆவி வந்து ஓங்கி அறைந்து ரத்தம் கக்க வைத்து விடுமோ என்ற அச்சம் தவிர்க்க முடியாமல் இருந்தது.. என்னைக்காவது ஆவிகள் கிட்ட வசமா மாட்ட போற விக்டர் என்று உள்ளுணர்வு எச்சரித்து கொண்டே இருக்கும் அது இன்றைக்கு அல்ல என்று சொல்லி சமாதான படுத்தி வைத்தான்.

விக்டர் பாக்கெட்டில் இருந்த சிறு டார்ச்சை எடுத்து ஆன் செய்தான். இருவரும் இருளை கிழித்து கொண்டு சருகுகள் மிதிபட நடந்து கொஞ்சம் உள்ளே சென்றார்கள்...  
எங்கோ மரத்தில் ஏதோ ஒன்று "பட பட" என்று அடிக்க இவன் இதயம் துணைக்கு அப்படியே அடித்தது..

விக்டர் அங்கே இருந்த ஒரு சமாதியின் மேல் தூசியை துடைத்து விட்டு  தனது கேமராவை வைத்து விட்டு ஏதோ சில செட்டிங்குகளை செய்தான்.

" விக்டர் என்ன பண்ற " ?

சார் இது ஆட்டோமேட்டிக் கேமரா ஆவி நடமாட்டம் இருந்தால் தானாகவே படம்பிடிக்கும் ஆவி வரும் வரை நாம் இங்கேயே காத்திருக்க முடியாது அது ஆபத்து. இதை வைத்து விட்டு நாம் காம்பவுண்டுக்கு வெளியே சென்று காத்திருக்கலாம் ஒரு மூன்று அல்லது நான்கு மணி நேரம் கழித்து வந்து எடுத்துப் பார்த்தால் நிச்சயம் ஏதாவது ஒரு ஆவி சிக்கி இருக்கும். " 

தனது கேமராவை செட் செய்துவிட்டு ஒருமுறை சரிபார்த்துவிட்டு பிறகு பரபரவென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் விக்டர்.

"வாங்க சார் வெளியே போயிடலாம்.." இங்கயே நிக்கறது ஆபத்து....

இருவரும் காம்பவுண்டை விட்டு வெளியே வந்தார்கள் ஒரு மரத்துக்கு பின்னால் ஒதுங்கி நின்று கொண்டார்கள் கதை அடிக்கத் தொடங்கினார்கள் சதீஷ் அடுத்த சிகரெட்டை பற்ற வைத்தான்.

"நாளைக்கு ஆவி போட்டோவையும் fb ல போடுவீங்களா சார் "

மேலும் ஐந்து சிகரெட்டுகள் காலியான பின்பு...

" ஓகே வாங்க சார் போலாம் " என்றான்.

இருவரும் மீண்டும் உள்ளே சென்றார்கள் புகை பட கருவியை எடுத்தார்கள் ..சதீஸ் பர பரப்பானான்..

 "எங்க காட்டு என்ன சேவ் ஆகி இருக்கு பாக்கலாம்.."

"சார் நான் நிறைய முறை பார்த்துட்டேன் இந்த ஆவிகள் படம் டிஜிட்டல் திரையில் தெரிவது இல்லை.. போட்டோ டெவலப் பண்ணி கழுவினா தான் தெரியும்."

சதீஸ் முகத்தில் சீட் கிடைக்காத அரசியல் வாதி போல் ஒரு சின்ன ஏமாற்றம் தெரிந்தது..

" சரி நாளைக்கு உன்னுடைய ஸ்டுடியோவிற்கு எத்தனை மணிக்கு நான் வரட்டும் "

" பகலில் வர வேண்டாம் சார் அப்போது சாதாரண கஸ்டமர்கள் வருவார்கள் உங்களைப் போன்ற ஆவிக் கஸ்டமர்கள் எல்லாம் ஆவி டைம் ல தான் வருவாங்க..இரவில் தான் வரவேண்டும் நாளைக்கு இரவு ஒரு 12 மணி போல் வாருங்கள் டெவலப் செய்து வைக்கிறேன் "

இருவரும் புறப்பட்டு செல்ல பின்னனியில் ஏதோ ஒரு ஆந்தை அறுந்த ஸ்ருதியில் கத்தி வழி அனுப்பி வைத்தது .

      ✴             ✴            ✴             ✴

அடுத்த நாள்.
இரவு மணி 12 ஐ நெருங்கி கொண்டு இருந்தது.
விக்டர் தனது ஸ்டுடியோவில் கம்பியுடரில் நேற்றைய சுடுகாட்டு படங்களை ஆராய்ந்து கொண்டு இருந்தான். மொத்தம் நான்கு ஐந்து.. படங்கள் எடுக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொன்றையும் கவனமாக ஆராய்ந்து பெரிதாக்கிப் பார்த்தான்.
ஒன்றில் ஏதோ ஒரு முயல் குட்டி ஓடியதால் கேமரா ஆன் ஆகி இருந்தது.
இன்னொன்றில் ஏதோ ஒரு ஆந்தை தாழ்வாக பறந்து இருந்து ஆன் ஆகி இருந்தது. ச்சை  என்று சலித்து கொண்டான். 
அடுத்ததில் ஒரு மரக் கிளை காய்ந்து போய் விழுந்த போது படம் பிடிக்கப் பட்டிருந்தது. விக்டர் கைகளை பிசைந்து கொண்டான்.
அடுத்த படத்தில் ...அது என்ன அது மர்ம கால்கள்.. அடுத்துடுத்த சீனில் ஒளிரும் கண்கள்.. விக்டர் பரபரப்பு அடைந்தான்.அந்த கோர முகம்.. அதை பெரிது படுத்தி பார்த்ததில் அட ச்சே ஒரு நாய்... 

இன்னைக்கு கஷ்டமருக்கு ஏமாற்றத்தை தான் தர வேண்டுமா விக்டர் சலிப்புடம் அடுத்த படத்துக்கு நகர்ந்தான். 
கஸ்டமர் சதீஸ் உடன் எடுத்து கொண்ட சுடுகாட்டு செல்பி.
அதை திறந்த விக்டர் இதயம் ஒரு வினாடி நின்று துடித்தது.
அதில் படத்தில் இவன் அருகில் சதீஸ் இல்லை... மாறாக வெளிறிய முகதுடன்  கண்கள் பிதுங்கி... ஏதோ பாதி எரிந்த பிணம் போல கொடூர முகம் ஒன்று பதிவு ஆகி இருந்தது.

''எனக்கு ரொம்ப நாளா சுடுகாடு பேக் ரவுண்ட் ல ஒரு படம் எடுக்கணும் னு  ஆசை " சதீஸ் குரல் மனதில் எக்கோ எபெக்டில் எதிர் ஒலித்தது...
அப்போது கடிகாரம் மணி 12 அடிக்க வெளியே... "தட் தட் " 

ஒரு அமானுஷ்ய குரல் ஒலித்தது..

"கதவை திற என் போட்டோ வாங்க வந்து இருக்கேன் "

💀👻💀👻💀👻💀👻💀👻💀👻

Comments

  1. சகோ.....முன்னமே யூகிச்சது என்னென்ன....இவங்க selfi எடுக்கும்போது பக்கத்தில் 3வதா ஒண்ணு நிக்கும் னு.

    ஆனா, end card ல போட்டீங்களே....ஒரு போடு. பிரமாதம் போங்க🤣🤣🤣🤣

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"