சிகப்பு_சிலந்தி




#சிகப்பு_சிலந்தி 🕷️🕷️🕷️

(சஸ்பென்ஸ் சிறுகதை )

#ரா_பிரபு

டாக்டர் முருகேசன் ஆகிய நான்.....
கொட்டாவி விட்டு நேரம் பார்த்த போது ஒரே ஒரு பேஷண்ட் மிச்சம் இருந்தான்.
கசங்கிய சட்டை 3 நாள் தாடி நிச்சயம் பொண்டாட்டி பிரச்னை என புலம்ப வந்து இருப்பான். இங்க வரும் கேஸில் பலதும் அந்த கேஸ் தானே. ச்சை ஒரு மன நல மருத்துவரா இருப்பது எவ்வளவு தலை வலி தெரியுமா.

 "வர சொல்லுமா " என்று பொத்தானை அழுத்தி ஆறாவது நொடியில் அவன் உள்ளே நுழைந்தான்.

"உட்காருங்க " உட்கார்ந்தான்.
"சொல்லுங்க மனைவியால் என்ன பிரச்சனை" என்றேன் . சொல்லிவிட்டு ஷேர்லக் ஹோம்ஸை போல அவனை பார்த்தேன். 'எப்படி கண்டுபிடித்தேன் பார்த்தியா' என்கிற பார்வை அது.

அவன் லேசாக திடுக்கிட்டு பொண்டாட்டியா எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலயே..!  என்று சொல்லி என் மூக்கை அறுத்தான்
கொஞ்சம் சமாளித்து
 "சரி சொல்லுங்க என்ன பிரச்னை" என்றேன்.

அவனை உற்று பார்த்து கவனமாய் அவன் சொல்வதை கேட்பது போல அமர்ந்தேன். இது ஒரு டெக்னீக் அதாவது நோயாளி பேசுவது கவனிக்க படுகிறது என்று அவர்களுக்கு உணர்த்துவது . மனநோயாளிகள் என்று சொல்லிக் கொண்டு வரும் பலர் தங்கள் குறைகளை பிரச்சினைகளை யாரிடமாவது சொல்வதற்கு ஆளை தேடுபவர்கள். அவர்கள் பேச்சை பொறுமையாக உட்கார்ந்து கேட்டால் போதும் இல்லை அப்படி நடித்தால் போதும் அவர்கள் திருப்தியாக உணர்வார்கள்.  அந்த பொறுமைக்கு தான் எங்களுக்கு பீஸ். நாங்கள் உம் கொட்டினால் போதும். எனவே....

"உம் " என்றேன்.

"டாக்டர் கடந்த 5 நாளா இந்த பிரச்னை ..வந்து எப்படி சொல்றது ஒரு பூச்சி... ஆம் ஒரு பூச்சியால் பிரச்னை..."

"ஹெலோ என்னது பூச்சியா.. மிஸ்டர் ..வந்து உங்க பெயர் என்ன ?"

" துரை ...ராஜ துரை... " என்றான் அவன் ஜேம்ஸ் பாண்ட் போல..

"இங்க பாருங்க மிஸ்டர் துரை ஐ எம் ஏ சைக்கியாட்ரிஸ்... நீங்க பூச்சி கடிக்கு மருந்து வாங்க..பக்கத்துல கவர்மெண்ட் ஹாஸ்ப்பிட்டல் இருக்கு "
 என்றேன் கடுப்பாக அவனை கொஞ்சம் ஏறெடுத்து பார்த்தேன் ஒல்லியான ஒட்டிய தேகம்..குழி விழுந்த கன்னம் அவ்வபோது bgm ஆக இருமல் வேறு. இவன் ஏற்கனவே பூச்சி கிட்ட கடி வாங்கினவன் போல தான் இருக்கான். தலை முடி மட்டும் பொருந்தாமல் அடர்த்தியாக கரு கரு என்றிருந்தது.

"சார் நான் சொல்றத முழுசா கேட்டுட்டு பேசுங்க சார்" என்று அவன் இடைமறித்தான்.

"சைக்யாட்ரிஸ்ட் னா நோயாளிகள் பேசுவதை காது கொடுத்து கேட்கணும் சார் அந்த பொறுமைக்கு தான் உங்களுக்கு காசு " என்றான்.

"இத பாருடா " என நினைத்து கொண்டேன்.

"சரி சொல்லுங்க " என்றேன் கண்ணாடியை அணிந்து கொண்டேன். (மீண்டும் கவனிக்கும் டெக்னீக்.)

"சார்.. வந்து எப்படி சொல்றதுன்னு தெரியல சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க இதுவரைக்கும் ரெண்டு பேர் கிட்ட சொல்லி இருக்கேன் அவங்களும் ஆரம்பத்துல நம்பல பட்..... "

"பீடிகை போதும் விஷயத்துக்கு வாங்க துரை " என்றேன் எனக்கே சஸ்பென்ஸ் ஏத்திடுவான் போல இருக்கே.

"கடந்த அஞ்சு நாளா இது நடக்குது சார்.  ஒரு பூச்சி என்னை துரத்துது சார். "

"வாட் "

"ஆமாம் சார் என்னை கொல்லாம அது விடாது சார். நான் எங்க போனாலும் அது கூட வருது."

இப்போது அவன் கண்கள் கஞ்சா வாசி போல ஏதோ கனவில் சூன்யமாக பார்க்க தொடங்கியது.

"ஆமாம் சார் என்னை கொல்ல பாக்குது." என்று காதலியிடம் பேசுபவன் போல மெதுவாக முனுமுனுத்தான்.

விதவிதமான இப்படி பட்ட கேஸ்கள் எங்களுக்கு சகஜம் தான் என்றாலும் இது ரொம்ப விசித்திரமாக இருந்தது.நான் சற்று சிரிப்பை அடக்கி கொண்டு

"என்ன நடந்தது னு கொஞ்சம விளக்கமா சொல்லுங்க மிஸ்டர் துரை "என்றேன்.

அவன் அந்த போதை கண்ணில் கதையை தொடர்ந்தான்.

"5 நாளைக்கு முன்னாடி ஒரு நாள் ஷேவ் பண்ணும் போது தான் சார் எல்லாமே தொடங்கிச்சி .. அன்னைக்கு பாத்ரூம் ல ஷேவ் பண்ணிட்டு இருக்கும் போது roof ல இருந்து அது என்னை பாத்துச்சி அப்புறம் மெதுவா கீழ இறங்கி வந்து என் தலைக்கு மேலே நின்னுச்சு. "

"ஒரு நிமிஷம் அது என்ன பூச்சி.."

"சிலந்தி சார் சிலந்தி பூச்சி இருக்கு இல்ல அது..."

"என்ன மிஸ்டர் துரை வீட்ல சிலந்தி இருப்பது ஒரு சாதாரண விஷயம் இதுக்கு யாராவது பயப்படுவங்களா... "

"சார் என்ன நான் புதுசாவா பாக்றேன்..சிலந்தியை... இது வேற சார்.. அந்த சிலந்தி தொடர்ந்து என்னை பின் தொடரும் மர்ம சிலந்தி. சொல்றன் கேளுங்க  அந்த பாத்ரூம் சம்பவத்திற்கு பிறகு நான் வீட்ல டிவி பாக்கும் போது கரெக்ட்டா என் தலை மேல நூல் விட்டு இறங்கி வந்து தலைக்கு 2 அடி உயரத்தில் தொங்கி கொண்டு என்னையே பார்த்து கொண்டு இருக்கும்.  நான் நியூஸ் பேப்பர் படித்து விட்டு தற்செயலா மேல அண்ணாந்து பார்த்தா மேல அது இருக்கும்.என்னையே பார்த்த படி. அவ்வளவு  ஏன் சார்..நான் தூங்கும் போது நைட் பூரா என் தலைக்கு மேலே தொங்கிட்டே இருக்கு சார்...நீங்களே சொல்லுங்க எப்போ பார்தாலும் நம்ம தலை மேல ஒரு சிலந்தி தொங்கினா நமக்கு அது அமானுஷ்யமா இருக்காதா ?? மர்மமா ..பயமா இருக்காதா..? இதனால எனக்கு பெரிய மன உலைச்சலா போச்சு..."

ஒரு வேளை நட்டு கலன்ட கேஸா இருப்பானோ என்று சந்தேகித்த படி
"ஒரு நிமிஷம் மிஸ்டர் துரை... அந்த சிலந்தியை உங்களைத் தவிர உங்கள் வீட்டில் வேறு யாராவது பார்த்திருக்கிறார்களா " என்று கேட்டேன்

" அங்கதான் சார் ஆச்சரியமே பக்கத்தில் வேறு ஆள் இருந்தால் அந்த சிலந்தி என் கண்ணுக்கு தெரிவதில்லை இது நடப்பது நான் தனியாக இருக்கும்போது மட்டும்தான் "

"அப்புறம் சார் இன்னொன்னு..நான் கவனித்த விஷயம்.... வந்து அந்த சிலந்தி என் கிட்ட ஏதோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு சார்.. " என்றவனை பரிதாபமாக பார்த்தேன். சிலந்தி சொல்றது இருக்கட்டும் நீ என்னதான்டா சொல்ல வர ...ஆமாம் உண்மையில் இவனுக்கு என்ன தான் பிரச்னை பேசாமல் உனக்கு ஸ்பைடரோபோபியா னு ஒரு நோய் டா இந்த மாத்திரையை சாப்பிடு னு 4 சத்து மாத்திரை கொடுத்து அனுப்பி விடலாமா..'

"சார் அப்புறம் ரொம்ப பெரிய விசித்திரம் என்னன்னா......"

இப்ப நீ சொன்னதே விசித்திரம் தான் என்று நினைத்துக் கொண்டு
"என்ன சொல்லுங்க" என்றேன்

" அதோடய உருவம் சார்.. நான் இது வரை எங்கேயும் அந்த மாதிரி வடிவில் பார்த்ததே இல்லை. கிட்ட தட்ட நம்ம உள்ளங்கையில் பாதி அளவு இருக்கும் "

"மிஸ்டர் துரை அது ஒன்னும் ஆச்சர்யம் இல்லை trendula னு ஒரு வகை இருக்கு அந்த சைஸ் ல.. சொல்ல போனா பாதி அளவு இல்ல நம்ம உள்ளங்கை அளவு ஏன் அதை விட பெரிதாக கூட இருக்கும் இது அது மாதிரி எதாவதா இருக்கும் " என்றேன்.

"சார் trantula எனக்கு தெரியாதா இந்தியால அது கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை காடுகள் ல தான் இருக்கும்.இப்படி வீட்டு சீலிங் ல நூல் விட்டு கொண்டு  தொங்காது. "  என்றான் 'இரண்டாம் மூக்கு அறுப்பு'

'பய கொஞ்சம் நாலேஜ் உள்ளவனா இருக்கானே...'

இன்னோரு ஆச்சர்யம் இருக்கு நான் சொல்ல வேண்டியது.. இந்த சிலந்தி மேட்டரை எனது நண்பன் ரகு விற்கு மற்றும் விவேக் கிற்கு சொன்னேன். என்ன ஆச்சர்யம் என்றால் இதை கேட்ட நிமிடத்தில் இருந்து அவர்களுக்கும் இந்த சிலந்தி தொல்லை ஆரம்பமாகி விட்டது ஆம் அவர்கள் இருவரையும் கூட இப்போ சிலந்தி துரத்துது..  ஒரே நேரத்தில் ட்ரிபில் ஆக்ஸன்..! ஆச்ரயமா இருக்கு இல்ல.."
நான் இமைக்காமல் கேட்டு கொண்டு இருந்தேன் நிஜமாகவே இப்போது அவன் பேசுவதை  உற்று கேட்டுக்கொண்டு இருந்தேன். காது கொடுத்து கவனித்து கொண்டு இருந்தேன் .அவன் தொடர்ந்தான்...

"ஆச்சர்யமா இல்லைனா இனொன்னு இருக்கு.. நான் அது எப்படி இருக்குன்னு சொன்னா நீங்கள் நிச்சயம் ஆச்சர்ய படுவீங்க...சொல்றன் கேளுங்க..நல்லா ரத்த சிகப்பில் சும்மா ரேடியம் மாதிரி மின்னும் உடல்.. அறை இருட்டில் லைட்டாக ஒளிரும் படி . உடல் சும்மா வெல்வெட்டில் பண்ணிய மாதிரி அவ்வளவு மிருது ..பட்டு மாதிரி.. அப்புறம் அந்த கண்கள் .. ஆரஞ்சு நிற 8 கண்கள். அதை வைத்து தான் என்னை முறைக்கும். அப்புறம் முகத்தில் கொடுக்கு மாதிரி ரெண்டு. அது மட்டும் பிளாக் அண்ட் வைட் கோடு போட்ட டிசைன். மொத்தத்தில் இது நான் டிஸ்கவரியிலும் பாக்காத ஒரு சிலந்தி..  "

அவன் சொல்ல சொல்ல எனக்குள் சின்ன திடுகிடல் நடந்தது...

'அட கடவுளே ...இது...அது இல்ல...!.'

நான் அவசரமாக எழுந்தேன்

"ஒரு நிமிஷம் மிஸ்டர் துரை..."

புத்தக அலமாரி பக்கம் பாய்ந்து அங்கு இருந்த பல 'தலையனை 'களை தள்ளி அந்த புத்தகத்தை எடுத்தேன்.
"A spider In your mind " என்ற தலைப்புக்கு கீழே வட்டத்திற்குள் ஒருவன் சிகப்பாக சொட்டை தலையுடன் வட்ட முகத்துடன் பிரெஞ்சு தாடி வைத்து இருந்தான்.
அதன் அட்டை படத்தில் அவன் படத்தைவிட பிரதானமாக இருந்தது அந்த சிகப்பு சிலந்தி படம்.

"நீங்க அலெக்ஸை சந்திச்சி இருக்கீங்களா " என்றேன் சற்றே பதட்டத்துடன்

"யார் சார் அலெக்ஸ் ?" என்றான் அவன் குழப்பத்துடன்.

"சிகப்பா சொட்டை தலையுடன் வட்ட முகமாக பிரெஞ்சு தாடி வைத்து இருப்பான் அவனை பாத்து இருக்கீங்களா ... இதோ இவன் "

நான் காட்டிய புத்தக அட்டையை குழப்பமாக பார்த்து விட்டு
"யார் சார் அலெக்ஸ் "என்றான் கிளி பிள்ளை.

நான் பெருமூச்சு விட்டு "அலெக்ஸ் உங்களை சந்திச்சி இருக்கான். உன்களை மெஸ்மரைஸ் பண்ணி உங்கள் மனதில் சிலந்தியை விதைத்து இருக்கான். "என்றேன்.

"சார் என்ன சார் சொல்றிங்க ஒன்னும் புரில "
"சொல்றேன் மிஸ்டர் துரை அலெக்ஸ் ஒரு மனோதத்துவ நிபுணன் என்னை போல.. என் நண்பன். ஒரு 15 வருடங்களுக்கு முன் என்னை விட்டு பிரிந்தான். அதற்கு காரணம் இந்த சிகப்பு சிலந்தி. நாங்கள் எங்கள் மனோதத்துவ படிப்பை முடித்தவுடன் அவன் செய்த ஒரு thought prosses experiment மற்றவர் மனதில் கற்பனை விதைப்பது. அதற்கு சிலந்தி தான் மிக எளிமையான வடிவம் என்பது அவன் கருத்து. பின் படி படியா சிலந்திகள் சூழ் உலகில் ஒருவனை நடமாட விடணும்.."

" எண்ணங்களை விதைக்கிறதா.. எதுக்கு சார் அந்த மாதிரி பண்ணனும் "

" ஒரு மெக்கானிக் வேலை கற்றுக் கொள்பவன் தனக்கு கிடைத்த பொருளை எல்லாம் கழட்டி பார்ப்பது இல்லையா இது அந்த மாதிரிதான் வச்சுக்கோங்க
 இதன் மூலம் பிறருக்கு தேவையான உலகத்தை படைக்க முடியும். ஒரு நோயாளி தான் இன்பமாயமான உலகில் வாழ்வதை போல கட்டமைக்க முடியும். ஒரு ஏழை பணக்காரனை போல கற்பனை பண்ண வைக்க முடியும். எண்ணத்தை விதைப்பது மூலம் எதுவும் சாத்தியம்."

"Inception movie ல வர்ற மாதிரியா சார் "

"எஸ் கிட்டத்தட்ட அந்த மாதிரிதான்
மற்றவர் மனதில் ஒரு தனி உலகத்தை விதைக்க முடியும் என்ற கருத்தில் அவன் உறுதியாக இருந்தான்.நாங்கள் அவனை கேலி செய்தோம். அவன் தனது பரிசோதனையை வெற்றி ஆக்க வெறி பிடித்தவன் போல செயல்பட்டான். ஒரு முறை 100 கணக்கான சிலந்திகளை பிடித்து வைத்து அதை ஆராய்ந்து கொண்டு இருந்தான் அவன் படுக்கை எல்லாம் நிஜ சிலந்திகள். ஆனால் அவைகளை அவன் தனது எண்ணத்தில் உருவான கற்பனை என்று நம்பினான். 
பல சிலந்திகளால் கடி பட்டதில் உடல் நலம் பாதித்து. பல நாள் தூக்கம் இன்றி தவித்தான்.. மன நலம் பாதித்து கடைசியில் ஒரு மனோதத்துவ நிபுனனையே மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டிய நிலை. நீண்ட நாள் முன் அவன் தப்பி விட்டான் என்றார்கள்.
அதன்பிறகு அந்த சிகப்பு சிலந்தி மேட்டரை இப்பொழுது நீங்கள் சொல்லி தான் கேள்விப்படுகிறேன் இது அவன் எழுதிய புத்தகம் தான். இதில் இருப்பதை வைத்து பார்த்தால் அவன் சொன்னதைப் போல செய்து இருக்கிறான் முதல் ஆளாக உங்களை தேர்ந்தெடுத்து உங்கள் மனதில் சிலந்தியை விதைத்திருக்கிறான். அவன் கண்ணை பார்த்து 5 நிமிடம் பேசினால் போதும் மனதில் சிலந்தி விதைக்க முடியும் என்பது அவன் கருத்து. இனி போகப்போக சிலந்திகளின் எண்ணிக்கை கூடும். நீங்கள் நிறைய சிலந்திகளை பார்க்க வேண்டி வரலாம் "

"அய்யோ என்ன சொல்றிங்க டாக்டர் இப்ப நான் என்ன பண்றது.."

நான் கொஞ்சம் சிரித்து விட்டு..
" அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை ஒரு வாரம் தொடர்ந்து ட்ரீட்மென்ட் இருக்கு வாருங்கள் உங்கள் மனதில் வேறு இன்சப்ஷன் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் " என்றேன். நாளை திரும்ப வாருங்கள் என்றேன்.
அவன் பீஸை கொடுத்துவிட்டு செல்லும்போது ஏதோ பறிகொடுத்தவன் போல சென்றான்.

நான் கிளினிக்கை மூடி விட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.

               ✳️       ✳️       ✳️       ✳️

வீட்டில் பால்கனியில் கையில் ஸ்காட்ச் உடன் சிந்தனையில் மூழ்கி அமர்ந்து இருந்தேன்.
இது எப்படி சாத்தியம்.. நிஜமாகவே அலெக்ஸ் சொன்னதுபோல கண்ணை பார்த்து பேசுவதன் மூலம் இப்படி மனதில் சிலந்தியை விதைக்க முடியுமா ?

யோசனையுடன் அப்படியே இருக்கையில் மல்லாந்து பார்த்து யோசித்தேன்.

அப்போது..........

மல்லார்ந்து படுத்தவன் மேலே கூரையில் மங்கலாக ஏதோ தெரிந்ததை உற்றுப் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக காட்சி தெளிவாக கொண்டே வந்தது மேலே இருந்து மெதுவாக கீழே இறங்கி வந்தது அடர் சிகப்பாக பட்டு உடலுடன்.........

                ✳️       ✳️       ✳️       ✳️

மிக சரியாக அதே நேரம்....
தனது படுக்கை அருகில் கண்ணாடி முன் நின்று இருந்தான் அவன்.தூங்க தயாராக இருந்தான். தலையில் இருந்த "விக் " ஐ கழட்டினான்.

"ஹ்ம்ம் காலம் என்னை எப்படி  மாற்றி இருக்கு பாத்தியா முருகேஸா" என்று கண்ணாடியை பார்த்து பேசினான். பிறகு "விக் " கழட்டிய சொட்டை தலையை தடவி கொண்டான் அலெக்ஸ்.
"என்னையே உனக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கு உன் வளர்ச்சியும் என் வீழ்ச்சியும்.அன்றைக்கு நான் சிலந்தி எஸ்பிரிமெண்ட் சொன்ன போது எல்லோரும் சிரித்தீர்கள்.நம்பாமல் கேலி செய்தீர்கள். ஆனால் இப்ப நீ நம்பித்தான் ஆகணும். உன் கிளினிக்கே வந்து உன் கண்ணை பார்த்து உன் மனதிற்குள் போதிய அளவு சிலந்தியை விதைத்து விட்டு வந்திருக்கிறேன். இனி நீ நிறைய சிலந்தியை பார்பாய் டாக்டர் முருகேசன். நீண்ட நாள் கழித்து இன்றைக்கு தான் நிம்மதியா தூங்க போறேன் முருகேஸா "  என்றான் குரூரமாக சரிதான் அலெக்ஸ்.

அன்றைய இரவு அவனுக்கு மிகவும் மன நிறைவுடன் கழிந்தது.

முற்றும்..🕷️🕷️








Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"