"கடைசி காஃபி "

"கடைசி காஃபி "

(க்ரைம் சிறுகதை )

ரா.பிரபு

அந்த ஊரின் கடைசி பஸ் அந்த நிறுத்தத்தில் நிறுத்த பட்டதும் சேகர் தயார் ஆனான்.கண்டெக்டருக்கு ஒருவேளை நினைவுத்திறன் அதிகமாக மிக அதிகமாக இருந்திருந்தால் ," என்னையா கடைசி சிங்கிள் ல இந்த பஸ்ல தான் போன ..கீழே கூட  இறங்காமல் திரும்பவும் இதே பஸ்ல வர " என்று ஆச்சர்யமாக கேட்டிருப்பார்.

சேகரை இறக்கி விட்டு ரை ரைட் என்று இருட்டில் சென்று பேருந்து மறைந்த பின் சேகர் ஊரை நோக்கி தன் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினான். வயிறு வேறு நேரம் காலம் தெரியாமல் கப கப என்று பசித்தது. அந்த நேரத்தில் அங்கு தெரிந்த டீ கடை ஒன்றின் ஒன் மேன் ..முதலாளி கம் தொழிலாளி ஒருவன் மூடும் அவசரத்தில் டபராய்களை இன்னைசையுடன் உருட்டி கொண்டு இருந்தான்.

"டீ இருக்கா பா " என்று கேட்டதற்கு
"டீ இல்லப்பா மூடியாச்சி " என்று பதிலுக்கு இவனை போலவே சொன்னான். இவன் குரலை மிமிகரி பண்ணியது போல இருந்தது சேகருக்கு. கடுப்பாய் வந்தது. பேசாம ராணிக்கு பதிலா இன்னைக்கு இந்த டீ கடை காரனை கொன்னுட்டா என்ன..?

இன்னும் சற்று நேரத்தில் தான் ஒரு கொலை செய்யப் போவதை பற்றி இந்த டீக்கடைக்காரன் அறிந்திருந்தால் இப்படி தெனாவட்டாக பேசுவானா என்று நினைத்துக்கொண்டான்.

டீ என்றதும் மனைவி ராணி போட்டு தரும் காபி நினைவில் வந்து போனது..'சும்மா சொல்ல கூடாது ராணி போட்டால் காபி அமிர்தம். ஹ்ம்ம்.என்ன செய்ய...இன்னும் கொஞ்ச நேரத்தில் தான் ராணியை போட போறோமே.
'நாய் செத்து ஒழிந்து போகட்டும். எப்போ பாரு face book வாட்ஸ் அப் னு ஒரே ஆம்பள சகவாசம். அடிச்சி பார்த்தாச்சு.. உதைச்சி பார்த்தாச்சு திருந்தாத ஜென்மம் இருந்து என்ன லாபம்..' சேகர் விறு விறு என நடக்க தொடங்கினான். நீண்ட நாள் வகுத்த திட்டத்தை செயல் படுத்த தயார் ஆனான்.

               🔆     🔆      🔆       🔆

தூரத்தில் தனது வீடு தெரிந்ததும் சேகர் முகத்தை மறைக்கும் அந்தக்  குல்லாயை எடுத்து முகத்தை மூடி கொண்டான். இப்போ மட்டும் ராணி நம்மை பார்த்து விட்டால்.
அட வெளியூர் போறேன் னு சொல்லி மாலை கிளம்பி சென்றவன் இங்க என்ன பண்றான் என்று ஆச்சர்ய பட கூடும்.
காம்பவுண்ட் சுவரை திருடனை போல் எகிறி குதித்த போது சேகருக்கு அந்த சூழலிலும் கொஞ்சம் சிரிப்பாகவும் இருந்தது. சொந்த வீட்டில் இப்படி திருடனை போல குதிக்க வேண்டி இருக்கே. சில்வண்டுகள் தோட்டத்தில் ஸ்ருதி சேராமல் ஸ்ஸ்ஸ்ஸ் என்று அலறி கொண்டு இருந்தது.
சேகர் மெல்ல தோட்டத்தை கடந்தான்.
பின் வாசல் வழியாக மெல்ல உள்ளே நுழைந்தவன் ஹாலில் சோபாவில் ராணி தனக்கு முதுகு காட்டி கொண்டு tv பார்பது தெரிந்தது. கையில் மொபைல் யாருடனோ பேசி கொண்டு இருந்தாள். 'யாராவது புது பாய் பிரண்டா இருக்கும் இவளுக்கு தான் எத்தனை பாய் பிரண்டுங்க இருந்தாலும் பத்தாதே '

சேகர் பாக்கெட்டில் இருந்த கத்தியை மெதுவாக எடுத்த போது அனிச்சையாக ஒரு பதட்டம் தொற்றி கொண்டது. 'திடீரென இப்போ திரும்பி பார்த்தால் எப்படி ரியாக்ட் பண்ணுவாள்.?'

பின்னங்கழுதை பார்த்த போது உடனே அறுத்து விட வேண்டும் என்ற வேகம் வந்தது.
'இதை செய்து விட்டு தப்பி விட முடியுமா ஏதாவது தவறாகி மாட்டி கொண்டால் ? ' கடைசியாக மனம் கொஞ்சம் ஊசல் ஆட்டத்தை தொடங்க பார்த்தது.
'ச்ச ச்ச...நான் ஊருக்கு போனதை பார்த்த 10 கும் மேல சாட்சி இருக்கு. நான் ஊர் ல இல்லாத போது யாரோ நகையை கொள்ளை அடிக்க என் பொண்டாட்டி கழுத்தை அறுத்து விட்டு போனா அதுக்கு  நான் எப்படி காரணம் ஆக முடியும் ?

'அந்த டீ கடை காரன் நீ வந்ததை பார்தானே ? '

'அவனுக்கு நான் யாருனே தெரியாதே..'

'நாளைக்கு போலீஸ் அவன் கிட்ட இவனை பார்த்தியா னு விசாரிச்சா...?'

'அய்யோ இந்த மனம் நம்மை குழப்பி செய்ய வந்ததை செய்ய விடாமல் பண்ணாலும் பண்ணிடும் எனவே........'

சேகர் சற்றும் தாமதிக்காமல் ராணியை நெருங்கினான். தனக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருக்கும் விபரீதத்தை பற்றி அறியாமல் இராணி யாரிமோ பேசிக் கொண்டு இருந்தாள். கிட்ட நெருங்கிய போதுதான் கவனித்தான் அவள் சிரித்துக் கொண்டு இல்லை யாரிடமோ அழுது கொண்டிருந்தாள்.
'பாய் பிரண்டகளில் யாராவது ஏமாற்றி இருப்பார்கள். அவளுக்கு ஆயிரம் கதை.நமக்கு எதுக்கு இப்ப ' என்று நினைத்து கொண்டான்.

அதன் பின் சேகர் ஒரு கணமும் தாமதிக்காமல் வலிமையாக அவள் தலை முடியை பிடித்து அண்ணாத்தினான். அவள் move விளம்பர காரியை போல முதுகை வளைத்து ..அதிர்ந்து சீலிங் பேனை நோக்கிய கணத்தில் வசதியாக தெரிந்த பளிங்கு போன்ற கழுத்தில் அந்த கத்தியை வைத்து ஒரே வெட்டு...

'சதாக்....'

ராணி கழுத்து அறுப்பட்டவளை போல துடித்தாள் என்று சொன்னால் மிக அபத்தமாக இருக்கும்.
அவள் அடங்கும் வரை காத்து இருந்து சேகர் நிதானமாக பீரோவை அடைந்து நகையை சுருட்டி பையில் போட்டான். அவள் காதில் கழுத்தில் இருந்ததை பிய்த்தான். பார்க்க நகை கொள்ளை போல இருக்க தத்ரூபமாக செயல் பட்டான்.

சொந்த வீட்டில் கொலை கொள்ளை செய்வது எவ்வளவு வசதி பாருங்கள்... கையில் உறை அணிய தேவையில்லை கைரேகை பற்றிக் கவலை இல்லை என் வீட்டில் அனைத்து இடத்திலும் எனது கை ரேகை இருப்பது இயற்கைதானே.

நகைகள் அனைத்தையும் எடுத்து பையில் போட்டபின் கிளம்ப வேண்டும் என்று நினைத்தவன் கடைசி கணத்தில் அதைப் பார்த்தான் டீபாய் மேல் ஒரு காபி வைக்கப்பட்டு இருந்தது. ஆவி ஓடி கொண்டு வெப்ப இயக்கவியல் விதி யை அனுசரித்து சூடு ஆறி கொண்டு இருந்தது.

அடடா மனைவியின் கை பக்குவ காபி. கடைசி கடைசியா அவள் கையால் . சூப்பர்.
பசி வேற வயிற்றில் கபடி ஆடி கொண்டு இருப்பதால் சேகருக்கு அந்த அவசரத்திலும் அந்த காபி மிக தேவையாக இருந்தது. எடுத்து முகமூடியில் வாய் பகுதி மட்டும் நீக்கி ஆசை தீர உறிஞ்சினான்.

            🔆     🔆      🔆       🔆

அடுத்த நாள் காலை..கும்பல் சூழ்ந்த அந்த வீட்டில் இன்ஸ்பெக்டர் கையில் அந்த கடிதத்தை வைத்து கொண்டு தலையை சொரிந்து கொண்டு இருந்தார்.

"என்னையா இது ஒண்ணுமே புரில ஒரே கன்பியுசா இருக்கே... லெட்டர் எழுதி வச்சது இவ ஆனா விஷம் குடித்தது அவன்..இதுல அவ கத்தி குத்து வேற வாங்கி இருக்கா என்னையா நடந்தது இங்க...?"

அந்த கடிதத்தில் இப்படி இருந்தது.

"என் கணவர் செய்யும் சந்தேக டார்ச்சர் என்னால் தாங்க முடிய வில்லை. என்னை எதற்கு எடுத்தாலும் யாரிடம் பேசினாலும் சந்தேக பட்டு சந்தேக பட்டு தினம் அடித்து டார்ச்சர் பண்ணுகிறார். அதனால் விஷம் அருந்தி சாக முடிவு செய்து இருக்கிறேன். இன்று நான் சாப்பிட போகும் காபியில் விஷம் கலந்துளேன்.. அம்மாவுக்கு கடைசியாக ஒரு கால் பண்ணிவிட்டு இதோ குடித்து சாக போகிறேன்... ."


முற்றும்☕ ☕ ☕






Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"