குரங்கு_வித்தை (சிறு கதை)


"குரங்கு வித்தை "
(சிறு கதை)

ரா.பிரபு

அந்த குரங்கு மீண்டும் ஒரு முறை துள்ளி பல்டி அடித்தது.
கூட்டம் மீண்டும் ஆர்ப்பரித்தது.
"ராமு அட்றா.. ராமு... " அந்த குரங்காட்டி தொடர்ந்து சொல்லி கொண்டே இருந்தான்.  கரகோஷதால் எந்த வகையிலும் பாதிக்க படாமல் கர்ம யோகி போல அந்த குரங்கு மீண்டும் பல்டியை தொடர்ந்தது.
ஆகாஷ் தனது ஸ்கூல் பேக்கை ஓரமாக வைத்து விட்டு கையை தட்டினான்.

"ஆகாஷ் ! டைம் ஆகுது வா வீட்டுக்கு லேட்டா போனா உங்க அம்மா இதே மாதிரி குரங்காட்டம் ஆடுவா "

ஹரி கண்டிப்பான குரலில் சொன்னதும்
"அப்பா ப்ளீஸ் பா  இன்னும் 5 மினிட்ஸ் ஒன்லி " என்று அவன் சொல்லி அரை மணிநேரம் கழித்து கிளம்பினான்.

வீட்டுக்கு போகும் வழியில் அவன் குரங்கை போல தாவி தாவி செல்ல முயல்வதை கவனித்தான் ஹரி.

          ✴          ✴            ✴            ✴

"என்னங்க இவனை கொஞ்சம் வந்து பாருங்களேன் "

பிரிய மனைவி பிரியா வின் குரல் கேட்டு ஹாலுக்கு வந்த ஹரி கஷ்ட பட்டு சிரிப்பை அடக்கினான்
"என்னடி இவன் குரங்கு மாதிரி பல்டி அடிச்சிட்டு இருக்கான் "

" காலைல இருந்து இதான் பண்ணிட்டு இருக்கான் ... உங்க கூட ஏதோ குரங்கு வித்தை பார்தானாமே குழந்தைக்கு கண்ட கண்டதை எல்லாம் காட்ட வேண்டியது..... "

'அட பாவி என்னை ஏன் டா மாட்டி விட்ட' என்ற பார்வை பார்த்தான் ஹரி.
பின்
"ஆதி வந்துட்டானா டீ " என்றான்.
"இல்லைங்க தம்பி இன்னும் வரல ஏதோ பிளட் டொனேஷன் கேம்ப் க்கு போறேன் அண்ணி னு சொல்லிட்டு போனாரு " என்றாள்.

அன்று இரவு தூங்கும் போது  " அப்பா என்னை குரங்கா மாத்த முடியுமா பா எனக்கு குரங்கா மாறனும் " என்றான்.

முட்டாள் மாதிரி உளராம தூங்கு போ என்று ஹரி அவனை தூங்க வைத்தான். மனதில் குரங்கு கவலை கொஞ்சம் ஒட்டி கொண்டது.
'இது என்ன விதமான நோய் தெரிலையே '

        ✴          ✴            ✴            ✴

அடுத்த நாள் வரும் வழியில் அந்த குரங்கை தேடி பார்த்து கிடைக்காமல் முகத்தை தொங்க போட்டு கொண்டு வந்தான் ஆகாஷ்.
அன்றைக்கு மாலை அவன் டீச்சர் இடம் இருந்து ஒரு போன் வந்தது.
" என்ன உங்க பயனுக்கு என்ன ஆச்சு பெரியவன் ஆகி என்ன ஆக போறேன்னு கேட்டா குரங்கு ஆக போறேன்னு சொல்றான் "

ஹரி கோபம் தலைக்கு ஏரியவனாக அவன் அறைக்குள் நுழைந்து போது நோட்டில் எதையோ மும்மரமாக செய்து கொண்டிருந்தான் ஆகாஷ்.. நெருங்கி போய் பார்த்த ஹரி அதிர்ந்தான் நோட் பூரா குரங்கு படத்தை கத்தரித்து ஒட்டி கொண்டு இருந்தான்.
அப்போது தான் நிமிர்ந்து அறை சுவர்களை பார்த்தான் ஹரி அறை சுவர் எங்கும் குரங்கு படங்கள்.

        ✴          ✴            ✴            ✴

அடுத்த நாள் பள்ளி விடுமுறை நாள். ஆகாஷ் திடீரென காணாமல் போனான். நீண்ட நேரம் தேடிய பின் அவனை மரத்தின் மேல் இருந்து கண்டெடுத்தார்கள்.
"அப்பா நானும் குரங்கு ஆகணும்" என்று தொடர்ந்து சொல்லி கொண்டே இருந்தான்

        ✴          ✴            ✴            ✴

அதன் பின் அவனுக்கு குரங்கு பைத்தியம் முத்தி போனது... தனது நண்பர்களிடம் குரங்கை பற்றியே பேசி கொண்டு இருந்தான். அவன் மனதில் குரங்கு ஒரு மிக பெரிய நாயகனாக இடம் பிடித்து விட்டு இருந்தது ..

" என்னங்க  அவன் ஒழுங்கா மதிக்கறது உங்க தம்பி ஆதி ஒருத்தர் க்கு தான் அவனை அவர் கிட்ட விடுங்க அவர் பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைப்பார் "
என்று பிரியா சொன்னது சரி என்று பட்டது. இந்த குரங்கு பிரச்னையை பற்றி விரிவாக தம்பி ஆதியிடம் சொன்னான் ஹரி.

அடுத்த நாள் ஒரு தீம் பார்க் அழைத்து சென்ற ஆதி நீண்ட விளையாட்டுக்கு பின் மெதுவாக பேச்சு கொடுத்தான்.
"ஆகாஷ் ஒன்னு சொல்றேன் கேட்கரியா..."

"என்ன சித்தப்பா "

" இந்த குரங்கு வித்தை பார்த்த ...உனக்கு ரொம்ப பிடிச்சது ...எல்லாம்.. ஓகே.. ஆனா அது நீ நினைக்கிற அளவு பெரிய கெத்து எல்லாம் இல்ல இன்னும் சிங்கம் புலி எல்லாம் இருக்கு.. நீ ஏன் குரங்கை பெருசா நினைக்கிற  வித்தையை பார்த்தோமா நமக்கு அது மகிழ்ச்சியா இருந்துச்சா.. அதுக்கு கை தட்டினோமா காசு கொடுத்தோமா அதோட அதை மறந்துடனும் அதை ஏன் மனசுல சுமந்துட்டு திரியிர... நீ படிக்கிற பையன் இப்படி பண்ணா எல்லோரும் உன்ன முட்டாள் னு சொல்வாங்க...  உன் அறிவை பயன் படுத்தி கொஞ்சம் யோசித்து பாரு... அதுவே பாவம் சோத்துக்கு பிச்சை எடுக்க வித்தை காட்டுது "  என்றான்

ஆகாஷ் கொஞ்சம் யோசித்து விட்டு 
" என்னை மாதிரியே எல்லோருக்கும் குரங்கு பிடித்தால் நிறைய காசு குரங்குக்கு கிடைக்கும் அப்புறம் அது பெரிய பணக்காரன் ஆகிடும் சித்தப்பா " என்றான்.

"போடா குரங்கு பைத்தியம் வா வீட்டுக்கு போலாம் "

       ✴          ✴            ✴            ✴

அடுத்த நாள் "அந்த குரங்கு எங்க இருக்கு தேடி கொடுங்க பா நான் அது கூட செல்பி எடுக்கணும்" என்று அழுது அடம் பிடித்து செம அடி வாங்கி கொண்டான் ஆகாஷ்.
அன்றைக்கு மதியம் மீண்டும் காணாமல் போனான். முன்பு பார்த்த மரத்தில் கூட அவன் இல்லை.
ஒரு வழியாக தெருவில் நீண்ட தூரம் விசாரித்து அந்த கடையை அடைந்தார்கள் ஹரியும் ஆதியும்.

 உள்ளே சென்று பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்..
அது ஒரு பச்சை குத்தும் இடம் இவன் கையில் குரங்கு உருவத்தை பச்சை குத்த முதலில் பேணாவால் வரைந்து கொண்டிருந்தான் ஒருவன். பாய்ந்து அவனை தடுத்து
"அவன் தான் குழந்தை உங்களுக்கு அறிவு எங்க போச்சி " என்று காட்டமாக கத்தி விட்டு ஆதி அவனை பைக்கில் ஏற்றினான்.

அந்த நேரத்தில் ஆதியின் போன் ஒலிக்க...

"ஓகே மச்சி இதோ உடனே வரேன்.. அண்ணா இவனை கூட்டிட்டு போங்க நான் இதோ வரேன் " என்று வேகமாக கிளம்பினான்.

      ✴          ✴            ✴            ✴

அன்றைக்கு இரவு நீண்ட நேரம் ஆகாஷ் சாப்பிட அடம் பிடித்து கொண்டு இருந்த போது உள்ளே வந்த ஆதியை பார்த்து அதிர்ந்தான் ஹரி..
"என்னடா இது சட்டை எல்லாம் ரத்தம் "

"அதை விடுங்க ஒன்னும் பெரிய காயம் இல்ல எல்லாம் பக்கது ஏரியா பசங்க ... அதான் போன வாட்டி பிரச்னை பண்னாங்க இல்ல அவங்க தான்...நான் தான் 'புதியதளபதி நிர்மல் ராஜ் 'இன் தீவிர ரசிகன் னு தெரியும் இல்ல வேணும்னே என் முன்னாடியே எங்க தலைவரை தப்பா பேசினா விடுவேனா .
அவங்க அந்த எதிரி நடிகன் ஜீவன்குமார் ரசிகர்கள்.
கடந்த முறை பால் அபிஷேகம் பண்ணதுக்கே காண்ட் ஆணானுங்க .
 இந்த முறை ரத்ததுல அபிஷேகம் பண்ணி அசத்த போறோம்.. அதான் அதுக்குன்னு ரசிகர்கள் பிளட் டொனேஷன் வச்சி சேர்த்துட்டு வரோம்.. இந்த வாட்டி எங்க தலைவர் பிறந்த நாள் வருது... சும்மா ஓட விட போறோம் பாருங்க... " என்றான்.

புதியதளபதி நிர்மல் ராஜ் கடந்த 5 ஆண்டில் மிக வேகமாக வளர்ந்து உச்ச நட்சத்திரம் அந்தஸ்தை பெற்ற நடிகன். இன்றைய யூத் ஐகான்.  அவன் பட ரிலீஸ் க்கு பால் அபிஷேகம் பண்ணுவது முதல் படம் வெளியாகாமல் போனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவு வெறி தனமான ரசிகர்களை சம்பாதித்து இருந்தான் நிர்மல் ராஜ்.
ஒரு ஆடியோ ரிலீஸ் என்றால் ஆயிர கணக்கானவர்கள் தங்கள் வேலையை விட்டு விட்டு வருவார்கள் அவனை பார்க்க. ரசிகர்கள் பலரின் விருப்பம் விரைவில் அவர் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆகி மக்கள் துயரை துடைத்தெறிய வேண்டும் என்பது தான்.

"என்ன சொல்றான் குரங்கு பய்யன். சாப்பிடறானா இல்லையா " .சொல்லி கொண்டே ரத்த கரை பட்ட சட்டையை கழட்டிய போது நெஞ்சில் பச்சை குத்தி இருந்த நிர்மல் ராஜ் படம் பளிச்சென தெரிந்தது.

அப்போது..அழுது கொண்டிருந்த ஆகாஷ்..திடீரென நிறுத்தாமல் சிரிக்க தொடங்கினான். பின் வேகமாக ஓடி அவசர அவசரமாக சப்பாத்தியை சாப்பிட தொடங்கினான்.

"என்னடா ஆச்சி திடீர்னு உனக்கு " கேட்ட ஆதியை பார்த்து நிதானமாக சொன்னான் ஆகாஷ்..

"நீயும் என்னை மாதிரி தானே சித்தப்பா ! உண்ண எண்டர்டெய்ன பண்ணி மகிழ்வித்தவனுக்கு ரசித்தோமா.. கைதட்டினோமா...காசு கொடுத்தோமானு இல்லாம அவனை மனசுல தூக்கி சுமகிற அவன் உருவத்தை பச்சை குத்தி வச்சி இருக்க அவனுக்காக சண்டை போடற... நீயும் என்னை மாதிரி தான். என்ன ஒன்னு என் குரங்கு பெயர் ராமு உன் குரங்கு பெயர் நிர்மல் ராஜ் அவ்ளோ தான் "

அதன் பின் ஆதிக்கு சப்பாத்தி செறிக்க வில்லை.

-முற்றும் -

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"