"செர்னோபில் பயங்கரம்"



"செர்னோபில் பயங்கரம்"

(உலகின் மிக கொடூரமான விபத்து)

அறிவியல் காதலன் 
-ரா.பிரபு-

''அறிவியல் ''-
இது சரியாக கையாண்டால் அள்ளி தரும் அரசன் .
 தவறாக கையாண்டால் அழித்தொழிக்கும் அரக்கன்.
அறிவியல் ஒரு சக்தி இது நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல .இதை நல்லது கெட்டதாக நிர்ணயிப்பது இதை கையாளுபவன் கையில் உள்ளது.
அப்படி மிக தவறாக அஜாக்ரதையாக கையாண்டு மிக பெரிய அடியை மனிதன் வாங்கி கட்டி கொண்ட ஒரு சம்பவம் தான் செர்னோபில் அணு உலை விபத்து.

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று ரஷ்யாவின் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. உலகை திடுக்கிட செய்த மாபெரும் அழிவை ஏற்படுத்திய அந்த  விபத்து ...ரஷ்ய கம்யூனிச ஆட்சியையே வீழ்த்திய ஒன்று.
விபத்தின் கோர தாண்டவத்தை நேரில் கண்டவர்களை கதி கலங்க செய்த கொடூர விபத்து அது.
உலக அளவில் அணுவெளியீட்டு நிகழ்வில் 7 வது நிலையை அடைந்த ஒரே விபத்து அது.
உலக வரலாற்றில் இது வரை ஏற்பட்டுள்ள மாபெரும் விபத்துகளை டாப் டென் பட்டியட்டிலிட்டால்... செர்னோபில் க்கு அதில் முக்கிய இடம் உள்ளது.
இன்று வரை தனது பாதிப்புகளை தொடர்ந்து கொண்டிருக்கும் சக்திவாய்ந்த விபத்து அது.

அணு கதிர் வீச்சின் கோர தாண்டவத்தை மக்களுக்கு ரத்தமும் சதையுமாக காட்டிய அந்த விபத்து ஏற்பட்டது முழுக்க முழுக்க மனித அஜாக்ரதையால் தான்.(குளிர்விக்கும் சாதனம் சரியாக வேலை செய்ய வில்லை என்று கொஞ்ச நாள் சப்பை கட்டு கட்டியது அரசு)
 'நியக்ளியர் ரியாக்டர் ' எனும் பெரும் பூதத்தின்  சக்தியை குறைத்து மதிப்பிட்டு விட்டது தான் அங்கே நடந்த முதன்மையான தவறு.
அன்று இரவு அங்கே நடந்தது என்ன ?ஏன் அந்த அணு உலை வெடித்தது?
வெடித்த பின் அதன் விளைவு என்னவாக இருந்தது?
வாருங்கள் அன்றைக்கு இரவை கொஞ்சம் நெருக்கமாக சென்று பார்க்கலாம்.

செர்னோபில் இன் அணுஉலைகள் இருந்த இடம் அது.
மொத்தம் 4 அணுஉலைகள் இருந்தன ஒவொன்றும் 1000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்டவை . அதில் அந்த குறியிட்ட 4 ஆவது அணுஉலை மிக சமீபமாக அமைக்க பட்டு இருந்தது. அணு உலையில் பணியாற்றி கொண்டிருந்த பணியாளர்களுக்கு அந்த நிமிடம் வரை எப்பவும் போல அது ஒரு சாதாரண இரவு ஷிபிட்.

உலையில் இருந்து கொஞ்சம் தள்ளி அமைந்திருந்த கண்ட்ரோல் ரூம் இல் அந்த மூவர் இப்போதைக்கு குறிப்பிட தகுந்தவர்கள். அதில் முதலாமவர் வயதான ஷிபிட் ஃபோர்மேன் அவர்தான் அங்கு தலைமை . அடுத்தவர்
சீனியர் கண்ட்ரோல் இன்ஜினீர் . ரியாக்டர் ஏற்படுத்தும் அபரிமிதமான சக்தியை கட்டுப்படுத்தும் வல்லுநர். மூன்றாமவர் டெபுடி சீப் இன்ஜினீர்.
மூவருமே இன்னும் சில நிமிடத்தில் ஒரு வரலாற்று பிழையை செய்ய போகிறார்கள்.

கொஞ்சம் அதிருப்தியில் இருந்த டெபுடி இன்ஜினீரை பார்த்தார்  கண்ட்ரோல் இன்ஜினீர் ,

"என்ன செய்வது ..சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாரே" என்றார் கடுப்புடன்.

"இன்னோரு முறை சொல்லி பார்கலாம் எதற்கும்"

அவர்கள் பேசி கொண்டு மேலும் ஒரு முறை போர்மேன் ஐ நெருங்கி மீண்டும் அதை சொன்னார்கள்

"சார் மன்னிக்கணும் குறைந்தது 600 மெகா வாட் சக்தியாவது இருக்கணும் நாம பரிசோதனை பன்றதுக்கு ஆனா இப்போ வெறும் 200 மெகா வாட் பவர்ல இருக்கும் போது செக்கிங் .என்பது சரியான முறை அல்லவே"

அவர்கள் அன்றிரவு செய்து கொண்டிருந்தது என்ன தெரியுமா? பரிசோதனை(safety test ).அதாவது அவசர காலத்தில் பவர் இழப்பின்  போது டீசல் ஜெனரேட்டர்கள் ஆன் ஆகி கூலிங் பம்புகளை  இயக்கும் வரை டர்பைன் ஜெனரேட்டர் அந்த கூலிங் பம்புகளை இயக்கும் அளவு சக்தி கொண்டவையா என்பதை தான் அவர்கள் பரிசோதனை செய்து பார்த்து கொண்டிருந்தார்கள்.
இந்த சோதனைக்கு ரியாக்டர் தனது பவர் இல் 25 சதமாவது இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆய்வின் போது தனது திறனில் 1 சததிற்கும் கீழே அது சென்று இருந்தது.

அந்த தலைமை அதிகாரி நிமிர்ந்து பார்த்து சொன்னார்.

"பாரா மீட்டர்கள் பற்றி எனக்கு சொல்லி தாராதீர்கள் தலைமை அதிகாரியாக பாரா மீட்டர் என்ன என்பதையே நான் மாற்ற நிர்ணயிக்க முடியும்"

அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து அந்த உலையை சூடேற்றி வேடிக்கை பார்த்தார்கள் . உள்ளே குளிர்விக்கும் தண்ணீர் சப்ளை குறைந்தது பற்றியும் கவலை கொள்ள வில்லை. தண்ணீரை கொதிக்க வைத்து ஆவியாக்க வெப்பத்தை உண்டு பண்ணும் அந்த ரியாக்டர் தனக்குள் அளப்பரிய வெப்பதையும் அழுத்தத்தையும் சேர்த்து கொண்டே வந்தது.

பூதத்தை அடக்கி பார்க்க ஆசை பட்டவர்கள் மந்திர கோலையும் தூர எறிந்தது அவர்கள் செய்த மிக பெரிய தவறு. இங்கே மந்திர கோல் என்று நான் சொன்னது கண்ட்ரோல் ராடுகளை. இவைகள் தான் அணு உலையின் ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் ரெண்டுமே. அந்த கண்ட்ரோல் ராடு களையும் அவர்கள் உள்ளே செலுத்தாமல் வெளியே எடுத்தது விட்டார்கள்.
கண்ட்ரோல் ராட் என்றால் என்ன ? ரியாக்டரின் தத்துவம் என்ன ? டர்பைன் ஜெனரேட்டர்??

பொறுங்கள்...
இப்போது மணி 1.18 am அணுஉலை வெடிக்க இன்னும் 5 நிமிடம் உள்ளது. வாருங்கள் அதற்குள் ஒரு பொதுவான  அணுஉலை என்றால் என்ன அதன் இயங்கு தத்துவம் என்ன என்பதை சுருக்கமாக பார்த்து விட்டு மீண்டும் செர்னோபில் வந்து விடலாம்.

ஒரு பவர் பிளான்ட் இல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அமைப்பின் பெயர் தான் ஜெனரேட்டர்.
மின் உற்பத்தி நடக்க ஜெனரேட்டர் சுழல வேண்டும்.
அந்த ஜெனரேட்டரை சுழற்ற தான் அதனுடன் டர்பைன் என்ற அமைப்பு இணைக்க பட்டு இருக்கும்.
அந்த டர்பைன் எப்படி சுற்றும்?
அதில் வேகமாக நீராவியை பீச்சி அடித்தால்  அந்த விசையில் தாக்க பட்டு அது சுற்றும்.
அந்த நீராவி எப்படி உற்பத்தி ஆகும் ?
 நீரை சூடாக்கினால் ஆகும் . அந்த நீரை சூடாக்க தான் அந்த நியூக்ளியர் ரியாக்டர் .
அதாவது ரியாக்டரில் உண்டாகும் வெப்பத்தால் நீராவி உண்டாகும் அந்த நீராவியை டர்பைனில் பீய்ச்சி டர்பைனை வேகமாக சுழற்றினால் அதனுடன் இணைக்க பட்ட ஜெனரேட்டர் சுழன்று மின் உற்பத்தி நடக்கும்.

ஒரு ரியாக்டர் ,ஒரு எக்ஸ்சேஞ்ர் ஒரு டர்பைன் , ஒரு ஜெனரேட்டர் கொண்ட மொத்த அமைப்பு தான் ஒரு பவர் பிளாண்ட்.

இதில் அந்த நியூக்ளியர் ரியாக்டர் எப்படி அவ்வளவு வெப்பத்தை தருகிறது? அணு கரு பிளவு மூலமாக .
அணு கரு பிளவென்றால் என்ன ? அது எப்படி நடக்கிறது ?
சொல்கிறேன்..

ஒரு கனமான தனிமமாகிய யுரேனியம் 235 ஐ எடுத்து கொண்டு அதை நியூட்ரான் கொண்டு தாக்கினால் அது யுரேனியம் 236 ஆக மாறுகிறது. இந்த U236 இது ஒரு நிலைத்தன்மை அற்ற யூரேனியத்தின் ஐசோடோப். எனவே நீண்ட நேரம் நிலைத்து இருக்காமல் பேரியம் மற்றும் க்ரிப்ட்டான் அணுவாக மாறுகிறது .அப்படி மாறும் போது எக்க சக்க ஆற்றலை வெளியிடுகிறது. கூடவே 3 பிரீ நியூட்ரான்களையும் வெளியிடுகிறது.

அந்த மூன்று நியுட்ரான்ங்கள் மேலும் வேறு U 235 அணுவுடன் மோதி முன்பு போலவே நிறைய ஆற்றலும் 3 ஃபிரி நியுட்ரானையும் உண்டு பண்ணுகிறது.
அந்த நியூட்ரான்ங்கள் மீண்டும்.............
மேலே இரண்டு வரிகள் டிட்டோ .

இப்படி தொடர்ந்து நடக்கும் நிகழ்விற்கு பெயர்தான் செயின் ரியாகஷன். இதை கண்ட்ரோல் பண்ண தான் கண்ட்ரோல் ராடு. இது கேடியம் மற்றும் போரான் பொருட்களால் செய்ய பட்டு இருக்கும் .இது ரியாக்டரில் உள்செலுத்த படும் போது நியுட்ரானை உறிஞ்சி செயின் ரியாக்சனை கட்டுக்குள் கொண்டு வரும்..
இப்படி ரியாக்டரில் உண்டான வெப்பம் எக்ஸ்சேஞ்சரில் நீருக்கு கடத்த பட்டு டர்பைன் ஜெனரேட்டர் சுழற்ற பட்டு மின் உற்பத்தி நடக்கிறது.

போதும்...

5 நிமிடம் முடிந்து விட்டது இப்போ மீண்டும் செர்னோபில்......

செர்னோபிலில்.... பரிசோதனையில்.....
டர்பைன் ஜெனரேட்டர் திறனை பரிசோதிக்கும் நேரத்தில் ரியாக்டரின் செயல்பாட்டில் குறுக்கீடு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு கருவிகளை வேண்டும் என்றே அணைத்து வைத்திருந்தார்கள். சோதனை தொடங்கிய போது 25 சதம் திறன் இருக்க வேண்டிய ரியாக்டர் மிக குறைந்த திறன் உடன் இருந்தது .சோதனை தொடங்கிய 30 செகண்டில் எதிர் பாராமல் ஏற்பட்ட பவர் சர்ஜ் ஒன்றால் ரியாக்டரின் செயின் ரியாக்சனை கட்டுப்படுத்தும் கருவிகள் செயலிழந்தன.

அங்கே சோதனையே.. அவசர காலத்தில் ஓடி கூலிங் பம்புகளை இயக்கும் தானியங்கி ஜெனரேட்டர் 30 வினாடியில் இயங்கி பின் 40..45 வினாடிகளில் முழு வேகம் பிடித்து பம்புகளை இயக்குகிறதே அந்த இடைப்பட்ட நேர இடைவெளியை டர்பைனின் ஜெனரேட்டர்கள் (பவர் இல்லாத போது ஏற்கனவே செயல் பட்ட பழைய விசையை கொண்டு) நிரப்ப முடியுமா என்று தான். ஏற்கனவே இந்த சோதனையை 2 முறை செய்து அவர்கள் தோல்வியை தழுவி இருந்தார்கள். இம்முறை அணுஉலையை புதிய முறையில் மேம்படுத்தி இருந்தார்கள் என்பதால் மீண்டும் இதை சோதித்தார்கள்.

ஆனால்...

இம்முறை நடந்தது தான் கடந்ததை விட மிக மோசம். ரியாக்டர் சுத்தமாக கட்டுப்பாடு இழந்து தனது செயின் ரியாக்சனை தொடர்ந்து கொண்டே இருந்தது. விளைவாக அதன் core வெப்பமயமாகி அதன் எரி பொருளை தாங்கி நிற்கும் குழாய்களை சப்தமாக வெடித்தது. உள்ளே இருந்த எரி பொருட்கள் தன்னீருடன் இனைந்து வெப்பத்தால் பெரும் நீராவியாக மாறியது.

அதிகாலை 1.23 ..

அனுஉலை தனது அதீத வெப்பம் மற்றும் அழுத்ததை தாங்க முடியாமல்
முதல் வெடிப்பை நிகழ்த்தியது. சில வினாடிகள் கழித்து இன்னும் பிரம்மாண்டமாய் இரண்டாவது வெடிப்பும் நடந்தது. அணு உலையின் 1000 டன் மேற் கூரை பெயர்த்து கொண்டு போனது. 2000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் பாதிக்க பட்டு ரியாக்டரை போர்த்தி இருந்த க்ராபைட் லேயர் தீ பற்றி எரிய தொடங்கியது.(அந்த தீ பின்னால் 9 நாட்கள் தொடர்ந்து எரிந்தது )

மந்திர பிடிக்குள் சிக்கி இருந்த பிசாசு தப்பி போவதை போல இவ்வளவு நாளாக கடும் பாதுகாப்பில் வைக்க பட்டு இருந்த 20 வகையான கதிரியக்க பொருட்கள் காற்றில் சுதந்திரமாக கரைந்து சென்று பரவியது. சுற்று வட்டாரத்தில் காற்றில் மண்ணில் நீரில் ஆசை தீர கலந்தது.

கண்ட்ரோல் ரூமில் இருந்தவர்கள் உலை பகுதிக்கு ஓடி வந்து பார்த்த போது அங்கே அந்த பயங்கரத்தை பார்த்தார்கள் .தன்னுடன் பணியாற்றிய பணியாளர்கள் இப்போது தனக்கே அடையாளம் தெரியாமல் குரலை வைத்து தான்  அடையாளம் காணும் அளவு முகங்கள் வெப்பத்தில் வெந்து கருகி போய் துடித்து கொண்டு  இருந்தார்கள். அணு உலையின் கூரை பிய்தெரிய  பட்டு இரவு வானின் நட்சத்திரங்கள் தெரிந்தது.

விபத்து நடந்த போது ஏற்பட்ட வெடிப்பில் 30 பேர் இறந்தார்கள் . ஆனா இது எல்லாம் சுனாமி க்கு முன் கடல் உள்வாங்கும் போது சில சில்லறை மீன்கள் சாவதற்கு சமம் .
நிஜ மான சுனாமி பாதிப்பு அது கரையில் வந்து அடிக்கும் போது தான் அது போல ..கதிர்வீச்சின் பாதிப்பு அது பரவும் போது தான் .
அதன் விபரீத விளைவுகள் தெரிய வருவது அப்போது தான்.

விபத்து நடந்த சில மணி நேரத்தில் இதை சாதாரண தீ விபத்து போல நினைத்து தீ அணைப்பு படை ஒன்று ஹெலிகாப்டரில் வந்து நீரை பீச்சியது.
அப்போது....
நீர் அனைபதற்கு பதிலாக ரியாக்ட் ஆகி நிலைமை இன்னும் மோசமானதை கண்டு தீ அணைப்பு படை மிரண்டது. இது சாதாரண தீ விபத்து அல்ல என்பதை புரிந்து கொண்டது.

 ஆனால் புரிந்து கொண்ட  போது காலம் கடந்து விட்டிருந்தது. அணைக்க வந்த அந்த முதல் குழு அங்கேயே இறக்க நேரிட்டது.
 அவர்கள் ஊற்றிய தண்ணீரில் கதிரியக்கம் கலந்து அங்கிருந்த டினிப்பர் நதிகளில் கலந்து சோவியத் நாடுகளை தாண்டி ஐரோப்பாவில் உள்ள சுவீடன் வரை பரவி இன்னும் நிலைமையை மோசமாக்கியது.

முதலில் நடந்தது பெரிய விபத்து அல்ல அது ஒரு சாதாரண விபத்து தான் என்பதை போல அரசாங்கம் நடந்து கொண்டது ஆனால் ஏப்ரல் 27-ல் அதாவது விபத்து நடந்த அடுத்த நாள் பிரிப்யாட் நகரில் வசித்த 50,000-க்கும் மேற்பட்ட மக்களை அரசு அப்புற படுத்தியது. எனினும், விபத்துபற்றி முழுமையாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வில்லை. அதற்குள் அவர்கள் உடலில் கதிரியக்கம் போதிய அளவு தாக்கி இருந்தது.

ஏப்ரல் 28 அன்று சுவீடனை சார்ந்த கண்காணிப்பு அமைப்புகள் இதை கவனித்து விட்டு கேள்விகள் எழுப்பின .
இதற்கு மேலும் முழு பூசனியை மறைக்க முடியாது என்பதை உணர்ந்த அரசு விபத்து நடந்ததை ஒத்து கொண்டது.

இனி பாதிப்படைந்த பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறுவதை தவிர செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்த அரசு விபத்து நடந்த 36 மணி நேரத்தில் இந்த வெளியேற்றலை தொடங்கியது . விபத்து பகுதியில் இருந்து 30 கி.மி சுற்று வட்டாரத்தில் ஒரு மாதம் கழித்து மொத்தம் 1 லட்சத்தி 16 ஆயிரம் பேரை வெளியேற்றி இருந்தது அரசு. பின்னாளில் இந்த விபத்தால் மொத்தமாக இடப்பெயர்ச்சி செய்ய பட்ட மக்களின் எண்ணிக்கை 135000 பேர் என்று கணக்கெடுப்பு தெரிவித்தது.

இடிந்த உலையை உடனே சமாதி கட்டி மூடினார்கள் அதோடு நில்லாமல் அதை சுற்றி கான்கரீட் வளைவு குடோன் ஒன்று (உள்ளே அமெரிக்க சுதந்திர தேவி சிலை வைக்கும் அளவு பெரிய குடோன் போன்ற அமைப்பு) வைத்து மூடினார்கள் . அரசாங்க சொத்தில் மிக பெரிய பங்கு இந்த விபத்தை சரி செய்யவே செலவாகி போனது. சொல்ல போனால் விபத்திற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் உலகத்தாரால் பாராட்ட பட்டது.
இருந்தும் நியூக்ளியர் பூதத்தின் பிடியில் மக்கள் சிக்குவதை யாராலும் தடுக்க முடிய வில்லை.
அதன் விளைவுகள் வெளிப்பட்ட போது கதிர்வீச்சு ருத்ர தாண்டவம் ஆடி இருப்பது தெரிந்தது.

விபத்து நடந்த அடுத்த சில தினங்களில் அயிராகணகாண மக்கள் இறந்து போனார்கள்.
கதிரியக்க நேரடி பாதிப்புக்கு ஆளானவர்கள் தோல் கழட்டி கொண்டு வந்தது .தலை முடி கையோடு வந்தது .ரத்தமும் சீழும் ஆக பேதி போனார்கள் .கடுமையான சிதர்வதை அனுபவித்து இறந்தார்கள்.

இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை, இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் உருவாகின. காற்று, நீர் ஆகியவற்றில் கதிரியக்க மாசு படிந்து தாவரங்களையும், விலங்குகளையும் பாதித்தது.

பொதுவாகவே அணுஉலைகளை பாதுகாப்பு காரணமாக 25 ஆண்டுகளுக்கு தான் பயன்படுத்துவார்கள் அதன் பின் அதன் ரியாக்டர்களை கொண்டு போய் பூமியில் ஆழமாக குழி தோண்டி கான்க்ரீட் சமாதி கட்டி புதைத்து விடுவார்கள். அப்படி புதைக்க பட்ட உலையை 5000 வருடம் கழித்து திறந்தால் கூட அதே கதிர் வீச்சு பாதிப்பை கொண்டு அழிக்க தயாராக இருக்கும். நியூக்ளியர் பவர் என்பது நிஜமாகவே ஒரு பூதம் தான் அதற்க்கு ஒரு முறை உயிர் கொடுத்துவிட்டால் பிறகு அதை அழிக்க முடியாது கடைசி வரை சிறையில் போட்டு பூதம் வெளியேறாமல் காக்க வேண்டியது தான்.

மனிதன் என்றால் அவனுக்கு ரெண்டு கை ரெண்டு கால் இந்த இடத்தில் கண் இந்த இடத்தில் பல் என்று இருக்கும் மனிதனின் கட்டமைப்பு திட்டத்தையே கதிரியக்கம் செல்களில் ஊடுருவி மாற்ற கூடியது.
விளைவாக அதன் பின் பிறந்த பல குழந்தைகள் இது வரை மனித வரலாற்றில் பார்திராத புதிய வடிவமைபோடு ஏதோ ஏலியன் போல பிறந்தார்கள். அவர்களை நேரில் பார்த்தவர்கள் நெஞ்சில் அணு சக்தியை பற்றிய நீங்காத கிலியை ஏற்படுத்தியது. (உதாரணத்திற்கு சில படங்களை இணைத்து இருக்கிறேன் பாருங்கள்)

 அப்பகுதிகளில் வசித்தவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகள் விவரிக்க இயலாத பாதிப்புகளுடன் பிறக் கிறார்கள். உடனடி மரணம், புற்றுநோய் பாதிப்புகள் என்று லட்சக் கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணு குண்டுகளைவிட அதிக அளவில் அணுக் கதிர்வீச்சு இவ் விபத்தின் மூலம் வெளியேறியுள்ளது.

அடுத்த வரும் 70 ஆண்டுகளில் கேன்சார் ரேட்டிங் 28 % உயர இந்த விபத்து காரணமாக இருக்க போகிறது என்று நிபுணர்கள் கணித்தார்கள்.

(UNSCEAR ) அதாவது United Nations Scientific Committee on the Effects of Atomic Radiation  என்ற அமைப்பு இறுதியாக மொத்தமாக இந்த விபத்தின் கத்திரியக்கத்தால் பாதிக்க பட்டவர்கள் எத்தனை பேர் என்று பதிவு செய்தது . அது கொடுத்த கணக்கு எவ்வளவு தெரியுமா?
மொத்தம் 6 லட்சம் பேர்.

 இப்படி பெலாரஸ், ரஷ்யா, உக்ரைனில் காற்றின் மூலம் பரவிய அணுக்கதிர்கள் பிரான்ஸ் மற்றும் இத்தாலி வரை பரவின.
அதுமட்டும் அல்ல விபத்து நடந்து இதனை ஆண்டுகள் ஆகியும் இன்றும் பிப்ரியாட் மற்றும் செர்னோபில் நகரங்கள் மனிதர்கள் வாழத் தகுதியற்றவையாக இருக்கின்றன.
அதன் பாதிப்பு இன்னும் 20000 வருடத்திற்கு நீடிக்கும் என கிலியேற்றுகிறார்கள்.

கடைசியாக,

ஒரு அறிவியல் காதலனாக ..இந்த கட்டுரையின் ஆரம்ப வரிகளை மீண்டும் நான் நினைவு படுத்த விரும்புகிறேன்.

'அறிவியல்... '
இது சரியாக கையாண்டால் அள்ளி தரும் அரசன் .
 தவறாக கையாண்டால் அழித்தொழிக்கும் அரக்கன்.

அறிவியல் ஒரு சக்தி இது நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல .இதை நல்லது கெட்டதாக நிர்ணயிப்பது இதை கையாளுபவன் கையில் உள்ளது.

அன்பு நண்பன் ரா.பிரபு

Sorce :  https://youtu.be/ITEXGdht3y8

(நல்ல கட்டுரைகள் அனைவரையும் சென்றடைய  மறக்காமல் பகிருங்கள்)



கட்டுரை குறித்த கருத்துக்களுக்கு
வாட்ஸ் அப் என்:  9841069466

Comments

  1. அணு உலையில் மின்சாரம் தயாரிப்பது பற்றி, சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது. அருமை. செர்னோபில் போன்ற இன்னொரு விபத்து நடக்காமல் இருக்க வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"